நெஞ்சின் நேர்மை

நற்செய்தி மாலை: மாற்கு 6:18-20.
“ஏனெனில் யோவான் ஏரோதிடம், ‘ உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ‘ எனச் சொல்லிவந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.”
நற்செய்தி மலர்:
நெஞ்சின் நேர்மை நிமிரச் செய்யும்;
நெறியற்றோர் முன் உயரச் செய்யும்.
மிஞ்சும் தீதை மிரளச் செய்யும்;
மீட்கும் வழியை ஒளிரச் செய்யும்.
அஞ்ச வேண்டாம், தீமை கண்டு;
அதனை அழிக்க ஆண்டவருண்டு.
தஞ்சம் கேட்போம், தாழ்மை கொண்டு;
தருவார் இயேசு, மேன்மையுண்டு!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

யார் பெரியவர்?

யார் பெரியவர்?
ஒன்றிற்கும் இரண்டிற்கும் போனபின்பு,
உடலை நாமே கழுவுகிறோம்.
என்றிருந்தாலும் நம் அழுக்கை
எங்கோ வீசி நழுவுகிறோம்.
முன்னின்று தூய்மை செய்பவரை
முறைத்தும் குறைத்தும் நோக்குகிறோம்.
நன்றியிலாத நம்மைத்தான்,
நாட்டில் பெரியவர் ஆக்குகிறோம்!
-கெர்சோம் செல்லையா

நற்செய்தி மாலை's photo.

பெண்டிர் பின்னர் போவோர்…

 

 பெண்டிர் பின்னர் போவோர்…

நற்செய்தி மாலை: மாற்கு 6:14-17
“இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ‘ இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ‘ என்றனர். வேறு சிலர், ‘ இவர் எலியா ‘ என்றனர். மற்றும் சிலர், ‘ ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே ‘ என்றனர். இதைக் கேட்ட ஏரோது, ‘ இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ‘ என்று கூறினான். இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.”

நற்செய்தி மலர்:
பெண்டிர் பின்னர் போவோர் வாழ்வு
பின்னல் அவிழ்ந்த சடைபோல் ஆகும்.
எண்ணம் யாவும் தவறாய்ப் போகும்;
ஏற்படும் இழப்பும் வலியாய் நோகும்.
மண்ணாய்ப் போன மன்னர் பலரும்
மாண்பை இழந்தது பெண்ணாலாகும்.
கண்ணால் கூட கருத்தை இழக்கா
கடவுளைப் பார்ப்போம், நன்மையாகும்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்!

குறைவு், கொடுமை, குற்றம்,
கொஞ்சமும் வராதெனச் சொல்லவில்லை.
இறைவன் நம்முள் உள்ளார்;
இவைகள் எதுவும் வெல்வதில்லை.
நிறைவு, அமைதி, இன்பம்,
நெஞ்சம் அடைந்திடத் தடையுமில்லை.
மறைவழி நடக்கச் செய்வார்;
மகிழ்ச்சிக்கு வேறு விடையுமில்லை!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

நலம் வாழ விரும்பும் இறை

​நற்செய்தி மாலை: மாற்கு 6:12-13.

“அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.”

நற்செய்தி மலர்:

எண்ணில் அடங்கா எளியவர் இன்று

எண்ணெய் மருந்தென ஏங்குகிறார்.

கண்ணில் தெரியா மருத்துவர் இறைதான்

கைவிட்டோரைத் தாங்குகிறார்.

பண்ணில் எழுதிய பாடலைப் பாடி,

பணி முடிப்பதாய்க் கொள்ளாதீர்.

விண்ணின் விருப்பாம் நலம் வழங்கல்

வேலையை விலக்கித் தள்ளாதீர்!

ஆமென்.

கிறித்து பிறப்பு வாழ்த்துகள்


தன்னைத் தன்னால் மீட்க இயலாத்

தன்மை கொண்டோன் மனிதன்.
இன்னாள் நமக்கும் விடுதலை ஈந்தார்,
இறைமகன் என்னும் புனிதன்.
அன்னார் பிறந்த நாளில் மட்டும்
அன்பு பகிர்ந்தால் மனிதன்.
என்னாளாயினும் இரக்கஞ் செய்வான்,
இயேசுவின் தொண்டன் புனிதன்!
ஆமென்.
இனிய நண்பர்கள் யாவருக்கும்,
இயேசுவின் பிறந்த நாள் வாழ்த்துதலை,
என் வீட்டாருடன் இணைந்து பகிர்கிறேன்.
இவண்,
கெர்சோம் செல்லையா.

காலின் தூசு சான்றுரைக்கும்!

காலின் தூசும் சான்றுரைக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:10-11.
“மேலும் அவர், ‘ நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ‘ என்று அவர்களுக்குக் கூறினார்.”
நற்செய்தி மலர்:
நூலினைப் பார்த்து நிற்போரே,
நுண்மதி பெற்றிடக் கற்பீரே.
பாலினையொத்தத் திருவாக்கைப்
பருகி, மகிழ்வு சேர்ப்பீரே.
ஆலினைப் போன்று வளர்ந்துவரும்
ஆண்டவர் அரசைப் புறக்கணிப்பின்,
காலினில் ஒட்டிய தூசெழும்பிக்
கடுஞ்சான்றுரைக்கத் தோற்பீரே!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

கல்வி வள்ளல்

அன்று அவர்கள் உடைமை விற்றார்;
அதனால் ஏழையர் கல்வி பெற்றார்.
இன்று நம்மவர் கல்வி விற்றார்;
இதனால் எங்கும் மடமையுற்றார்!
-கெர்சோம்செல்லையா.

R Narumpu Nathan's photo.

தெய்வமும் நாமும்.

தெய்வமும் நாமும்.

மெய்மை தெய்வம் தந்தையே;
மீட்பைத் தருவது மைந்தனே.
பொய்மை களைவது ஆவியே;
புகழும் நானோ பாவியே!
தெய்வம் என்பவர் ஒருவரே,
தெளிவுப் பார்வை தருவரே.
ஐயம் அகன்று நாளுமே,
அன்பில் வாழ்ந்து ஆளுமே!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

மழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,

மழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,

எழுபதுகளிலிருந்து சென்னையின் வெயிலையும் மழையையும் பார்த்து, இப்பட்டணத்தில் குடிபுகுந்தவன் நான். இப்போது வந்த மழையும் இறைவனின் கொடையே என்றும் எண்ணுபவன் நான். இழந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்தான். இருப்பினும், இறைவனின் கொடையை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவராய் நாம் செயலற்று இருக்கிறபடியால்தான் இவ்விளைவுகள் என்று நம்புகிறேன். எப்படியிருப்பினும், இது பழைய வரலாறாய் இருக்கட்டும். இந்தப் பெரு மழையும் நமக்கு பட்டறிவைப் புகட்டுகிறது. இனியாவது இறைவனின் கொடையாம் இயற்கையையும், அதன் ஈவுகளையும் இறைவனின் நேர்மையில் சீராய்ப் பயன்படுத்த முயல்வோம். வெள்ளப் பாதைகளைச் சீராக்குவோம். வெளியேறும் நீரைக் குளங்களில் சேர்ப்போம். வேண்டுமளவு குளங்களை ஆழப்படுத்துவோம். விரும்பிப் பார்க்கும் வகையில் அருகே பூங்காக்கள் அமைப்போம். அரசு நிலங்களை அரசுப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வைப்போம். அவைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் தவறான கொள்கையை விட்டுவிடுவோம். இழந்து நிற்போரின் வலியை உணர்வோம். இயன்றவரை நாமும் உதவியாய் இருப்போம். உதவும் உள்ளங்களை, நெஞ்சார வாழ்த்துவோம். எதுவும் செய்யாவிடின், திட்டுவதை நிறுத்துவோம்! நன்றி, நல்வாழ்த்துகள்.

-கெர்சோம் செல்லையா.