பேசாமல் பேசுகிறார்!

பேசாமல் பேசும் இயேசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:8-9.  

8   ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,

9   அநேக காரியங்களைக் குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.  

கிறித்துவில் வாழ்வு:  

காண விரும்பும் ஏரொது.

காட்டும் ஆவல் புரியுது.  

நாண மறுக்கும் அவனது,   

நஞ்சு நெஞ்சும் பெரியது.

வாண வெடியைப் போலிது 

வராத தூது, அரியது.  

பேண மறுக்கா மகனது, 

பேசா வாக்கில் தெரியுது! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

தட்டிக் கழிக்கும் பொறுப்பு!

தட்டிக் கழிக்கும் பொறுப்பு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:6-7.  

6   கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,

7   அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.  

கிறித்துவில் வாழ்வு:  

தட்டிக் கழிக்கும் பொறுப்பும்,

வெட்டிக் கழிக்கும் பொழுதும்,  

ஒட்டிக் கொள்ள நாமும்,  

கட்டில் மேலே பிணமாம். 

குட்டிப் போடும் கடனும்,  

வட்டிக் கட்டா முதலும்,   

விட்டுப் பெருக வீடும், 

கெட்டுப் போன மணமாம்!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

கலகக்காரனா இயேசு?

கலகக்காரனா?

கிறித்துவின் வாக்கு:  லூக்கா  23:5.  5   அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.     

கிறித்துவில் வாழ்வு:  
நற்செய்தி கூறும் இடங்களிலே,  
நம்மை எப்படிப் பார்க்கின்றார்?  
கற்பனையிலும் நாம் நினையாத,  
கலக்காரருள் சேர்க்கின்றார்.  
முற்காலத்திலும் இப்படித்தான்;  
மூடர் இறையை வெறுக்கின்றார்.  
சொற்போர் புரியா இறைமகனும்,  
சிலுவை ஏறிப் பொறுக்கின்றார்!  

ஆமென்.

குற்றமில்லை!

குற்றமில்லை என்றறிந்தும்….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:4.  

4   அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.  

கிறித்துவில் வாழ்வு:  
குற்றம் இல்லை என்று தெரிந்தும்,  
கொடுக்க மாட்டார் விடுதலை.  
சுற்றம் கேட்கும் தீர்ப்பினையே, 
சொல்லிச் சேர்ப்பார் கெடுதலை.  
விற்றுச் செல்லும் நடுவர் இருப்பின்,  
வீழ்ந்து விடுமே அத்துறை. 
கற்றறிந்தோர்கள் தவறு திருத்தின்,   
காண்பார் அவரில் திருமறை!  
ஆமென்.

அரசன் இயேசு !

இயேசு அரசன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:3.  

3   பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  
இறங்கு முன்பே இறைவனானீர். 
இரக்கத்தாலே மனிதனானீர்.  
உறங்குவோரை எழுப்பலானீர்.  
உழைப்பிலும் நீர் அடிமையானீர்.  
சிறந்து வாழ உரைக்கலானீர்;  
சொற்படியே உண்மையானீர். 
இறந்து எழுந்து மீட்பரானீர்;
இயேசரசே, நீர் எல்லாமானீர்!
ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

குற்றமற்றோர்மீது குற்றம் சாட்டல்!

முடிவெடுத்துக் கூறும் குற்றச்சாட்டு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:1-2.
1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

கொல்லும் முடிவை முதலில் எடுப்பார்;
குற்றச்சாட்டைப் பிறகு தொடுப்பார்.
நல்லோர் என்று காட்சி கொடுப்பார்.
நம்பவைத்தே யாவும் கெடுப்பார்.
இல்லந்தோறும் மறைந்து இருப்பார்.
எண்ணும்போதோ வெளியே பெருப்பார்.
எல்லாம் காணும் இறையும் பொறுப்பார்,
எனினுமிவரோ இயேசை வெறுப்பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா

இயேசு யார்?

இயேசு யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:66-71.  

66  விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

67  நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.

68  நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.

69  இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.

70  அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.

71  அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

கொன்றுபோடும் எண்ணம் கொண்டு,  

கொடியோர் கேட்ட கேள்வியினை,  

இன்று நமது நாட்டோர் கேட்டால் ,  

என்ன சொல்வீர் இயேசுவினை?  

அன்று இயேசு மொழிந்தது போன்று, 

அவரை இறைமகன் என்றழைப்பேன். 

நன்று என்று ஏற்கும் வரைக்கும்,  

நாட்டோருக்கு நான் உழைப்பேன்!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

எந்தன் வாயைப் பூட்டுமே!

எந்தன் வாயைப் பூட்டுமே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:63-65.  

63  இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,

64  அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,

65  மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

கண்ணைக் கட்டி முகத்திலறைந்து,

கடுஞ்சொல் எடுத்துத் திட்டவே,  

விண்ணின் அரசர் பேசாதிருந்தார்;   

விடுதலை வாழ்வு காட்டவே.    

மண்ணின் மக்கள் நம்மைச் சுற்றி,  

மதியிலா வாக்கு கொட்டவே,    

எண்ணிப் பார்ப்போம் இயேசுவையே;   

எந்தன் வாயும் பூட்டுமே!    

ஆமென்.   

-கெர்சோம் செல்லையா.  

திரும்பிப் பார்க்கிறார்!

திரும்பிப் பார்க்கிறார்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:61-62.  

61  அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,

62  வெளியே போய், மனங்கசந்து அழுதான்.  

கிறித்துவில் வாழ்வு:  

திரும்பிப் பார்த்த இயேசுவைக் கண்டு,  

திருந்தி அழுதார் பேதுரு.  

விரும்பிப் பார்க்கும் விண்ணோன் கண்டு,  

வேண்டிக் கேட்டால் புதுவுரு.  

அரும்பித் தோன்றி மலரும் முன்னே, 

அழியச் செய்யார் அழைப்பு. 

கரும்பின் சாறாய் கனி தருவோமே.   

கடவுளுக்கதுதான் உழைப்பு!  

ஆமென்.

மரம் வெட்டுகிறேன்!

மரம் வெட்டுகிறேன்!  
காயும் வெயிலிற்கு, காற்றாகும் என நினைத்தேன்.
சாயும் நிலை வந்து, சரிந்து நீ போனாயே.  
பாயும் மின்னிணைப்பு , பற்றிடுமோ எனத் தவித்தேன்;  
ஆயும் நிலையிழந்து,  அகற்ற நான் வெட்டுகிறேன்.  
வாயும் வயிறு என்று, வருந்துகிற மனிதருக்கு,  
நீயும் நிழல் கொடுத்து, நெடுநாட்கள் பணிபுரிந்தாய். 
நாயும் விலங்குகளும், நன்றியில் உனைப் பார்க்கும்.   
தேயும் மனிதரிடம் தேடாதே, நான் கொட்டுகிறேன்.  

-கெர்சோம் செல்லையா.