இறை நிந்தை!

இறை நிந்தை!


வாக்கு: யோவான் 10: 31-33.  

  1. 31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
  2. 32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
  3. 33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

வாழ்வு: 


சொல்லால் வெல்ல இயலாதாரே,

சுமத்திச் செல்வார் வீண்பழி. 

கல்லால் அடிக்கவும் துணிகிறாரே,

காணுமோ, நம் கண் விழி?

நல்லார் தெரிந்தும் நடக்கிறாரே;

நன்மை மட்டும், அவர் மொழி.

எல்லாத் தீங்கும் அழித்தொழிக்கும்,

இறைவழியே நல் வழி! 

ஆமென்.

 
-கெர்சோம் செல்லையா. 

யோவான் 10:29-30.

எண்ணும் இறையை எண்ணிப் பாரும். 

எண்ணிப் பார்த்தால் ஒன்றாகும். 

மண்ணில் இறங்கி மனிதம் கூறும்,

மகனும் தந்தையும் ஒன்றாகும். 

விண்ணின் அருளை வேண்டிக் கேளும்;

விந்தைப் பிறவியும் ஒன்றாகும். 

கண்கள் காணா காட்சியை ஆளும்,

கடவுளுக்குள் ஒன்றாகும்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

ஆயன் குரல்!

ஆயன் குரல்!
வாக்கு: யோவான் 10:27-28. 

வாழ்வு:


ஆயன் குரலைக் கேட்கும் ஆடு,

அவன் வழி வந்து செல்லும். 

தூயன் வாக்கைக் கேட்பதோடு,

தொடர இறை பின் நில்லும்.

வாயும் வயிறும் வாழ்க்கை என்று,

வாழும் வழி தான் கொல்லும். 

தேயும் அந்நிலை தெரியும் முன்பு,

தெளிவு பெற்று வெல்லும்!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யார் குற்றம்?

யார் குற்றம்?
வாக்கு: யோவான் 10:22-26.
22. பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
23. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
24. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
25. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
26. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.


வாழ்வு:


நல்லவர் இயேசு, நன்மைகள் செய்தும்,

நம்ப மறுப்பது, யார் குற்றம்?

அல்லவை செய்து, அவற்றைக் கொய்யும்,

ஆணவம் கொண்டார் குற்றம்.

வல்லவர் இறையே, என்று நினைக்கும்,

வழியில் வராதிருப்பதும் குற்றம்.

சொல்கிற அன்புச் செயலே இணைக்கும்.

செய்யாதிருப்பது , நம் குற்றம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

மனைவி வாழ்க!

என் மனைவி லிடியாவிற்கு,

பிறந்தநாள் வாழ்த்து!

தன்னினம், வீடு, யாவையும் விட்டு,

தலைவனை* நம்பிய ஒருத்தி,

என்னிடம் வந்து, உள்ளமும் தொட்டு,

இல்லறம் கட்டினாள் திருத்தி.

பன்மொழி பேசி, பரிவுடன் நோக்கி,

பணியால் பிணியை நிறுத்தி,

நன்னறம் செய்த என் மனையாளும்,

நன்றாய் வாழ்க, விருத்தி!

-கெர்சோம் செல்லையா.

*தலைவன் = இயேசு

பார்வை!

  1. யோவான் 10:19-21.

வாழ்வு: 


பித்தனாய் இயேசுவைப் பார்ப்பாருண்டு;

பிசாசு பிடித்ததாய் ஆர்ப்பாருண்டு.

எத்தனாய் எண்ணி இகழ்வாருண்டு;

எதிரியென்றாக்கி அகழ்வாருண்டு.

இத்தனையா என வருத்தமும் உண்டு; 


எனினும், பலரில் திருத்தமும் உண்டு.

மொத்தமாய் நோக்கின் துன்பமே உண்டு. 

முடிவோ மீட்பு, இன்பமேயுண்டு!  


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

உயிர் மூச்சு!

உயிர் மூச்சு! 
வாக்கு: யோவான் 10:17-18. 
17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.  
வாழ்வு:


என்று போகும், எப்படிப் போகும்,

என்றறியா உயிர் மூச்சை,

அன்று இயேசு அளித்த வாக்குள்,

அடைத்தறிதல் நலமாம். 

இன்று வாழும் நமது வாழ்வும்,

இறை அருளும் கொடையாய்,

நன்கு பேண நாம் நினைத்தால்,

நலம் என்றும் நிலையாம்! 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா. 

ஒரே மந்தை! ஒரே மேய்ப்பன்!

ஒரே மந்தை, ஒரே மேய்ப்பன்!
வாக்கு: யோவான் 10:16.

16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

வாழ்வு:

தந்தை ஒருவன், பிள்ளைகள் பலபேர்;

தான்மட்டும் பிள்ளை எனலாமா?

மந்தை ஆடுகள் இருப்பிடம் வேறூர்;

மற்றவை கழுதை எனலாமா?

இந்தத் தவறைச் செய்கிற ஊழியர்,

இதுவும் இறைவழி எனலாமா?

சொந்தக் கூட்டைத் திருத்தியமைப்பீர்;

சொற்படி நடப்போம் எனலாமா?


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அறிவோம்!

அறிவோம்!
வாக்கு: யோவான் 10:14-15. 


14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.  


வாழ்வு:


இறைவன் நம்மை அறிவது போல, 

இறையை அறிவது அறிவாகும். 

பிறவியெடுத்த மனிதர் எவரும்,

புரிந்து கொள்வது நெறியாகும். 

முறையாய் நாமும் கற்கும் போது,

முதலில் தெரிவது குறையாகும்.

திறவாக் கதவும் திறந்து அருளும்;

தெய்வ அன்பில் நிறைவாகும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நினைப்போமா?

நினைப்போமா?


புலிகள் உண்பது மகிழ்ச்சி என்ற,

புதிய பொருளியல் ஆட்சிகளில்,

வலியில் மடியும் மான்களை மீட்க,

வழி ஏதேனும் நினைத்தோமா? 

 எலிகள் என்று எண்ணப்படுகிற, 

எளிய மக்கள் வீழ்ச்சிகளில்,

பலியைத்தானே பார்க்கின்றீர்கள்.

பலியாவோரை  நினைப்போமா?


-செல்லையா.