எப்படி அறிவேன்?

எப்படி அறிவேன்?
நற்செய்தி : யோவான் 3:9-12.

நல்வழி:  

அக்கமும் அறியேன், பக்கமும் அறியேன்.

அடுத்திருப்போரின் நெஞ்சமும் அறியேன்.

இக்கட்டு நேரமே இறைவா என்பேன்.

இதர நாளிலோ யார் அவர் என்பேன்.

திக்கெட்டாத் தொலை எப்படி அறிவேன்?

தேவை இயேசு என்றும் அறிவேன்.

கைக்கெட்டுமருகில் காண்பேன் என்பேன்;

கடவுள் அருளே இயேசு என்பேன்!

ஆமென்.

-செல்லையா.

தண்டனைத் தீர்ப்பு!

தவற்றின் முடிவு தண்டனை!
நற்செய்தி: யோவான் 3:18.  

நல்வழி: 
தவற்றின் முடிவு தண்டனை என்று, 
தவறிக்கூட நினைக்காது, 
இவற்றில் அன்பு எங்கே என்று, 
இன்றைய மாந்தர் கேட்கின்றார். 
அவற்றை அறிந்த ஆண்டவர் அன்று, 
அருமை மகனையே பலிதந்து, 
சிவப்புக் குருதி வழியாய் இன்று,  
சீர்பெற நம்மை மீட்கின்றார்! 
ஆமென். 
-செல்லையா. 

காற்று போன்று ஆவியர்!

காற்று போன்ற ஆவியர்!

நற்செய்தி: யோவான் 3:7-8.

நல்வழி: 


காற்றின் ஒலியை நாம்  கேட்டோம்; 

காற்றைக் கண்ணில் காணவில்லை. 

ஆற்றல்  அறிவில் குறை கண்டோம்;

ஆயினும் நாமோ நாணவில்லை.

மாற்றும் ஆவியர் குரல் கேட்போம்;


மறுப்பின் என்றும் பேணலில்லை.

போற்றும் புதுவழி நாம் காண்போம்;

புனித வாழ்வில் கோணலில்லை!

ஆமென்.


-செல்லையா.  

மறுமுறை பிறத்தல்!

மறுமுறை பிறத்தல்!

நற்செய்தி: யோவான் 3:3-6.

நல்வழி:  
ஒருமுறை பிறத்தல் இறையருளாகும்; 

இரண்டாம் பிறப்போ பேரருளாகும். 

மறுமுறை பிறத்தல் எப்படியாகும்? 

மைந்தன் அருளால் அப்படியாகும். 

இருமுறை பிறந்தால் ஓரிறப்பாகும்.

ஏற்காதிறந்தால் ஈரிறப்பாகும். 

அருள்வழி வாழ்வு யாரால் ஆகும்?

ஆண்டவர் இயேசு பேரால் ஆகும்!


ஆமென்.  


-செல்லையா. 

இரவில் வந்த அறிஞன்!

இரவில் வந்த அறிஞன்!
நற்செய்தி: யோவான் : 3:1-2.
1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.


நல்வழி:


அச்சமுள்ள அறிவுளோர்,

அநீதியிருளில் ஒளிவதால்,

மிச்சமுள்ள ஏழையர்,

மெய் வருந்த விழுகிறார்.

துச்சமென்று துணிபவர்,

தூயயொளியில் வருவதால்,

எச்சில்லுண்ண மறுக்கிறார்;

ஏழைக்கென்று எழுகிறார்!


ஆமென்.


-செல்லையா.

எத்தனை விழுக்காடு?

எத்தனை விழுக்காடு உண்டு?


எத்தனை விழுக்காடு உண்டு?

இனிய பண்பை, நான் அளந்தேன்.

அத்தனை பேரிலும் குறைவு கண்டு,

அவருடன் தோற்று, வருந்துகிறேன்.

மொத்தமும் நூறாய் எவரில் உண்டு?

முன்பின் தேடி நான் அலைந்தேன்.

சித்தர் இயேசு வாழ்வில் கண்டு,

சிறிய நெஞ்சுள் திருந்துகிறேன்!


-செல்லையா.

என்னானார்?

அப்புறம் என்னானார்?
நற்செய்தி: யோவான்: 2:23-25.  

நல்வழி: 
நாடி நின்ற நன்மையை, 
நல்லீவாய்ப் பெற்றவர்,
ஆடி ஆடிப் பாடினார்; 
அப்புறம் என்னானார்?
தேடி வந்த உண்மையை, 
நாடு என்று சொல்லவே,
ஓடி ஓடி ஒளிகிறார்;
உதவாத மண்ணானார்! 
ஆமென்.
-செல்லையா.

பாதிரியார் சாமி!

பாதிரியார் சாமி!

மாதிரியாய் வழி காட்டியும்,

மனிதர் வரவிலை, சாமி.

மா திரியாய் ஒளி ஊட்டியும்,

மாயிருள் போகலை, சாமி,

பாதிரியாய் அருள் நீட்டியும்,

பாவியர் ஏற்கலை, சாமி.

பார் தரா விடுதலை கிட்டும்;

பரனிடம் பெறுவீர், சாமி!

-செல்லையா.

வெளிச்சம் பெற்ற விளக்கு!

வெளிச்சம் பெற்ற விளக்கு!
நற்செய்தி : யோவான்  2:18-22.  

நல்வழி:  
எதை உரைத்தார் என்றறியாமல்,  

எண்ணக் கதவைத் திறவாதீர்.

கதை அளப்பார் இறையறிவித்தால்,

காண்போர் நகைப்பார், மறவாதீர்.

புதை பொருளாய் மறைந்திருந்தாலும்,  

புரிந்தோர் உண்டு, அளக்காதீர்.

விதை மரமாகும், வெளியே கனியும்; 

வெளிச்சம் பெற்ற விளக்காவீர்! 

ஆமென்.

-செல்லையா.

கோயில்!

நல்வழி:
விண்ணை அரியணையாகக் கொண்டு,  
வீற்றாள்கின்ற நம் தெய்வம்.  
மண்ணை அடிச்சுவடாகக் கொண்டு,   

மக்களை வாழ்த்தும் இடம் கோயில். 
கண்ணை இழுத்து மூடிக் கொண்டு, 
காதையும் அடைக்கும் நமதுயினம், 
எண்ணை மிஞ்சும் தீமை கொண்டு,  
இறையை வருத்தும் இடம் கோயில்!  
ஆமென்.
-செல்லையா.