நீடிய பொறுமை!

நீடிய பொறுமை வேண்டும்!கிறித்துவின் வாக்கு லூக்கா 18:6-8.
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

இலைமறை காயாய் ஒளிப்பதனால்,

இல்லை நேர்மை என்பீரா?

விலையாய்த் தீர்ப்பு அளிப்பதனால்,

வெறுத்து, தீமை தின்பீரா?

அலைபோல் ஆடும் உள்ளத்தை

அடங்கி இருக்கச் சொல்வீரா?

நிலை கண்டிறையும் இறங்கிடுவார்;

நீடிய பொறுமை கொள்வீரா?

ஆமென்.

நேர்மையற்றோர் முன்பு!

நேர்மையற்றோர் நடுவில்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:3-5.

3   அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.

4   வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,

5   இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

நேர்மையற்ற நடுவரும்,

நெறிமுறைதான் பேசுவார்.

கூர்மையற்ற அறிவினால்,

கொடுமையைத்தான் பூசுவார்.

யார் கொடுப்பார் தீர்ப்பு,

என்று ஏழை ஏங்குவார்.

பார் அறியும் இறைவனோ,

பரிவினில் தாங்குவார்!

ஆமென்.

வாழ்வு வந்தபோது!

வாழ்வு வந்தபோது!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:1-2.

1   சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

2   ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

கிறித்துவில் வாழ்வு:

தாழ்வு நோக்கிப் பெயர்கையிலே

தாங்கும் என்று அழுதவர்கள்,

வாழ்வு வந்து உயர்கையிலே,

வறியரை நினைக்கலையே.

ஏழ்மையென்று வெறுக்கையிலே,

இறைநிழலை மறுப்பதனால்,

கீழ்மையுற்று வருந்திடுவார்;

கிறித்தவரும் உணரலையே!

ஆமென்.

கொரோனாவிற்கு மருந்து!

கோயிலை மூடி விட்டோம்;
கொரோனா வராதுயென்று.
வாயினைக் கட்டி வைத்தோம்
வந்தாலும் தடுக்குமென்று.
நோயினில் விழுந்தவரை

நோகாமல் எழுவீர் என்று,
ஆய்வினில் மருந்து தந்து,
அருளுவீர் இறையே இன்று!

-கெர்சோம் செல்லையா.

இறைவன் எங்கே? உள்ளார் இறைவன் உள்ளில்; உணர்வீர் பற்று கொள்ளில். தள்ளார் விரும்பும் கோயில், தருவீர் நல்லுடல் வாயில். அள்ளார் செய்யும் சடங்கில், அருளார் நன்மை கிடங்கில். எள்ளார் இரங்கும் பண்பில்,  இருப்பார் இறையும் அன்பில்! -கெர்சோம் செல்லையா.

கழுகின் பார்வை!

கழுகின் பார்வை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:34-37.

34  அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.

35  திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.

36  வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

37  அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

மலைமேல் வாழும் கழுகின் கண்கள்,

மண்ணில் உணவைக் காண்பதுபோல்,

தொலைநோக்கோடு நாமும் பார்த்தால்,

தூயவர் அரசைக் கண்டிடுவோம்.

அலைபோல் இழுக்கும் அவரது வருகை,

அறியா நேரம் என்பதனால்,

இலைமேல் நீராய் இனியிருக்காமல்,

இயேசைப் பற்றிக் கொண்டிடுவோம்!

ஆமென்.

தன்னலம் நன்னலமா?

தன்னலம் நன்னலமா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:33.
33  தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.  

கிறித்துவில் வாழ்வு:
தன்னலம் இன்று தலைமேல் உயர்ந்து,
தலைவராய் உலாவும் நாட்டிலே,
அந்நலம் சிறந்த பொன்னலம் என்று,
அளக்கிறார் மூடர் வீட்டிலே.
இந்நிலை தொடர்ந்தால் இருளே பரவும்;
இதனை உணர்வோம் கூட்டிலே.
நன்னலம் என்பது பிறர் நலமாகும்;
நவில்வோம் வாழ்க்கைப் பாட்டிலே!
ஆமென்.

புலம் பெயர்ந்தோர்!

வாழவந்த ஏழையரை, வதக்குவதும் தவறு.

வாழ்விழந்து போவோரை மடக்குவதும் தவறு.

தாழவுள்ளோர் எனக்கருதித் தண்டிப்பதும் தவறு.

தலைகுனிய வைத்தாரே, தவற்றின்மேல் தவறு!

-கெர்சோம் செல்லையா.

வீட்டிலும் போதிப்பீர்!

வீட்டாருக்கும் சொல்வோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:30-32.

30  மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

31  அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.

32  லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:

கொடுப்பவர் வெறுத்து, கொடுப்பதை விரும்பும்,

கொடிய உலகமடா. கோணல் பாதையடா.

எடுப்பவர் அறியார், எடுப்பதும் தெரியார்,

 இல்லை நேர்மையடா, இவரும் பேதையடா.

அடுப்பவர் நினைத்து, அவரை அணைத்து,

அவருக்குதவிடுடா, அதுதான் நீதியடா.

விடுப்பவர் வீழ்வார், வெந்தும் போவார்;

விடுதலை இல்லையடா, வீட்டில் போதியடா!

ஆமென்.

தவறு!

வாழவந்த ஏழையரை, வதக்குவதும் தவறு.

வாழ்விழந்து போவோரை மடக்குவதும் தவறு.

தாழவுள்ளோர் எனக்கருதித் தண்டிப்பதும் தவறு.

தலைகுனிய வைத்தாரே, தவற்றின்மேல் தவறு!

-கெர்சோம் செல்லையா.