Author: truth
உம்மடி தொடுவேன்!
உம்மடி தொடுவேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:45-48.
45 அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46 அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47 அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48 அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
எந்தன் தீட்டை எண்ணுவதாலே,
எங்கும் அதனைக் கொட்டுகிறேன்.
உந்தன் மீட்பை வேண்டுவதாலே,
உம்மடி இழுக்கத் தொட்டிடுவேன்.
அந்த நாளின் பெண்மணிகொண்ட,
அரிய பற்றிலும் குறைவுற்றேன்;
மந்தமாக நான் இருந்தாலும்
மன்னிக்கிறீரே, நிறைவுற்றேன்!
ஆமென்.

மருத்துவச் செய்தி!
மருத்துவர் லூக்காவின் மருத்துவச் செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:43-44.
43 அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
44 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
கிறித்துவில் வாழ்வு:
வாடிய முகம் பார்த்து
வருந்துவார் பலருண்டு.
நாடித் துடிப்பறிந்து,
நலமுரைப்பார் சிலருண்டு.
தேடிய பொருள் இழந்தும்,
தெரியாக் குறையுண்டு.
ஓடிக் களைத்தவரே,
உமை மீட்க இறையுண்டு!
ஆமென்.

பிணி, மூப்பு, சாவு!
பிணி, மூப்பு, சாவு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:40-42.
40 இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
41 அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
42 தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
பிணி, மூப்பு, சாவு, இம்மூன்றைப்
பிறவியில் வென்றவர் எவருமில்லை.
துணி சுற்றும் உடல் விழுந்தாலும்,
தொடர்வது நன்மை அருளெல்லை!
அணி கலனாய் அவைகளை அடைய,
அறிய வேண்டும் திருச்சொல்லை.
பணி சுமக்க, அன்பும் தருவார்;
பறந்து போகும் பெருந்தொல்லை!
ஆமென்.

யாவரும் பெற்றிட உரைக்கின்றோம்!
|
|||||
|
அதிசயம் பார்த்த மக்கள்!
அதிசயம் பார்த்த மக்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:34-37.
34 அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35 அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36 பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37 அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப் போனார்.
கிறித்துவில் வாழ்வு:
அதிசய நிகழ்வுகள் பார்த்தும் அவர்கள்,
ஆண்டவர் இயேசுவை ஏற்கவில்லை.
சதியினை அறிவென்றழைக்கும் மக்கள்,
சரியாய் இறையைப் பார்க்கவில்லை.
விதியென்றெண்ணி வீண் போனவர்கள்,
விண்ணின் அரசில் சேர்வதில்லை.
மதியாம் இறையை மதிக்கிறவர்கள்,
மண் விண் எதிலும் தோற்பதில்லை!
ஆமென்.

பன்றியா? மனிதனா?
பன்றியா? மனிதனா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:31-33.
31 தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
32 அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.
அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
கிறித்துவில் வாழ்வு:
பன்றியும் பசுவும் கன்றும் காளையும்,
படைத்தவர் தந்த உயிரினமே.
என்றிருந்தாலும், இறைவன் விருப்பில்,
ஏழையின் மீட்பு உயரிடமே!
இன்றிதை மறந்து, நன்றியும் துறந்து,
எளியரை ஒடுக்கும் மானிடமே,
கொன்றிடு உந்தன் கொடுமை நினைப்பை;
கொடுப்பாய் உன்னை வானிடமே!
ஆமென்.

பெருங்கூட்டப் பேய்கள்!
பெருங்கூட்டப் பேய்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:29-30.
29 அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப்பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப் போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
கிறித்துவில் வாழ்வு:
பெருங்கூட்டப் பேய்களின்று,
பேதையரை ஆட்டிடுதே!
பொருளாவல் தூண்டிவிட்டுப்
பொய்க்காட்சி காட்டிடுதே!
வருங்காலம் எண்ணாரோ
வலைதனிலே மாட்டினரே.
அருள்கூரும் இறையரசே,
அடியாரை மீட்டிடுமே!
ஆமென்.

கல்லறையில் காணும் மனிதர்!
கல்லறையில் காணும் மனிதர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:26-28.
26 பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28 அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
கிறித்துவில் வாழ்வு:
நல்லுரை கேட்க விருப்பம் இன்றி,
நாயாய் நரியாய் அலைந்திட்டார்;
கல்லறைதனையே வீடாய்க் கருதிக்
காலிலும் கையிலும் விலங்கிட்டார்.
பொல்லான் உரைக்கும் பொய்யை நம்பி,
பூணும் உடையையும் உரிந்திட்டார்.
இல்லார் இவரும் நேர்மை அணிவார்;
இறைமகன் இவரையும் புரிந்திட்டார்!
ஆமென்.

ஆழக் கடலில் அமிழும்போதும்!
ஆழக் கடலில் அமிழும்போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:22-25.
22 பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.
23 படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
24 அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று.
25 அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
ஆழக் கடலில் அமிழும்போதும்,
ஆண்டவரோடுதான் அமிழ்கின்றோம்.
தாழக் குதித்துத் தப்பும்போதும்,
தந்தை அருளிலே தப்புகின்றோம்.
வாழக் கரையில் வரும்போதும் நாம்,,
வல்லவரோடுதான் வருகின்றோம்.
வீழ விடாமல் காக்கும் இறையால்,
வீணாகாது வாழ்ந்திடுவோம்!
ஆமென்.
