அஞ்சாதீர்!

அஞ்ச வேண்டாம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:4-5.

4என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அஞ்சி அஞ்சி அழுவதற்கென்றே
ஆண்டவர் நம்மைப் படைத்தாரா?
மிஞ்சி மிஞ்சித் துன்பம் தரவே,
மீட்பரும் துணையாய்க் கிடைத்தாரா?
கொஞ்சங்கூட அறிவில்லார்தான்,
குறையுள்ள மனிதனுக்கஞ்சுகிறார்.
தஞ்சமென்று கிறித்துவைப் பார்ப்பார்,
தாங்கும் அவருடன் கொஞ்சுகிறார்!
ஆமென்.

யாருக்கும் தெரியாததா?

யாருக்கும் தெரியாததும்…கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:2-3.

2வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
3ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.

கிறித்துவில் வாழ்வு:
யாருக்கும் தெரியா எண்ணமும்கூட,
இறையால் இன்று வெளிப்படுமே.
பேருக்குத் தூயோனாக இருந்தால்,
பிழைகள் பெருகிப் பழித்திடுமே.
தாருக்கும் வேண்டும் நறுமணமென்று 
தரைச் செடி யாவும் அறிந்திடுமே.
ஊருக்கு நல்லவன் பட்டம் அல்ல;
உள்ளில் உண்மை தெரிந்திடுமே!
ஆமென்.

புளித்த மாவு!

புளித்த மாவு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:1.

1அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சிறு புளித்துண்டு மாவில் விழவே, 
சேர்த்து பானையில் கொட்டிவைத்தேன்.
இரு பெருங்காலம் கடந்த பிறகே,
யானும் நினைந்து, கட்டவிழ்த்தேன்.
அருவருப்பான வாடை எழவே,
அப்புளிப் பானையைப் போட்டுடைத்தேன்.
பெருமையும் இதுபோல் பரவுதல் கண்டே,
பேரிடர் ஒழிக்கப் பாட்டெடுத்தேன்! 
ஆமென்.

சொன்னார் குறை!

சொன்னார் குறை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:53-54.

53இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,
54அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படிஅவரை ஏவவும் தொடங்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
தன்னால் கூடும் என்பவனும்,
தவறேன் என்று சொல்பவனும்,
முன்னாள் தன்குறை உணர்வதுதான்,
முதலில் கற்கும் இறையறிவாம்.
பன்னாள் இப்படி நாம் கேட்டும்,
பலவித முறையில் வழிபட்டும், 
சொன்னார் குறையே தேடுகிறோம்
சொத்து நமக்கு குறையறிவாம்!
ஆமென்.

ஆசு இரியர் = ஆசிரியர்.

ஆசு இரியும் ஆசிரியர்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:52.

52நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

ஆசிரியும் பணிப் பெருமை,
ஆசிரியர் மறந்ததினால்,
காசுரியும் கடையர்தமை,
கல்வி வள்ளல் என்கின்றார்.
வீசு மண இறைவாக்கை,
விரும்புகின்ற எளியவர்தான்,
மாசு ஒன்றும் சேர்க்காமல்,
மாதிரியாய் நிற்கின்றார்.
ஆமென்.

பழி வாங்கும் இறைவன்!

பழிவாங்குவார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:49-51.

49ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
50ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
51நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அறிவின் வாக்கு உரைத்தவரை,
அடித்துக் கொன்றதும் நம் நாடு.
வெறியின் செயல்கள் செய்தவரை
விழுந்து புகழ்வதும் பண்பாடு.
பொறியில் சிக்கிய வெறியர்களை,
புனிதம் என்பதோ பெருங்கேடு. 
நெறியின் இறைவன் பதில் தருவார்.
நேர்மைதானே அவர் கோடு!
ஆமென்.

அப்பன் கொன்றான்….

அப்பன் கொன்றான், பிள்ளை புதைத்தான்.
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:47-48.

47உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.48ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அப்பன் கொன்றான், பிள்ளை புதைத்தான்.
அழகாய்ப் பின்னர் கல்லறை அமைத்தான்.
தப்பாய் நடந்தான், தலைமுறை வளர்த்தான்.
தவற்றின் உணவைத் தானும் சமைத்தான்.
எப்போதிவனும் தன்னை உணர்வான்?
இவைகள் விட்டு, உம் வழி தெரிவான்?
ஒப்பாரில்லா இறைவனின் மகனே,
உம்மைக் காட்டும், நன்மை புரிவான்!
ஆமென்.