பேரிடர் நாள்!

பேரிடர் நாளில்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21: 12-15.  

12  இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.

13  ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.

14  ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.

15  உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.  

கிறித்துவில் வாழ்வு:  

வாசித்துணர்ந்து ஆய்பவராயினும்,  

வருந்தும் நாளில் கலங்கிடுவார்.  

நேசித்திணைக்கும் இயேசுவையேற்பின்,  

நித்தமும் மறையால் துலங்கிடுவார்.  

பேசித்தீர்க்கும் அறிவும் வாக்கும், 

பேரிடர் நாளில் இறை தருவார்.   

தூசிக்கிணையாய்த் துயரும் பறக்கும்;  

தூதர் சூழ அவர் வருவார்!  

ஆமென்.

நஞ்சின் நாள்!

நஞ்சுடையும் நாள் வருமுன்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:9-11.  

9   யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

10  அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.

11  பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.  

கிறித்துவில் வாழ்வு:  

நெஞ்சதிர, நிலம் அதிர,  

நெடும்போரின் முரசதிர,  

வஞ்சகரின் வெறிச் செயல்கள் 

வானதிர முழங்கிடுதே.  

பஞ்சத்தினால் பசிச்சாவும்,  

பாழ் நோயும் பரவிவர,

நஞ்சுடையும் நாள் வருமுன்,  

நல்மீட்பு வழங்கிடுமே!  

ஆமென்.

கள்ள கிறித்துகள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா  21:7-8.  

7   அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

8   அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

முள்ளும் மலரும் ஒன்றல்ல;  

முளைக்கும் இடமோ வேறல்ல.    

துள்ளும் கயமை ஊழியரை,  

தூதர் ஆக்குதுதல் பேறல்ல.  

கள்ள கிறித்துகள் பெருகிடவே,  

கடவுளின் அரசு வருந்திடுதே.  

உள்ளம் உடைந்து எழுதுகிறேன்;  

உண்மை காணத் திரும்பிடுமே!  

ஆமென்.

வாக்கே வாழும்!

கோயில் போகும், வாக்கோ நிலைக்கும்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21:5-6.

5   பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப் பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,

6   அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

கல்லால் கட்டிய கோயிலும் அழியும்;  

காணும் அழகும் அதனுடன் ஒழியும்.  

சொல்லாம் தெய்வ வாக்கில் விழியும்;  

சொற்படி நடக்க, நெஞ்சும் தெளியும்.

எல்லாம் தெரிந்த சாலொமன் அன்று,  

எழுதிய நூலால் பயனே இன்று.  

நல்லார் தொழுத கோயில் எங்கு?  

நமக்குத் தேவை நல்வாக்கிங்கு!  

ஆமென்.

குருட்டுக் கண்கள்!

குருட்டுக் கண்கள்!  
இருட்டை இருட்டாய்ப் பார்க்காமல் 
இதுதான் பகலின் விளக்கென்றார்.  
திருட்டைத்  திருட்டாய் நோக்காமல்,  
திறமை என்றும் அளக்கின்றார். 
குருட்டுக் கண்கள்  உடையவர்தான்,  
கொடுமைத் தீர்ப்பு எழுதிடுவார்.  
விரட்டும் விருப்பும் இங்கில்லை;
விண்ணின் தீர்ப்பில் அழுதிடுவார்!  

-கெர்சோம் செல்லையா.  

பொருளியல் கற்போம்!

பொருளியல் கற்போம்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:1-4.  

1   அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.

2   ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:

3   இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4   அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். 

கிறித்துவில் வாழ்வு:  

இரண்டு காசுச் சொத்தையெடுத்து, 

ஏழை படைத்தது நிறைவாகும்.  

திரண்டு வழியும் கோடியிலிருந்து, 

தெரியும் இலட்சமும் குறைவாகும். 

உருண்டு ஓடும் காசைச் சேர்த்து,  

உதவாதிருப்பது சிறையாகும்.  

புரண்டு விழுமுன், பொருளியல் அறிவு,  

புகட்டித் தருவது இறையாகும்!  

ஆமென்.

முதலிடம்!

எங்கிருக்க வேண்டும் என்றறிவோம்!

கிறித்துவின்  வாக்கு: லூக்கா 20:45-47  

45  பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

46  நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,

47  விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.   

கிறித்துவில் வாழ்வு:

முதலிடம் பிடிக்க ஓடுகிறோம்;  

முதல்வராய் இருக்க நாடுகிறோம்.  

வித விதமான விளம்பரத்தால்,  

வெற்றி வருமெனத் தேடுகிறோம்.  

அதனதன் இடத்தில் இருப்பதுதான்,

ஆண்டவர் கூறும் அறிவுரையாம்;  

இதனை நம் உடல் உறுப்பினின்று, 

இன்றே கற்பது நெறிமுறையாம்!  

ஆமென்.

தாவிது பாடிய இறைவன்!  

கிறித்துவின் வாக்கு: 20: 41-44.  

41  அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

42  நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,

43  கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.

44  தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

முப்புறப் பண்பின் முழுமையே இறைவன்;  

மூன்றல்ல ஒன்றே, மும்மை இறைவன்.  

எப்புறம் தேடினும் தெரிவார் இறைவன்;  

இயேசுவில் காண்போம் உண்மை இறைவன். 

தப்பையும் தவற்றையும் அழிப்பவர் இறைவன்;  

தாவிது பாடிய மேசியா இறைவன்.  

இப்புவி மீளக் கேட்போம் இறைவன்;  

இரங்குமினிய அன்பே இறைவன்.  

ஆமென்.

இருக்கின்றார்!

இருக்கின்றார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20: 37-40.  

37  அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.

38  அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.

39  அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.

40  அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.  

கிறித்துவில் வாழ்வு:  

இருப்பவர் இறப்பவராகிடினும்,  

எங்கோ மறைவில் இருக்கின்றார். 

நெருப்புடன் முடித்தவராகிடினும்,   

நெஞ்சின் திரையில் இருக்கின்றார். 

விருப்புடன் இயேசுவைப் பணிந்தவரோ,  

விண்ணில் இறையுள் இருக்கின்றார்.  

மறுத்து,வெறுத்து, மடிந்தவரோ, 

மறுபடி இறக்கவே இருக்கின்றார்!  

ஆமென்.

எழுபது!

எழுபது!  

எழுகிற  எழுபதை எனக்கும் கொடுக்கும்,  
என்னுயிர் இறையே போற்றுகிறேன்.  
விழுகிற உடலை விழாதும் தடுக்கும்,    
விண்மகன் ஏசுவே போற்றுகிறேன்.  
தொழுகிற நெஞ்சில் உண்மையும் ஊற்றும், 

தூய்மையின் ஆவியே போற்றுகிறேன்.  
அழுகிற  நாட்டின் அவலமும் மாற்றும்,  
அதுதான் வேண்டல், போற்றுகிறேன்!  

-கெர்சோம் செல்லையா.