இப்படிக் கற்போர்!

இப்படிக் கற்று மருத்துவராவோர்,
எப்படி நம்மை நடத்திடுவார்?
அப்புறம் உடுக்க ஒன்றுந்தராமல்,
குப்புறம் படுக்கக் கிடத்திடுவார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, meme and text

இழக்க இனி எதுவுமில்லை!

இழக்க இனி எதுவுமில்லை!
நற்செய்தி மாலை: மாற்கு 15:24.
” பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
துறந்து வாழும் தூயவர்கூட,
துணிகள் களைந்து இருப்பதில்லை.
மறந்து தூங்கும் வேளையில்கூட,
மானம் இழக்க விரும்பவில்லை.
இறங்கி வந்த இறைமகனுக்கோ,
இழக்க வேறினிப் பொருளுமில்லை.
சிறந்த உடையாம் மீட்பைப் பெறவே,
சிலுவையன்றி அருளுமில்லை!
ஆமென்.

Image may contain: one or more people

மயங்கும் நிலையில் …

மயங்கும் நிலையில் …
நற்செய்தி மாலை: மாற்கு 15:22-23.
“அவர்கள் ‘ மண்டைஓட்டு இடம் ‘ எனப்பொருள்படும் ‘ கொல்கொதா ‘ வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்; அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.”
நற்செய்தி மலர்:
மயங்கிய நிலையில் உயிரைக் கொடுக்க,
மைந்தன் இயேசு விரும்பவில்லை.
இயங்கிய நாளிலும் குடித்து வெறிக்க,
எவர் பின்னாலும் திரும்பவில்லை.
புயங்கள் தொங்க இறக்கும் மனிதர்
போளம் குடிப்பதில் தவறுமில்லை.
உயர்ந்த வாழ்வு வாழ்பவருக்குள்,
ஊற்றிக் குடிப்போர் எவருமில்லை!
ஆமென்.

Image may contain: 1 person, standing

குருசு சுமப்பார் குடும்பம்!

குருசு சுமப்பார் குடும்பம்!
நற்செய்தி மாலை: மாற்கு 15: 21.
“அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.”
நற்செய்தி மலர்:
ஏழை, கறுப்பர், இன்னொரு இனத்தார்
எதிர்ப்புறம் வந்தால் என்னாகும்?
தாழ்வாய்க் கருதி, தம்சுமை வைப்பார்,
தவறும் இடமது என்றாகும்.
கோழை போன்று குருசு சுமப்பார்
குடும்பம் பின்னர் என்னாகும்?
வாழை அடியில் வாழையாகி,
வளருந் தலைமுறை என்றாகும்!
ஆமென்.

No automatic alt text available.

பாவத்தைப் பார்த்து மௌனமாயிருத்தல்…

பாவத்தைப் பார்த்து மௌனமாயிருத்தல்…
நற்செய்தி மாலை: மாற்கு 15: 16-20.
“பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி, ‘ யூதரின் அரசே வாழ்க! ‘ என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர். அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.”
நற்செய்தி மலர்:
காவலர் செய்யும் தீதுகள் கண்டு,
கலங்கிக் கண்ணீர் வடித்ததுண்டா?
ஏவலர் இவரது மீட்பிற்கென்று,
இளகிய நெஞ்சால் துடித்ததுண்டா?
கேவலம் என்று இவர்களும் உணர,
கிறித்துவின் அன்பில் அழைத்ததுண்டா?
பாவத்தைப் பார்த்து மௌனமாயிருத்தல்,
பாவமே ஆகும், உழைத்ததுண்டா?
ஆமென்.

Image may contain: 1 person

கூட்டம்போடும் கூச்சல் கேட்டு!

கூட்டம்போடும் கூச்சல் கேட்டு!
நற்செய்தி மாலை: மாற்கு 15:14-15.
“அதற்குப் பிலாத்து, ‘ இவன் செய்த குற்றம் என்ன? ‘ என்று கேட்க, அவர்கள், ‘ அவனைச் சிலுவையில் அறையும் ‘ என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.”
நற்செய்தி மலர்:
கூட்டம் போடும் கூச்சலுக்கிணங்கி,
கொடுக்கும் தீர்ப்பு அறமாமோ?
ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி,
அடிமையாதலும் திறமாமோ?
மாட்டிற்காகப் பொங்கும் மக்கள்,
மனிதரைக் கொல்தல் முறையாமோ?
வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும்,
விண்ணின் அறத்தில் குறையாமோ?
ஆமென்.

No automatic alt text available.