குடிப்பார், வெறிப்பார்…

நற்செய்திமாலை: மாற்கு 6:25-29.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ‘ திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும் ‘ என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.”
நற்செய்தி மலர்:
குடிப்பார், வெறிப்பார், கூப்பிடுவார்;
கொடுக்கும் வாக்கால் குழம்பிடுவார்.
நொடிப்பார்,வெடிப்பார், நொந்திடுவார்;
நிம்மதி தேடி அழுதிடுவார்.
துடிப்பார் தெளிவார், தேடிடுவார்;
தெய்வத்தின் வாக்கில் களிப்புறுவார்.
பிடிப்பார் இறைவன் பேரருளால்,
பேதமை நீக்கி வாழ்வளிப்பார்!
ஆமென்.

கோர்த்தாடும் மானிடரே …

கோர்த்தாடும் மானிடரே!
நற்செய்தி மாலை: மாற்கு 6:21-24
“ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ‘ உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் ‘ என்றான். ‘ நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன் ‘ என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ‘ நான் என்ன கேட்கலாம் ? ‘ என்று தன்தாயை வினவினாள். அவள், ‘ திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள் ‘ என்றாள்.”
நற்செய்தி மலர்:
பார்த்தாடும் பரத்தையர்கள்
பறித்திடுவார் வீடு.
ஆர்த்தாட வழிவகுக்க,
அழிந்திடுமே நாடு.
கோர்த்தாடும் மானிடனே,
கொணர்கின்றாய் கேடு!
வேர்த்தோடி விட்டுவிட்டு,
விண்ணரசை நாடு!
ஆமென்.