யோவான் 9:26-29.

நல்வழி:


அடியாரென்கிற நற்றமிழ் வாக்கு,

அடி ஆளாகி  மருவிற்றே. 

துடியாதவரின் திருப்பணிப்போக்கு,

தூய வழியில் அருகிற்றே. 

மடியாதவராம் இறையின் நோக்கு,

மன்னிப்பாய்  உருகிற்றே.  

விடியாதிருக்கும் நிலையை நீக்கு;


விண்ணின்பம் பெருகிற்றே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.

பழிச்சொல்!

இறை வாக்கு: யோவான் 9:24-25.

இறை வழி:


வெறுப்பு கொண்டோர் பேச்சு கேட்டால்,

வீண்பழிச் சொற்கள் நிறைந்திருக்கும்.

பொறுப்பு அற்றோர் செயற்பாட்டால்,

பொறுமை கூட குறைந்திருக்கும். 

நெருப்பு என்கிற பழிச்சொல் எரித்தால்,

நீங்களும் நானும் என்னாவோம்?

விருப்பு இறையுள் நாம் சிரித்தால்,  


விடுதலையாகிப் பொன்னாவோம்!  


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

என் மொழி!

என் மொழிக் கொள்கை!

பன் மொழி பேசும் என் பழ நாட்டில்,

தன் மொழி உயர்ந்தது என்றுரைப்பார்

இன் மொழி அறியாதிருப்பதானால்,

நன் மொழி கேட்டு, பிழைக்கப் பார்.


எம்மொழி கேட்கையில், அம்மொழி வெறுப்பில்,

தம் மொழி வளர்க்க மறப்பதானால்,

செம்மொழி தமிழில் இம்மொழி சொல்வேன்;

உம் மொழி தழைக்க, உழைக்கப் பார்!


-கெர்சோம் செல்லையா.

அச்சம்!

இறைவாக்கு: யோவான் 9:22-23.

இறை வாழ்வு:


பற்று இல்லா நெஞ்சம் எங்கும், 

பரவிக் கிடக்கும் அச்சம்.

சற்று நேரம் ஆய்ந்திட நீங்கும்.

சரி செய்யாவிடில் எச்சம்.

உற்று நோக்கி, தெய்வம் பாரும்;

உள்ளில் வருமே துணிவும்.

பெற்று வாழ்வார் கூட்டில் சேரும்;

பேரச்சமும் பணியும்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

நோபல் பரிசு!

ஆயும் பண்பை அடகும் வைத்தோம். அறிவுள்ளோரை அடக்கியும் வைத்தோம். பேயும் எண்ணாப் பிரிவினை செய்தோம்; பிறந்த நாட்டின் சிறப்புமிழந்தோம். நீச்சலில் சிறந்த மீனவர் உண்டு. நீர் நிலைப் பணியில் இடமோ இல்லை. கடல் வாழ் இனங்களைக் கற்றலும் உண்டு. கடலாடிகளுக்கோ இடமே இல்லை. நீந்தத் தெரியாதவர்கள், நீந்தத் தெரியாதவர்களை, நீச்சல் வீரர்களாய், நியமிக்கிற நிர்வாகத்தில், நோபல் பரிசு என்று, நினைத்துப் பார்க்கலாமா?

யோவான் 9:18-21.

எப்படி நிகழ்ந்தது?

நல்வழி: 


எப்படி இந்த மாற்றம் வந்தது?

யாரால் இவரது கண் திறந்தது?

அப்படி வினவி தெளிவுறுவது,

ஆன்றோருக்கு, அறிவு, அழகு. 

இப்படி அறிய விரும்பாதிருப்பது,

ஏசிப்பேசி, இகழ்ந்துரைப்பது, 

செப்படி வித்தைக்காரரின் தவறு;

சேதம் வருது, விட்டு விலகு!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

பார்க்கும் கோணம்!

பார்க்கும் கோணம் பாரீர்!
நற்செய்தி: யோவான் 9:17. 

17. மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.  

நல்வழி:

மனிதனாய்ப் பார்த்த கண்கள் அன்று,

மறுபடி இயேசுவைப் பார்க்கையிலே,

புனிதனாகிய இறை வாக்கினன் என்று,

புதிய நோக்கில் பார்ப்பதும் பார்.

இனிமையான இறைவாக்கினன் இன்று,

 இன்னும் உயர்ந்து நிற்கையிலே,

கனியுமந்த காலம் வருமேயென்று,

காத்திருப்பார் ஆர்ப்பதும் பார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

ஆன்ம அறிவு!

ஆன்ம அறிவு!

நற்செய்தி: யோவான் 9: 12- 16.

12. அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.13. குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.14. இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.15. ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.16. அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.

நல்வழி:

சடங்குகள் வழியாய் இறையருள் நாடும்,

சமயத்தவர்கள் பலர் உண்டு.

உடம்பினை ஒடுக்க, உரக்கப் பாடும்,

ஊர்ப்பாடகர்கள் சிலர் உண்டு.

அடங்கா நெஞ்சை அடக்கி ஆளும்,

ஆன்ம அறிவு எதில் உண்டு?

கிடங்குகள் நிரப்பும், கிறித்து வாழும்,

கேடிலா அன்பு அதில் உண்டு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

கதை, கட்டுக் கதை!

வரலாறு கதையாகி, திரைப்படமானால் ……

வேணாட்டின் அரசனாக வரவேண்டியவன் சிறுவன் மார்த்தாண்டன். இவனைக் கொல்ல முயன்றவர்கள் இவனது உறவினராகிய எட்டு வீட்டுப் பிள்ளைகள். இவர்களிடமிருந்து தப்பி ஓடியவனைக் காப்பாற்றியவர்கள் மூன்று இனத்து மக்கள். படைக்குறுப்பு எனப்பட்ட நாயர்கள் ஒரு பலா மரத்தின் உள்ளே ஒளித்து வைத்துக் காத்தனர். வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சாம்பவர் இனப் பெண்கள், தங்களில் ஒருவராய் நிறுத்தியும் காத்தனர். நாடாள்வார் இனத்துப் பாட்டி ஒருவரோ, தனியொருத்தியாய் நின்று, தன் வீட்டு முற்றத்தில் கூட்டி வைத்திருந்த இலைச் சருகினுள்ளே கூடை வைத்து மறைத்து, உயிர் காத்தார். சிறுவன் மார்த்தாண்டன் அரசனாகி, அப்பகுதி மக்களின் ஆதரவையும் பெற்றான். வளர்ந்து, வர்மன் எனப் பட்டம் வாங்கிய நாளில், வரலாறு எழுதத் தொடங்கினார்கள். நடந்ததை எழுதினால் வரலாறு இனிக்காது என்று நினைத்த அறிவாளி ஒருவர், ஓர் அந்தண குலத்து இளைஞன் மார்த்தாண்டனைக் காத்து உயிர் துறந்ததாய், கதை எழுத, அதைத்தான் பின்னர் திரைப்படமாக்கினர் பேரறிவாளர்கள்!

இந்த வேணாட்டுக் கதைபோல், சோழர் வரலாறும் திரிந்தால், திரைப்படம் வந்தால், யாருக்கு என்ன பயன்? உண்மை கண்டறியப்பட வேண்டும்; உண்மை மட்டுமே வரலாறாய் எழுதப்பட வேண்டும். இதற்கு, உண்மையைத் தேடும் மனிதர்கள் பெருக வேண்டும்!

-கெர்சோம் செல்லையா.