ஒரு மூலையிலிருந்து…….2

பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்!

பிற்படுத்தப்பட்டவர் பட்டியலைத் திருத்தவேண்டிய காலம் வந்துள்ளது என்பது என் கருத்தாகும். அன்று பிற்படுத்திப் புறம் தள்ளியோரும், இன்று சலுகைகளுக்காகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வந்து இடம்பிடித்து இருகிறார்கள்.பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று வெள்ளையர் நாளில் சேர்க்கப்பட்டவர்கள், தங்களைப் பொதுப்பட்டியலில் சேர்க்க வேண்டிப் போராடியதும், முன்னேறியவர்கள் என்று தங்களைக் கருதியிருந்தவர்கள் அதைத் தடுத்து வழக்காடியதும் நாம் அறிவோம். இன்று அம்மக்களும் சலுகைகளுக்காகப் பிற்படுத்தப்பட்ட வரிசையே போதுமென்று, இருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்கள் எப்போது முன்னேறுவார்கள்? எப்போது முன்னேறிய வர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்?அன்றிலிருந்தே கல்வியிலும், சமுதாய நிலையிலும் உயர்வாய் இருந்தவர்களை, இனியும் பிற்படுத்தப்பட்டவர்கள் வரிசையில் நிற்கவைத்துச் சலுகை பெறவைப்பது, இதர எளியவர்களை ஏமாற்றுவது ஆகாதா? இதைத் திருத்தவேண்டியது இன்றையத் தேவை அல்லவா? எல்லோருக்கும் கல்வியை, எல்லாக் கல்வி நிலையங்களிலும் அரசு உதவியோடு விலையின்றிக் கொடுங்கள். கற்க வருகிற இடங்களில் சாதி சமயம் பாராதீர்கள், பதிவு செய்யாதீர்கள். தனியார் தங்களைக் கல்வி வள்ளல்களாகக், காண விரும்பினால் அல்லது காட்ட விரும்பினால், விலையின்றிக் கொடுக்கட்டும்! அரசு உதவி பெறாமல் கொடுக்கட்டும்! இனம் பார்த்துக் கொடாமல் யாவருக்கும் கொடுக்கட்டும்! எல்லோரையும் கற்கச் செய்யுங்கள். சாதியென்றும் சமயம் என்றும் கேளாதீர்கள், பிரிக்காதீர்கள்! கற்பவர் திறன் கண்டு ஊக்குவியுங்கள். இதுதான் நற்கல்வியாகும்! பணியிடங்கள், பதவி உயர்வுகள் எனும்போது சாதி, சமயத்தைப் பார்க்காமலும், காசு வாங்காமலும், அரசியல் ஆட்கொணர்வு செய்யாமலும் இருக்க, இத்தகைய ஊழல் செய்வோரைத் தண்டிக்க கடும் சட்டங்கள் இயற்றுங்கள். தவறுவோரைத் தண்டியுங்கள். இது அரசின் உயர் பதவிகளுக்கும் பொருந்தட்டும், நீதித்துறைக்கும் பொருந்தட்டும்; தனியார் நிறுவனங்களுக்கும் பொருத்தட்டும்!அப்போதுதான் கல்வியிலும் பணிகளிலும் அனைவருக்கும் உரிய வாய்ப்பு கிடைக்கும். நல்லெண்ணப் போட்டிகள் நடைபெறும். திறமை பாராட்டப்படும். இப்படிச் செய்தால்தான் இந்தியா முன்னேறும். இந்நாட்டு மக்கள் வாழ்வும் முன்னேறும். இதை விட்டுவிட்டு, எத்தனைக் காலம் சாதி என்றும், சமயம் என்றும், உயர்ந்தவன் என்றும், தாழ்ந்தவன் என்றும் இந்தியரைப் பிரித்து, பிற்படுத்தப்பட்டுக் கிடப்பீர்கள்? இது, எல்லாச் சாதி-சமயத்தவரால் கற்பிக்கப்பட்டு, கற்க ஊக்குவிக்கப்பட்டு, பற்பலப் பணிகள் பெற்று, பலவித நன்மைகள் பெற்று வாழும் ஓர் இந்தியத் தமிழனின் கருத்தாகும்! -கெர்சோம் செல்லையா.

பட்ட மரமே!

பட்ட மரங்களே!   

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:29-31.  

29  இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.

30  அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.

31  பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

பச்சை மரமே சாயும்போது,  

பட்டமரங்கள் என்னாகும்?  

மிச்ச மீதி இலாதுபோகும்,  

மீண்டும் தளிரா நிலை வரும்.  

கொச்சை என்று கூறிடவேண்டாம்.  

குறை திருத்தல் நலமாகும்.  

இச்சையால்தான் யாவும் அழியும்;

இறை வாக்கோ வாழ்வு தரும்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

யாருக்காக அழுகிறோம்?

யாருக்காக அழுகிறோம்?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:27-28.

27 திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.28 இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:

ஆண்டவருக்காய் அழவும் வேண்டாம்;

அவருக்காக அடிக்கவும் வேண்டாம்.

வேண்டற்பெயரில் திட்டவும் வேண்டாம்.

வீதியிலதனைக் கொட்டவும் வேண்டாம்.

மாண்டவரெழும்ப வேண்ட வேண்டும்.

மன்னிக்கின்ற நெஞ்சால் வேண்டும்.

தோண்டத்தோண்ட உருக வேண்டும்.

தூய்மையால்தான் திறக்க வேண்டும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

தூக்க இயலா குருசு!

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:26.  

26  அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  
தூக்க இயலா குருசெடுத்து,
துன்புறு இயேசு விழும்போது,  
நோக்க வந்த சீமோன்மீது,  
நோவு வைத்தது தீது.
ஆக்கமில்லா வழிவிடுத்து, 
அடியரென்று வாழும்போது, 
தாக்க வந்தால் அது தடுத்து, 
தாங்கிக் காப்பது, தூது!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

தவறான தீர்ப்பு!

தப்பான தீர்ப்பு!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:24-25.  

24  அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,

25  கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  

எப்பிழையும் செய்யாத 

இயேசுவைக் கொல்கின்றார்.  

அப்பழுக்காம் பரபாசை, 

அழைத்தும் செல்கின்றார்.    

தப்புகளைத் தருமமென்று,  

தலைவர்களும் சொல்கின்றார்.    

இப்புவியில் இத்தவற்றை,  

எதிர்ப்பவரே வெல்கின்றார்!

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

2021

2021-ஆம் ஆண்டு வாழ்த்துகள்! 

இருபது இருபது  உலர்கிறதே.  
இருபத்தொன்றாய் மலர்கிறதே.  
அறுபது எழுபது தளர்கிறதே.  
ஆனால் அருளும் வளர்கிறதே.  
வருவது எதுவெனத் தெரியலையே;
வாழ்க்கைப் புதிரும் புரியலையே.  
தருவது இறைதான், குறையிலையே;  
தாங்குமிவரன்றி, நிறைவிலையே!  

-கெர்சோம் செல்லையா.

அன்று நடந்தத் தேர்தல்!

அன்று நடந்தத் தேர்தலிலே!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:23.  
23  அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.   
கிறித்துவில் வாழ்வு:  
அன்று நடந்தத் தேர்தலிலே,  
அவர்கள் ஏசுவை ஏற்கவில்லை.  
நன்றி மறக்கும் மனிதர்களும்,
நன்மை நாடிப் பார்க்கவில்லை.  
தொன்று தொட்டு தெரிகிறதே;    
தூய்மையாளர் வெல்வதில்லை.  
இன்று இதனால் அரசியலுள்,  
இன்பண்பாளர் செல்வதில்லை!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

கூட்டம் கூட்டி!

கூச்சல் !

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:20-22.
20 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.21 அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.22 அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.


கிறித்துவில் வாழ்வு:
கூட்டங்கூட்டி கூச்சலெழுப்பி,

குருசிலறையக் கேட்போரே,

சாட்டுங்குற்றம் பொய்யோயென்று,

சற்றேனும் நீர் நினைத்தீரா?

ஆட்டம்போடும் அநீதி யாவும்,

அப்படியுமக்கே எதிராயின்,

வாட்டந்தீர்க்க யார் வருவார்?

வருந்தும் நாளை நினைப்பீரா?

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!  

புவியினில் தோன்றிய மனிதர்களில்,  
புனிதர் இவர்போல் ஒருவரில்லை.  
அவர்களில் அறிஞரை எண்ணுகையில்,
அருள்தர ஏசுபோல் யாருமில்லை.  
இவரது பிறப்பின் அதிசயம்போல்,  
யாரும்  மண்ணில் பிறக்கவில்லை.  
தவறிடும் மனிதர் உணருகையில்,   
தருகிற வாழ்வும் இறப்பதில்லை!  


-கெர்சோம் செல்லையா.  
“இறையன்பு இல்லம்”,
எண். 24, செக்ரெட்டேரியட் காலனி,  
இலட்சுமிபுரம், இரட்டை ஏரி,
குளத்தூர், சென்னை- 600099.  

யாரை விடுவிப்பீர்?  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 17-19.  

17  பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.

18  ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.

19  அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலை பாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  

யாரை விடுவிப்பார் என்று,  

இன்று கேட்பின் இந்நாட்டில்,  

ஊரை ஏய்ப்பார் விடுதலையாவார்.  

உண்மைதானே, நண்பர்களே?   

நீரை இன்று பாலே என்று,  

நீட்டுவோரின் கூட்டமைப்பில்,  

கூரை இல்லா எளியவருக்கு,   

கொடாரே நீதி, எண்ணுங்களே!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.