பழி வாங்கும் இறைவன்!

பழிவாங்குவார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:49-51.

49ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
50ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
51நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அறிவின் வாக்கு உரைத்தவரை,
அடித்துக் கொன்றதும் நம் நாடு.
வெறியின் செயல்கள் செய்தவரை
விழுந்து புகழ்வதும் பண்பாடு.
பொறியில் சிக்கிய வெறியர்களை,
புனிதம் என்பதோ பெருங்கேடு. 
நெறியின் இறைவன் பதில் தருவார்.
நேர்மைதானே அவர் கோடு!
ஆமென்.

அப்பன் கொன்றான்….

அப்பன் கொன்றான், பிள்ளை புதைத்தான்.
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:47-48.

47உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.48ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அப்பன் கொன்றான், பிள்ளை புதைத்தான்.
அழகாய்ப் பின்னர் கல்லறை அமைத்தான்.
தப்பாய் நடந்தான், தலைமுறை வளர்த்தான்.
தவற்றின் உணவைத் தானும் சமைத்தான்.
எப்போதிவனும் தன்னை உணர்வான்?
இவைகள் விட்டு, உம் வழி தெரிவான்?
ஒப்பாரில்லா இறைவனின் மகனே,
உம்மைக் காட்டும், நன்மை புரிவான்!
ஆமென்.