வீட்டிலும் போதிப்பீர்!

வீட்டாருக்கும் சொல்வோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:30-32.

30  மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

31  அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.

32  லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:

கொடுப்பவர் வெறுத்து, கொடுப்பதை விரும்பும்,

கொடிய உலகமடா. கோணல் பாதையடா.

எடுப்பவர் அறியார், எடுப்பதும் தெரியார்,

 இல்லை நேர்மையடா, இவரும் பேதையடா.

அடுப்பவர் நினைத்து, அவரை அணைத்து,

அவருக்குதவிடுடா, அதுதான் நீதியடா.

விடுப்பவர் வீழ்வார், வெந்தும் போவார்;

விடுதலை இல்லையடா, வீட்டில் போதியடா!

ஆமென்.

தவறு!

வாழவந்த ஏழையரை, வதக்குவதும் தவறு.

வாழ்விழந்து போவோரை மடக்குவதும் தவறு.

தாழவுள்ளோர் எனக்கருதித் தண்டிப்பதும் தவறு.

தலைகுனிய வைத்தாரே, தவற்றின்மேல் தவறு!

-கெர்சோம் செல்லையா.

எண்ணடி இறைவாக்கு!


எண்ணடித் தமிழ்ச் சொல்லில்

யான் திருந்த எழுதுகின்றேன்.

பண்ணடா பாட்டு என்றார்;

பழந்தமிழைத் தழுவுகின்றேன்.

மண்ணடி அழைக்கு முன்னர்

மறைவாக்கால் கழுவுகின்றேன்.

விண்ணரசர் ஆளுகின்றார்;

விடுதலையில் தொழுகின்றேன்!


-கெர்சோம் செல்லையா.

வேறுபிரிக்கத் தெரியாதார்!

வேறு பிரிக்கத் தெரியாதார்!

வெங்காயமா, வெள்ளைப் பூண்டா?
வேறு பிரிக்கத் தெரியாதார், 
இங்கே வந்து எதையோ சமைத்து,
இதையமுதாய் உண்ணு என்றார்.

பொங்காதவரா, பொன் சேர்ப்பவரா?
பொருளியல் அறிவு இல்லாதார்,
எங்களையாளும் நிலையிலுயர்ந்து,
இடியமீனாய் எண்ணுகின்றார்!

-கெர்சோம் செல்லையா.

உலோத்துவின் நாள் போன்று!

உலோத்துவின் நாளைப் போல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:28-29.

28  லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.

29  லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.

கிறித்துவில் வாழ்வு:
உலோத்துவின் நாளில் நடந்ததுபோலே,
இன்றைய நாளிலும் இலாத்துகிறார்.
ஆத்திரக்காரராய் அடையத் துடித்தே,
அடங்கா உணர்ச்சியை ஏத்துகிறார்.
பூத்திடும் பிஞ்சு நிலையில் பழுத்தே,
புவியில் பலபேர் பீத்துகிறார்.
காத்திருக்காது அழிவோர் பார்த்தே,
கடவுளில் வருவீர், தேத்துகிறார்!
ஆமென்.

எலிப்பொறி!

பொறிக்குள் விழுந்த எலிகள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:26-27.
26  நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

27  நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

கிறித்துவில் வாழ்வு:

நெறிக்குள் வாழ வெறுத்திடுவார்;

நேர்மைப் பேச்சும் மறுத்திடுவார்.

வெறிக்கும் கள்ளை விரும்பிடுவார்;

விடிந்த பின்னும் அருந்திடுவார்.

பொறிக்குள் விழுகிற எலியாவார்

போகும் வழியிலும் பலியாவார்.

பறிக்கப்படுகிற வாழ்வுணர்வார்.

பாவி ஆயினும் மீள்வுணர்வார்!

ஆமென்.

தந்தையின் அழுகை!

தந்தையின் அழுகை!

பிள்ளையை நினைத்து அழுகிற தந்தை, 

புலம் பெயர்ந்தோர் அடைகிற நிந்தை.


தள்ளி ஒதுக்கிடும் தனியார் சந்தை.


தாங்காது நன்மக்கள் சிந்தை.

எள்ளளவாவது இரக்கம் கொண்டு,


எளியரும் இந்தியர் என்று கண்டு,


கொள்ளை போடாச் சீரிய தொண்டு,


கொடுக்குமரசு  எங்கு உண்டு?

-கெர்சோம் செல்லையா.

விதையின் கவிதை!

விதையின் கவிதை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:22-25.

22  பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.

23  இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

24  மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.

25  அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணின் ஆட்சி  வேண்டும் நாமும்,

விதையின் பண்பை மறப்பது ஏன்?

தண்ணீர் காணா நிலத்தினுள்ளும்,

தன்னை விதையும் மறைப்பது ஏன்?

மண்ணுள் விதைகள் தாழாவிட்டால்,

மரஞ்செடி, பழங்கள் எங்கு வரும்?

எண்ணும் நாமும் தாழ்மைகொண்டால்,

இறைவனரசு இங்கு வரும்!

ஆமென்.

எளியர் வாழ வேண்டும்!

எளியரை மீட்கும் ஆட்சி!
தன்னலம் கொண்டு ஆள்வதும் வேண்டாம்;
தவற்றினை விற்று வாழ்வதும் வேண்டாம்.
பொன்பொருள், தரகு வாங்கவும் வேண்டாம்; 
பொது நலன் யாவும் தூங்கவும் வேண்டாம்.


இன்னில எளியர் மீண்டிட வேண்டும்;
இதற்கென நிற்போர் ஆண்டிட வேண்டும்.
அன்னிலை அமைய இறையை வேண்டும்;
அவரது அன்பு நிறைய வேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

எப்போது வரும் இறையரசு?

எப்போது வரும் இறையரசு?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:20-21.

20  தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

21  இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

எப்போது இறையின் அரசு வரும்,

என்றிங்கு  யாவரும் கேட்கும்படி,

இப்போது அரசுகள் இருப்பதனால்,

இன்றைக்கே பதில் தெரிவோமே.

தப்பாது வாக்கை நிறைவேற்றும்,

தந்தையின் விருப்பில் நாம் நடந்தால்,

அப்போது இறையும், இறையரசும்,

அகத்தில் வருவது, அறிவோமே!

ஆமென்.