கல்லறையும் கேட்கும்!

கல்லறையும் கேட்கும்!

நற்செய்தி: யோவான் 5:28.

28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;

நல்வழி:

கல்லறைக்கும் காது உண்டு;

கடவுட்சொல் அது கேட்கும்.

நல்லவர்க்கும் வாழ்வுண்டு.

நம்பிக்கையே நமை மீட்கும்.

சில்லறைக்கும் துரு உண்டு.

சீர்வாக்குச் சான்று தரும்.

இல்லையென்றால் எது உண்டு?

இரண்டுமுறை சாவு வரும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இறுதித் தீர்ப்பு!

இறுதித் தீர்ப்பு!


நற்செய்தி: யோவான் 5:26-27.

நல்வழி: 


களையெடுக்கும் கடைசி நேரம், 

கண் முன்னில் தெரிகிறது.

விளைவெடுக்கும் முன்பதுவும்,

வெளியிடத்தில் எரிகிறது.

முளை தளிர்க்கும் மறைவாக்கும்,


முழு வடிவில் விரிகிறது.

தளை முறிக்கும் இறையருளும்,

தண்டனையில் புரிகிறது!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

இறை ஒலி!

இறையொலி!

நற்செய்தி : யோவான்: 5:25.   

நல்வழி: 


பிறந்தோர் உள்ளில் இறையின் பாட்டு,

பிரியா அன்பால் ஒலிக்கட்டுமே.

இறந்தோர் நெஞ்சும் இதனைக் கேட்டு, 

இயேசு அருளால் விழிக்கட்டுமே.

மறந்தோர் என்னும் நாமும் இன்று,

மறு பிறப்பாகிச் சொலிக்கட்டுமே.

சிறந்தோர் சூழ, வரும் மகன் அன்று,

சிறுமை யாவும் ஒழிக்கட்டுமே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

வாழ்வின் வழி!


நற்செய்தி: யோவான்  5:23-24.  


எவ்வழி நல்வழி என்றறியாது,


எழுந்து நடவா மனிதருக்கு,

செவ்வழி உன்வழி என்றறிவித்து,

செயலில் நடத்தும் இறை மகனே,

இவ்வழி தவிர வேறிலையென்று,

இனிதே செல்லும் புனிதருக்கு,

அவ்வழி சொல்லும் வாழ்வடைய,

அன்பு ஊற்றி, நிறை மகனே!


-ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

விண்ணின் தீர்ப்பு!

விண்ணின் தீர்ப்பு!


நற்செய்தி: யோவான் 5:22

நல்வழி:


தினை விதைத்து தினை அறுப்பார்,

தேய்ந்துபோகும் இந்நாட்டில்,

வினை புதைத்து தனை மறுப்பார்,

விளைச்சலாலே மகிழ்வாரோ?

பனை மரம் போல் பயன் தருவார்,


பரிசுவாங்கும் அந்நாளில்,

எனை இணைத்த  இறை மகனார் 


எழுது தீர்ப்பில் மகிழ்வாரே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

உயிராம் இறை!

உயிராம் இறை!

நற்செய்தி: யோவான் 5:21

நல்வழி:


கடலின் அழகு கரையாகும்;

காண விரும்பின் கடப்பரே.

உடலின் அழகு உயிராகும்;

உயிர் இருப்பின் நடப்பரே.

திடமும் நீரும் காற்றாகும்,

தெளியார் இருளில் கிடப்பரே.

தடந்தராமல் உயிர் போகும்,

தட்டியெழுப்புவார் மீட்பரே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

தந்தை-மைந்தன்!

இறையைக் காட்டும்  இறைமைந்தன்!
நற்செய்தி: யோவான் 5:19-20.  

19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். 

நல்வழி: 

பெற்றோர் பார்த்து பிள்ளை கற்பார்.

பெருமை கொண்டு அதனுள் நிற்பார்.

மற்றோர் மதித்து, நன்மை செய்வார்,

மக்களும் உணர, அவரும் உய்வார்.

கற்றோர் இன்று அறவழி மறந்தார்;

காதால் கேளா பிள்ளையும் துறந்தார்.

பற்றோர் எப்படி இறையறிவுறுவார்?

பார்க்கும் ஏசுமகனே தருவார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

மைந்தன் இயேசு!

மைந்தன் இயேசு!

நற்செய்தி: யோவான் 5:17-18. 17.

இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

நல்வழி:

தந்தையென்று இறை அழைத்து,

தனயனாக மொழி உரைத்தார்.

மந்தையாடாய் நமை நினைத்து,

மேய்ப்பனாயும் வழி அமைத்தார்.

சொந்தமாக்கி எடுத்தணைத்து,

சொற்படியே பழி துடைத்தார்.

இந்தயேசு கிறித்துவேதான்,

என்னிலும் விழி திறந்தார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏன் இந்தத் துன்பம்?

ஏன் இந்தத் துன்பம்?


நற்செய்தி: யோவான் 5:14-16.  

நல்வழி:

ஐந்து விண்மீன் அறையெடுத்து,

ஆடிப் பாடிக் குரல் கொடுத்து,

இந்த நாளில் நாம் நடித்தால்,

இறைப்பணி அல்ல, நண்பர்களே.

அந்த நாளில் கிறித்துவிற்கு,

அவரது அடியர் அனைவருக்கு,

வந்த துன்பம் ஏன் எதற்கு?

வாய்மையில் வெல்ல, அன்பர்களே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

விளம்பரமற்ற தொண்டு!

விளம்பரமற்ற தொண்டு!

நற்செய்தி: யோவான் 5:11-13.

நல்வழி: 


நன்மைச் செய்த மனிதர் எவரும்,

நன்றிக் கடனை நாடுகையில்,

தன்னை மறைத்துத் தனியே செல்லும் 

தன்னலமற்ற தலைவன் யார்?

இன்னாள் இதனை எண்ணும் எவரும்,

இயேசு பாதை தேடுகையில், 

சொன்னால் வியப்பாகும் வகையில்,

சொரிவாருள்ளில், தாழ்மை பார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.