மாற்று இனத்தவரும் மனிதரே!


​நாய்களாய்ப் பார்த்த காலம் அது!

நற்செய்தி மாலை: மாற்கு 7:27-30.

“இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார். அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று’ என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.”
நற்செய்தி மலர்:
வேற்று இன மொழி மக்களை நாயாய்
வெறுத்தவர் வாழ்ந்த காலம் அது.
போற்றுதலுக்கு உகந்தவர் தாயாய்
பொறுமையில் உணர்த்திய காட்சி இது.
தோற்று போக வைக்கும் வெறியால்
தொல்லை அன்றி, நன்மை எது?
மாற்றுகின்ற மனிதர் வாழ்வார்;
மடமை ஒழிக்கச் சங்கூது!
ஆமென்.

தீய ஆவியால்…..


​நற்செய்தி மாலை: மாற்கு 7:24-26.

“இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.”
நற்செய்தி மலர்:
தீய ஆவியின் அலைக்கழிப்பாலே, 
தெய்வத்தின் பிள்ளையும் விழுந்திடலாம்.
தூய ஆவியர் தூக்கிப் பிடிப்பார்;
தீமையை வென்று எழுந்திடலாம்.
பாயும் ஆற்றின் சுழியில் அமிழ்த்த 
பகைவரும் நம்மை இழுத்திடலாம்.
ஆயும் அன்பா, ஆண்டவரைப் பார்;
அமிழாதிருக்கத் தொழுதிடலாம்!
ஆமென்.

அழுக்கை அகற்றும் வழி!

அழுக்கை அகற்ற வழி என்ன?
நற்செய்தி மாலை: மாற்கு 7:20-23.
“மேலும், ‘ மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
எத்தனை எத்தனை நஞ்சுகளாம்?
அத்தனையும் நம் நெஞ்சினிலாம்!
இத்தனைத் தீமைகள் உள் வைத்து,
சித்தனாய் நடிப்பதில் மிஞ்சினோம் நாம்!
மொத்தமும் ஒழித்திட எது முறையாம்?
சுத்தனாம் இயேசுவின் புது மறையாம்!
பித்தளை பாத்திரக் களிம்பகலும்;
நித்தமும் துலக்குவோம், இது முறையாம்!
ஆமென்.

Gershom Chelliah's photo.

அவனும் உண்டான் காய்-கனி-இலை!

அவன் உண்டதுவோ காய்-கனி- இலை!
நற்செய்தி மாலை: மாற்கு 7:17-19.
“அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், ‘ நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது’ என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்.”

நற்செய்தி மலர்:
உண்ணுவதாலே குறையுமில்லை;
உண்ணாதவரில் நிறையுமில்லை!
பண்ணும் தீமை உணவால் இல்லை;
பலபேர் இதனை உணரவுமில்லை!

அண்ணன் காயீன் செய்தான் கொலை;
அவன் உண்டதுவோ காய்கனி இலை!
எண்ணிப் பார்ப்பீர் ஏழையர் நிலை;
இறைவன் கேட்கிறார், பகிருதலை!
ஆமென்.

அன்பின் தெய்வம் ஆட்கொண்டதனால்….


​நற்செய்தி!

அன்பின் தெய்வம் ஆட்கொண்டதனால்,
அவருக் கடிமை ஆனேனே!
இன்பம் இதுவே என்றறிந்ததனால்,
இயேசுவின் வழியில் போனேனே!
நன்மை செய்வோர் வாழ்வாரதனால்,
நற்பணி செய்யத் துணிந்தேனே.
முன்பின் அறியா ஏழையர் மகிழ்வில்,
மும்மை இறையைப் பணிந்தேனே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.