அறிகிற ஆண்டவர்!

அறிகிற ஆண்டவர்! 
நற்செய்தி: யோவான் 1:47-48.  

நல்வழி: 
அத்திச் செடியின் அடியில் அமர்ந்து, 
அடியார் வேண்டல் ஏறேடுத்தார்
புத்திக்கெட்டா அவரது விருப்பை, 
புனிதர் இயேசு அறிந்திட்டார். 
முத்திப் பேறு விரும்பும் எவரும், 
முதற்கண் வேண்டல் ஏறெடுப்பார். 
கத்திக்கூச்சல் போட்டிட வேண்டாம்;
கடவுள் நெஞ்சை அறிகின்றார்!  
ஆமென்.  
-செல்லையா.  

மாற்றாரை மதிப்போம்!

மாற்றாரை மதிப்போம்!
நற்செய்தி: யோவான் 1:45-46.

நல்வழி: 
மாற்றார் மதித்தல் மறந்துவிடின்,  
மதியில்லாமைப் படியேறும்.
தோற்றார் நிலையில் வீட்டாரும், 
துயரமடையக் குடியேறும். 
வேற்றார் வெறுத்தல் துறந்துவிடின்,
விண்ணே நம்மைப் படியேற்றும். 
தூற்றார் வாழும் நன்மைக்குள், 
தூய இறையே குடியேற்றும்!  
ஆமென்.  
-செல்லையா. 

யாரைப் பின்பற்றுகிறோம்?

யாரைப் பின்பற்றுகிறோம்?
நற்செய்தி: யோவான் 1:43-44. 

நல்வழி: 
உள்ளம் நாடும் வழியில்தான், 
ஒவ்வொரு பேரும் நடக்கின்றார். 
வெள்ளம் ஓடும் தாழ்வில்தான், 
விழுந்து எழாது கிடக்கின்றார். 
பள்ளம் மேடும் தெரிந்தால்தான், 
பணையப்படாது கடக்கின்றார். 
கள்ளம் மூடும் கண் திறப்பீர்; 
கடவுள் நம்மை மீட்கின்றார்! 
ஆமென்.  
-செல்லையா.

மணலும் பாறையாகும்!

மணலும் பாறையாகும்!  
நற்செய்தி: யோவான் 1:40-42.  

மணலை எடுத்துப் பாறையாக்கும்,
மலை வலிவு கொண்டவரே,
தணலை மாற்றி ஆறு வடிக்கும், 
தலை சிறந்த ஆண்டவரே, 
பணமே வாழ்வு என்று ஓடும்,
பாழ் நிலையை உருமாற்றி, 
குணமாய் நிறையும் குன்று ஆக்கும், 
கொல் கதாவில் மாண்டவரே! 
ஆமென்.  
-செல்லையா.  

தங்குமிடம்!

தங்குமிடம் எங்கே?  
நற்செய்தி: யோவான் 1:37-39.
37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.  
39. அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.


நல்வழி:  


தங்கு மிடம் இல்லாது, 

தவியாய்த் தவித்தவரை,  

இங்கு வந்து தங்கென்று, 

யாரின்று இடம் கொடுத்தார்? 

தொங்கு துணி நூல்போன்று, 

தொடர்ந்தின்று பின் சென்றால், 

பங்கு ஒன்று இறை தருவார்; 

பரன் வீடே கொடுப்பார்! 


ஆமென்.


-செல்லையா. 

இறைவனின் பலியாடு!

தெய்வத்தின் பலியாடு!  

நற்செய்தி: யோவான் 1:35-36. 

நல்வழி: 
தவற்றின் முடிவு தண்டனையாகும். 
தவறும் ஆன்மா இறந்தும்போகும்.
எவற்றைச் செய்தால் விடிவுண்டாகும்? 
எதுவுமில்லை, வீணாய்ப்போகும்.   
இவற்றைத் திருத்த யாராலாகும்? 
இறைவனால்தான் தண்டனை போகும். 
அவற்றை முடிக்கும் பலி ஆடாகும், 
ஆண்டவராலே இறப்பும் போகும்!  
ஆமென்.  
-செல்லையா. 

புறா!

புறா!

நற்செய்தி: யோவான் 1: 32-34.

நல்வழி:

வராதிருந்தவர் வருவாரென்றால்,

வருகைக்கென்ன அடையாளம்?

புறாயிறங்கி அவர்மேல் அமரும்;

புனிதர் பணியும் தொடங்கிவிடும்.

சுறா விழுங்கல் போல் பலரும்,

சுற்றுங் காட்சி அட்டூழியம்.

இராதவரை நினையாரென்றால்,

இறை அமைதி முடங்கிவிடும்!

ஆமென்.

-செல்லையா.

கற்றபின் ஊழியமா?

எல்லாம் கற்றபின் ஊழியமா? 
நற்செய்தி: யோவான் 1:29-31.  

நல்வழி: 
எல்லாம் கற்றபின் ஊழியமென்றால்,  
எவரும் செயாமல் சாவாரே.  
சொல்லாம் இறையின் சொல் தரக்கேட்டு, 
சொற்படி நடப்பின் ஆவாரே. 
பொல்லாப் புவியைத் திருத்தும் பணியை,  
புனிதர் தருவார் பெறுவீரே.  
இல்லார் என்ற இழிசொல் நீங்கும்;   
இயேசு போதும், வருவீரே!  
ஆமென்.  
-செல்லையா.  

யோவானின் குளியல்!

யோவான் கொடுத்த குளியல்! 
நற்செய்தி: யோவான் 1:24-28.  

நல்வழி: 
வேற்றுச் சமய மக்களைச் சேர்க்க,   
விதித்தக் குளியல் வேறாகும்.  
ஏற்றுக் கொள்ள, யூதரைத் திருப்ப,    
யோவானளித்ததும் வேறாகும். 
மாற்றும் வலிமை, ஆற்றில் உண்டோ?
மனந்திருந்தலே பேறாகும்.  
போற்றும் இயேசு, ஊற்றும் குருதி,  
புகுவீர், பேறிலும் பேறாகும்!  
ஆமென்.  
-செல்லையா.