அன்பர்களே,
வணக்கம்.
கொரோனா மூன்றாம் அலை கொடிதாய் வீசும் இந்நாளில், கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேச இதை எழுதுகிறேன். முதலிரண்டு அலைகளால், இழந்து நிற்பாரையும், மூன்றாம் அலையால் சோர்ந்து நிற்பாரையும், முக்காலம் அறிந்த இறைவன் ஆற்றித் தேற்ற, முதற்கண் வேண்டி, எழுதத் தொடங்குகிறேன்.
இந்த முறை நமது பகுதியிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருப்பினும், யாவரையும் காக்கும் பணியில், இந்திய-தமிழக அரசுகளும், மருத்துவத்துறையினரும், மாநகர் மன்றக் களப்பணியாளர்களும், காவல்துறை நண்பர்களும், மிகுந்த விழிப்புணர்வோடு இரவு பகலாக, உழைப்பதும், ஒத்துழைப்பதும் நமக்கு நம்பிக்கை தருகிறது. இவர்களை வாழ்த்துவோம்; இவர்களின் நற்பணிக்கு, நன்றி கூறுவோம்.
இந்நாட்களில் பாதிப்பிற்குள்ளானோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் இல்லம் செல்வதும், அவர்களைச் சந்தித்துப் பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டியவைகளே. ஆயினும் அவர்கள் நலமடைய எண்ணலாம், இறையிடம் வேண்டலாம்; இயன்றவரை உதவலாம். இதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டோர் பாவம் செய்தோர் என்று அவரைத் தூற்றவும் வேண்டாம்; பாதிக்கப்படாத நாம் நன்மை செய்வோர் என்று நம்மைப் போற்றவும் வேண்டாம்.
தொற்றுக்கு, சாதி இல்லை, சமயம் இல்லை; மொழி இல்லை, இனம் இல்லை. வீடும் இல்லை, நாடும் இல்லை. இந்நோய் யாருக்கு வரும் என்று, தெரியவும் இல்லை. எப்படிப் பரவும் என்று புரியவும் இல்லை. எனவே, வீண் பேச்சு பேசி வருத்தப்படுத்த வேண்டாம் என்று வேண்டுகிறேன்.
இந்த இக்கட்டு நாட்களில் யாரேனும் வழிகாட்டு அறிவுரை வேண்டின், இயன்ற அளவு உதவ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, உதவுவோம். இப்படி உதவிகள் புரிவோரையும் ஊக்குவிப்போம்.
இந்தத் தொற்றும் கடந்து போகும். வந்த அனைவருக்கும் நலம் ஆகும்.
நன்றி, நல்வாழ்த்துகள்.
-கெர்சோம் செல்லையா,செக்ரெட்டேரியட் காலனி,சென்னை-600099.