விதையின் கவிதை!

விதையின் கவிதை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:22-25.

22  பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.

23  இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

24  மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.

25  அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணின் ஆட்சி  வேண்டும் நாமும்,

விதையின் பண்பை மறப்பது ஏன்?

தண்ணீர் காணா நிலத்தினுள்ளும்,

தன்னை விதையும் மறைப்பது ஏன்?

மண்ணுள் விதைகள் தாழாவிட்டால்,

மரஞ்செடி, பழங்கள் எங்கு வரும்?

எண்ணும் நாமும் தாழ்மைகொண்டால்,

இறைவனரசு இங்கு வரும்!

ஆமென்.

எளியர் வாழ வேண்டும்!

எளியரை மீட்கும் ஆட்சி!
தன்னலம் கொண்டு ஆள்வதும் வேண்டாம்;
தவற்றினை விற்று வாழ்வதும் வேண்டாம்.
பொன்பொருள், தரகு வாங்கவும் வேண்டாம்; 
பொது நலன் யாவும் தூங்கவும் வேண்டாம்.


இன்னில எளியர் மீண்டிட வேண்டும்;
இதற்கென நிற்போர் ஆண்டிட வேண்டும்.
அன்னிலை அமைய இறையை வேண்டும்;
அவரது அன்பு நிறைய வேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

எப்போது வரும் இறையரசு?

எப்போது வரும் இறையரசு?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:20-21.

20  தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

21  இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

எப்போது இறையின் அரசு வரும்,

என்றிங்கு  யாவரும் கேட்கும்படி,

இப்போது அரசுகள் இருப்பதனால்,

இன்றைக்கே பதில் தெரிவோமே.

தப்பாது வாக்கை நிறைவேற்றும்,

தந்தையின் விருப்பில் நாம் நடந்தால்,

அப்போது இறையும், இறையரசும்,

அகத்தில் வருவது, அறிவோமே!

ஆமென்.

நலம் பெற்றார், மீட்பற்றார்!

நலமடைந்தும், மீட்புறாதது. ஏன்?

நலமடைந்தும், மீட்புறாதது. ஏன்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:17-19.
17 அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?18 தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,19 அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
நலம் அடையுமுன் இணைந்திருந்தார்;
நட்புடன் பேசிப் பிணைந்திருந்தார்.
குலம் ஒன்றெனக் கொண்டிருந்தார்;
கொடுக்கல் வாங்கலும் கண்டிருந்தார்.
கலம் நிரம்பிட வேறுபட்டார்.
கடவுளை விட்டு மாறுபட்டார்.
நிலம் தேடிடும் நன்றியற்றார்,
நிலைவாழ்வையும் இன்று அற்றார்!
ஆமென்.

நன்றி!

நன்றி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:17-19.

17  அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?

18  தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,

19  அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

நன்றி என்ற சொல்லிற்கு,

நாமே படிவம் என்றானால்,

இன்று பலபேர் தேடுகிற,

இனிய மீட்பு அடுத்திருக்கும்.

அன்று தொட்டு இன்றுவரை,

அரிய பண்பை விட்டதினால்,

கன்று காளை வடிவத்தில்,

பன்றிதானே படுத்திருக்கும்!

ஆமென்.

தொற்று தரும் ஒற்றுமை!

தொற்று தரும் ஒற்றுமை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:11-16

11  பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.

12  அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:

13  இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.

14  அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.

15  அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,

16  அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

கிறித்துவில் வாழ்வு:

தொற்று வந்து தாக்கும்போது,

தெற்கு வடக்கு நோக்காமல்,

ஒற்றுமையாய் மக்கள் சேர்ந்து,

உதவி செய்வது பார்த்தீரா?

பற்று என்று வந்திடும்போது,

பாவப் பிரிவுகள் பார்க்காமல்,

உற்றாருறவு என்று சேர்க்கும்,

உண்மைப் பற்று ஏற்பீரா?

ஆமென்.

பயனற்ற பணியாளன்!

பயனற்ற பணியாளன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:7-10.

7   உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?

8   நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?

9   தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.

10  அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கடமையைச் செய்த மகிழ்ச்சிகூட 

கயவன் எனக்கு வரவிலையே.

உடமைகள் தேடி ஓடினதாலே,

ஊழியப் பொறுப்பும் தரவிலையே.

மடமையில் விழுந்த அடியனை மீட்டு,

மன்னா பொழிந்தீர் செம்பொருளே.

தடைகள் இட்டுத் தடுப்பவரெனினும்,

தமிழால் மொழிவேன் உம்மருளே!

ஆமென்.

கடுகளவு பற்று!

கடுகளவு பற்று வேண்டும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:5-6.

5   அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.

6   அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

கிறித்துவில் வாழ்வு:

காட்டத்தி மரத்தை வேருடன் பிடுங்க,

கடுகளவில் பற்று தாருமென்பேன்.

நீட்டத்தில் குறைந்த நிலையிலா வாழ்வில்,

நிகழும் செயல்கள் பாருமென்பேன்.

ஆட்டத்தில் அமிழ்வோர் அறிவினில் எழும்ப,

அவருக்கும் தூது கூறுமென்பேன்.

ஓட்டத்தின் முடிவில் உம்மைக் காண்பேன்;

உலகை மீட்க வாருமென்பேன்!

ஆமென்.

பொறுத்தல்!

கனிவாய்ப் பொறுப்போம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:4.

4   அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:
எத்தனை முறை நாம் இறையிடம் சென்று,
என்னை மன்னியும் என்றோமே.
அத்தனை முறையும் அவரும் இரங்கி,
அனைத்தையும் நமக்குப் பொறுத்தாரே.
இத்தனை என்று எண்ணி முடியா,
மொத்தமும் நம்மிடம் இருக்கையிலே,
கத்துதல் நிறுத்தி, கடவுளை வணங்கி,

கனிவாய் உறவைப் பொறுப்பீரே!
ஆமென்.

எது வேண்டும்? மது வேண்டும்!

எது வேண்டும்?  மது வேண்டும்!

எது வரைக்கும் எம்மிறையே, 

எது வரைக்கும் எம்மிறையே?
பொது வெளிக்கு வர வேண்டாம்,
போவோர்க்கு அடி உண்டாம்.

இது என்னத் தடைச் சட்டம்?

ஏன் தடுத்தீர் பெருங்கூட்டம்.?

எது வரைக்கும் எம்மிறையே, 
எது வரைக்கும் எம்மிறையே?

புது நோயின் பெயர் சொன்னார்;
புவிமுழுதும் பரவுதென்றார்.

அது கேட்டோர் மூடுகின்றார்;

ஆயினும்பின் கேடு என்றார்.

எது வரைக்கும் எம்மிறையே, 
எது வரைக்கும் எம்மிறையே?
பதுமை போல் விழ வைத்தார்;
பட்டினியில் அழ வைத்தார்.

மது குடிப்பின் போகுமென்றார்.
மடையர்களும் ஆகுமென்பார்!

எது வரைக்கும் எம்மிறையே,
எது வரைக்கும் எம்மிறையே, 


கெர்சோம் செல்லையா.