இயேசுவே பதில்!

பதிலும் வரும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:25-26.

25  அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

26  அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

பிறப்பு வரும், பின்னால் வாழ்க்கை வரும்.

பிணிகள் வரும்,  பிழைக்கும் நலமும் வரும்.

சிறப்பு வரும், சிறுமையைத் தாண்டின் வரும்.

சிரிப்பும் வரும், சிந்தும் நீரினிலே வரும்.

இறப்பு வரும், இதன்பின் என்ன வரும்?

இறவா நிலைவாழ்வு எங்கு வரும்?

பறப்பு வரும், பற்பல வினாவும் வரும்.

பதிலும் வரும், பரிசு ஏசுவிலே வரும்!

ஆமென்.

ஒடுக்கப்பட்டோர்!

ஒதுக்கப்பட்டோர் உயர்வார்!
கிறித்துவுவின் வாக்கு: லூக்கா 16:22-24.
22  பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.23  பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.24  அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
கிறித்துவில் வாழ்வு:
ஒதுக்கப்பட்ட ஏழையர் அன்று,
உருகிய காட்சி கண்டோரே,
செதுக்கப்பட்ட சிலைபோல் நின்று,
சொல்கிற சாட்சி கேட்பீரே.
பதுக்கப்பட்ட செல்வம் என்று,
பரிவின் இரக்கம் கொண்டோரே,
பிதுக்கப்பட்ட எளியர் இன்று,
பேசும் விடுதலை ஏற்பீரே!
ஆமென்.

கண்ணில் காணும் ஏழை!

கண்ணில் காணும் ஏழை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:19-21.

19  ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

20  லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

21  அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணில் ஆளும் இறைதான் இன்று,

வீட்டின் முன்னே கிடக்கின்றார்.

கண்ணில் கண்டும் ஏழையர் என்று,

கனியார் கல்போல் கடக்கின்றார்.

மண்ணில் இறையைத் தேடிக் கொண்டு,

மதியார் மலையிலும் நடக்கின்றார்.

உண்ணும் வீட்டில் கொடாரைக் கண்டு,

ஒளியும் இறையோ அடக்கின்றார்! 

ஆமென்.

அறிவா? அறிவீனமா?

இந்தியனாக எழுதுகிறேன்!

இதை வாசிக்கவே பலர் மறுக்கலாம்; சிலர் வெறுக்கவும் செய்யலாம். எனினும் உங்கள் எண்ணத்தை, எழுத்தை நான் மதித்து வாசிப்பதுபோல இதையும் வாசிக்க வேண்டுகிறேன்.

இந்தியன் ஒருவன், இயேசு கிறித்துவே தனக்கு எல்லாம் என்று நம்பிக்கொண்டு, அவரது அன்பையே வாழும் வழி முறையாகக் கொண்டு, இந்தியாவில் வாழ முடிவெடுத்தால், இந்தியாவிற்கு அதனால் கேடுகள் வருமா? பிற இந்தியருக்கு அவனால் பாடுகள் வருமா?

வரும் என்று எண்ணி, பலர் எழுதுவதும், எச்சரிப்பதும், இடர்கள் கொடுப்பதும், சிலருக்கு ‘அறிவு’ என்றும், ‘ஆன்மிகம்’ என்றும், இன்னும் ஒருபடி மேலேறி, ‘இந்திய நாட்டுப் பற்று’ என்றும் தெரிகிறதே!, இது அறிவா? இல்லை, அறியாமையா?

கடவுளிடம் அன்புகொள்; காணும் மனிதரிடமும் (அயலாரிடமும்) அன்புகொள்! இதுதானே இயேசுவின் திருவாக்கு.

துன்புறுத்தும் நிலையிலும் வன்முறையை நாடாது, அன்புகொள்வதுதானே அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறை.

இதைச் சொல்ல உரிமையும், இதன்படி வாழ உரிமையும் கொடுத்த நாடு, என் இந்திய நாடு. இந் நாட்டைப் போற்றுவதும், இந்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதும் இந்நாட்டில் பிறந்த எனது கடமையல்லவா?

நாடு என்பது, பலருக்கு மண்ணாகத் தெரியலாம். அதை விரும்பி, நாட்டுப் பற்று என்று சொல்லலாம். மண்ணும், நிலமும், மாபெரும் மலையும், தண்ணீர் ஆறும், தருகிற வளமும், மட்டுமா நாடு? அவற்றை மட்டும் போற்றுவதுவா நாட்டுப் பற்று?

நாட்டின் மண்ணை விரும்புவோரே, நாட்டில் வாழும் அல்லது வாடும் மனிதரைப் பாருங்கள். அவர்கள் உங்கள் இனம், மொழி, இடம், சாராதவர்களாய் இருக்கலாம்; அல்லது சமயம், பண்பாடு, கொள்கைகளைச் சேராதவர்களாய் இருக்கலாம். அல்லது செல்வங்கள், சொத்துக்கள் பாராதவர்களாய் இருக்கலாம். ஆயினும் அவர்களும் இந்தியர்களே. அவர்களை வெறுத்து, அவர்கள் வாழும் மண்ணை மட்டும் விரும்பினால் அது நாட்டுப் பற்றாகுமா?

இவர்கள் மீது அன்புகொள் என்கிற கிறித்துவின் வாக்கு, எப்படி இந்திய நாட்டுப் பற்றிற்கு எதிராகும்? இதைப் பின்பற்றும் கிறித்தவர் எப்படி இந்திய எதிரியாக இருக்க முடியும்? அன்பும், நன்மையையுமே அறவழியாகும். அவற்றை எதிர்ப்பது அறியாமையேயன்றி வேறு எதுவாகும்?

இந்த அறியாமையை அறிவு என்றும், இதுவே நாட்டுப் பற்று என்றும் தொடர்ந்து பேசுகிற, எழுதுகிற, ‘அறிஞர்’ பெருமக்களே, உங்கள் எண்ணங்களில் அன்பு பிறவாதவரை, உங்கள் பேச்சு வீண், உங்கள் எழுத்து வீண், உங்கள் செயல்கள் வீண்; உங்கள் வாழ்க்கையுமே வீண்.

வீணாய் வாழ்ந்து வீணாய்ப் போவதைவிட, அறிவை நாடுங்கள்; அன்பில் பிறக்கும் இறையறிவைத் தேடுங்கள்.

அன்பிலா வாழ்வில் அறிவுமில்லை!

அயலார் வெறுத்தல் நெறியுமில்லை.

வன்முறை வாழ்க்கை வழியுமில்லை;

வாழ உதவுவோம், பழியுமில்லை!

-கெர்சோம் செல்லையா.

ஒருவனுக்கு ஒருத்தி!

ஒருவனுக்கு ஒருத்தி!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:18

18  தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.  

கிறித்துவில் வாழ்வு:

ஒருவனுகொருத்தி, ஒருத்திக்கொருவன்,

உலகில் எவர்க்கும் போதுமய்யா.

அருள்கிற இறைக்கு அடங்கா மனிதன்,

அவனது வீட்டினில் தீது அய்யா.

திருத்தம் வேண்டும், திறன்போல் வாழ்வேன்,

தெரிவித்தால், அது வாது அய்யா.

வருத்தம் வராத வாழ்வில் மகிழ்வீர்;

வழிமுறை இறையின் தூது அய்யா!

ஆமென்.

ஒழியாத வாக்கு!

ஒழியாத வாக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:17.

17  வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.  

ஒழியாத வாக்கு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:17.

17  வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.  

கிறித்துவில் வாழ்வு:

அழியாத செல்வம் எதுவெனக் கேட்டேன்,

அழிந்து மாளும் உலகத்திலே.

தெளியாத நாளில் சேர்த்தவை இழந்தேன்.

தேடிய எதுவும் நிலைக்கலையே.

விழியாலே எட்டா விண்ணைக் கேட்டேன்,

வெந்து நொந்து இருக்கையிலே;

ஒழியாத வாக்கை இறையிடம் பெற்றேன்.

உணர்ந்தோர் எவரும் தொலைக்கலையே!

ஆமென்.

இறையரசு!

இறையரசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா  16:16.
16  நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.  

இறையரசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா  16:16.
16  நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:
திருச் சட்டமும், தீர்க்கருரையும்,
தெரிவிக்கும் இறை வாக்கு,
இருட் கூட்டமும் இயலாமையும்,
இணைந்தோருக்கு இடி தாக்கு.
உருவடிவிலும் உயிரளிப்பிலும்,
உரைக்கிற இயேசு வாக்கு,
அருட்பொழிவிலும், அன்பமைப்பிலும்,
ஆள்வதால் அதை நோக்கு!
ஆமென்.

தன்னை உயர்வாய் எண்ணும் தன்மை!

தன்னை மேலோன் என்னும் எண்ணம்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:15.
15  அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. 
கிறித்துவில் வாழ்வு:
தன்னை உயர்வாய் எண்ணும் தன்மை,

தவறு என்று உணர்ந்தவர் யார்?
என்னைப் போலப் பிறரைப் படைத்த,
இறையின் வாக்கைக் கேட்பவர் யார்?
முன்னர் நிற்கும் மனிதர் முகத்தில்,
மும்மை தெய்வச் சாயலைப் பார்.
இன்னாள் இதனை ஏற்கா மனிதர்,
இகழ்வடையும் காட்சியும் பார்!
ஆமென்.

நீடிக்கும் ஊரடங்கு!

தொடரும் ஊரடங்கு!
நாற்பது நாட்கள் நோன்பிருக்கும்,
நம் திரு நாட்டின் உறவுகளே,
தோற்பது தொற்று நோயாயிருக்கும்.
தொடர்ந்து வீட்டில் வேண்டுங்களே.
ஏற்படுந் துன்பம் என்று போகும்,
என்றறியா நம் அரசுகளே,
பார்ப்பது யாரை? பாரும் ஏழை;
பரிவில் உதவி, தாண்டுங்களே!
கெர்சோம் செல்லையா. 

வாய்ப்பூட்டு!

வளர்ச்சியும் வாய்ப்பூட்டும்!

வளர்ச்சி என்ற வாக்கை வைத்து,
வந்தார் ஒருவர் ஆட்சிக்கு.
சுழற்சியாக உலகம் சுற்றிச்
சொன்னார் கதைகள் கட்சிக்கு.
தளர்ச்சியுற்ற நாட்டோருக்கோ,
தந்தார் சில அதிர் வேட்டு.
கிளர்ச்சி என்று எவரும் பேசார்;

கொரோனாகூட  வாய்ப்பூட்டு!

-கெர்சோம் செல்லையா.