பவானி ஆறே!

பார்த்து மகிழ்ந்த பவானி ஆறே,
பக்கம் சரிந்ததால் கேரள நீரே!
ஆர்வமாய்க் கேட்கிறார் தமிழ் நாட்டாரே;
அவரைவிடின் நீ, காட்டாறே!

-கெர்சோம் செல்லையா.

கண்ணீர் துடைப்பார்!

கண்ணீர் துடைப்பார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:37-39.
37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
கிறித்துவில் வாழ்வு:
பிள்ளையின் வலியைக் கண்டு கலங்காப் 
பெற்றோர் உண்டோ நம் நாட்டில்?
தள்ளி விட்டகன்றுத் தவறு செய்தாலும்,
தந்தையர் துடிப்பரே தம் வீட்டில்!
அள்ளிக்கொண்டே, அணைக்கத் தாவும், 
ஆண்டவர் செல்வரோ அவர் பாட்டில்?
கள்வனுக்கருளிய கடவுட் மைந்தன்,
கண்களைத் துடைப்பார் உம் கூட்டில்!
ஆமென்.

வேண்டாம் மழை!

விளையாட்டு பார்க்க மழை வேண்டாம்;
வீட்டில் குடிக்கவோ நீர் வேண்டும்.
தலைகாட்டும் இத்தன்னலந்தான்,
தவறெனப் புரிந்து விடவேண்டும்!
களியாட்டு, கூத்தே போதுமென்றால்,
கஞ்சியும் நீரும் ஏன் வேண்டும்?
பலியாகப் போகும் தமிழ் நாடே,
படுக்கை விட்டு நீ எழவேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

அமைதியாய் இருக்க அறிவீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:34-36.
34 இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36 அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
திருப்பணி செய்திடும் ஊழியரே,
தெய்வத்தின் திட்டம் தெரிவீரே.
ஒருசில இடங்களில் பேசாமல்,
ஊமையாய் இருப்பின் புரிவீரே.
கருப்பொருள் கற்கும் காலம்வரை,
கடவுளை மீறிச் செல்லீரே.
அருட்பெரும் ஊற்றை அவர் திறக்க,
அறிந்து பொருளைச் சொல்வீரே!
ஆமென்.