அரசனின் விருப்பு!

அரசனாக விரும்பா அரசன்!
நற்செய்தி: யோவான் 6:14-15.

நல்வழி:


அப்பமும் மீனும் யார் தருவாரோ,

அவரே அரசன் எனப் பார்க்கும், 

இப்புவி மாந்தர் இயலா நிலையில்,

இறைமகன் செய்ததை எண்ணுங்கள்.

எப்படிப் பிறரை அடக்குவதென்ற,

எகிறும் ஆணவம் கொள்ளாமல்,

ஒப்புமை இல்லா மேன்மையான, 

உதவும் பணியே பண்ணுங்கள்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

எனக்கு மாத்திரம் என்னாமல்!

நல்வழி:


பாத்திரம் நிரம்பி வழிகிறதே.

பசியும் அடங்கித் தெளிகிறதே.

மாத்திரம் எனக்கு என்னாமல்,

மழையாய் ஈவோம், நண்பர்களே.

ஆத்திரத்தோடு பதுக்கிடுவார்,

அழியும்படிக்கே ஒதுக்கிடுவார். 

கூத்தினையொத்த இவ்வாழ்வில்,

கொடையாய் ஆவோம் அன்பர்களே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

பற்றால் வரும் நிறைவு!

பற்றால் வரும் நிறைவு!

நற்செய்தி: யோவான் 6:10-11.  

நல்வழி:  


இருக்கும் உணவு குறைந்திருந்தும்,

யாவரும் உண்ணப் பகிருகையில்,

விருப்பம் தந்த இறை மகனார்,

விருந்தாய் மாற்றிக் காட்டுகிறார்.

திருப்பம் காண விரும்பிடுவார்,

தெய்வப் பற்றால் நிறையுகையில்,

கருப்பை தொடங்கி கடைசி வரை,

காக்கும் இறையே ஊட்டுகிறார்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

சிறு உதவி!

சிறு உதவி!
நற்செய்தி: யோவான் 6:8-9.

நல் வாழ்வு:

மற்றவர் செய்கிற உதவி சிறிதோ?

மமதையில் தாழ்வாய் எண்ணாதீர்.

குற்றமுரைப்போர் கொடுப்பது பெரிதோ?

கொடாமல் எதுவும் உண்ணாதீர்.

பெற்றவர் அளப்பது பத்தில் ஒன்றாம்;

பேதையாய் கணக்கு பண்ணாதீர்.

அற்றவரளிக்கும் ஒன்றும் நூறாம்; 

அவ்வித அன்புக் கண்ணாவீர்!  


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

புத்தாண்டு 2022 வாழ்த்து!

புத்தாண்டு 2022 வாழ்த்து!


ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாளாயின்,


ஆண்டவர் புத்தாண்டெந்நாள்?

பாயிரம் பாடி வாழ்த்தி அவரின்,

பதிலைக் கேட்போம் இந்நாள்.

தாயினும் சிறந்த அன்பு பெருகின்,

தரணிக்கந்நாள் நன்னாள்.

வாயிலும் வயிற்றிலும் இல்லார்க்கீவின்,

வரும் நாளனைத்தும் பொன்னாள்!


-கெர்சோம் செல்லையா.

‘இறையன்பு இல்லம்’,

24, செயலக குடியிருப்பு,

சென்னை- 600099.

அலைபேசி: 9444628400