தூங்காதீர்!

தெய்வத்தின் முன்பு தூங்காதீர்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:45-46.  

45  அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:

46  நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

இக்கட்டு சோதனை இன்னல் யாவும்,  

இறைவனின் செயலாய் எண்ணாதீர்.  

மக்கட்கு துன்பம் தந்தை தராரே,   

மனதிலும் தவறு பண்ணாதீர்.  

எக்கட்டு கட்டி, அலகை வந்தாலும்,    

இயேசு இருக்கிறார், ஏங்காதீர்.  

திக்கற்று நிற்போர் வேண்டல் கேட்பார்;   

தெய்வத்தின் முன்பு தூங்காதீர்!   

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.

வேர்வையும் மாறிற்றே!

வேர்வை குருதியாகும்படியாய்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:43-44.  

43  அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

44  அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

கிறித்துவில் வாழ்வு:  

கூர்மை ஆயுதம் குத்தும்போது,    

குருதி எவ்விதம் வடிந்திடுமோ,  

வேர்வை சிந்தி வேண்டியபோது, 

வேந்தனில் அவ்விதம் படிந்ததுவே.  

நேர்மை போதும் என்கிறபோது,  

நிகழும் துன்பம் வருத்திடுமோ?  

ஆர்வமாக வேண்டுதல் செய்வீர்;  

ஆண்டவர் அருளும் பெருத்திடுமே!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

இறைவிருப்பு!

இறைவிருப்பு! கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:39-42. 39 பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.40 அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,41 அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

கிறித்துவில் வாழ்வு:

வன்முறை போற்றி, வாளெடுத்தால்,

வாழ்வு கிடைக்கும் என்பவனே,

உன்முறை ஒட்டி, ஊர் நடந்தால்,

உயிரோடிருப்பவர் யார் மகனே?

தன்முறை அப்படி அல்ல என்று,

தாழும் இயேசுவைப் பார்ப்பவனே,

நன்முறை என்பது இறை விருப்பாகும்,

நம்பி இயேசுவைச் சேர் மகனே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஆயுதம் எடாதீர்! கிறித்துவின் வாக்கு : லூக்கா 22: 35-38. 35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கொடியோன் என்னும் குற்றச்சாட்டை,

கிறித்துவும் நமக்கென எற்றாரே.

அடியார் கைகளில் ஆயுதமிருக்க,

அதனால் அப்பெயர் பெற்றாரே.

விடியா வாழ்வை விரைவுபடுத்த,

வீணாம் வன்முறை நாடாதீர்.

பொடியாய்ப்போனோர் பலபேருண்டு;

புரிந்து ஆயுதம் எடாதீர்!ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஒளிநாள் வாழ்த்து!

ஒளிநாள் வாழ்த்து!  

வெடித்துக் குப்பை போடுவதாலே
வீதியில் மாசு கூடிடுமே.
வெளிச்சம் வீசும் விளக்கினாலே,  
வேண்டா இருளும் ஓடிடுமே.  
பிடித்துக் கொள்ளும் அறிவினாலே,  
பிறர்க்கு நன்மை செய்திடுமே.    
பேச்சில், செயலில் ஒளிவந்தாலே,  
பெரிய இன்பம், எய்திடுமே!


-செல்லையா,
இறையன்பு இல்லம்,  
24, செக்ரெட்டேரியட் காலனி,  
சென்னை-600099.

மறுதலிப்பு!

மறுதலிப்பு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:34.  34  அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  
நெருக்கும் கொடியோர் வரும்போது,    
நெருங்கிய உறவும் ஒதுங்கிடுமாம்.  
சுருக்கும் கயிற்றைத் தரும்போது,  

சுவைக்கிற நட்பும் பதுங்கிடுமாம்.   
மறுக்கும்  பேதுருபோல் நமது,  

மனங்கள் இருப்பின் வருந்திடுமாம்.  
இருக்கும் உண்மை  நிலைமையிது;  
இயேசு நோக்கின் திருந்திடுமாம்!  
ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

உணர்ச்சிப் பேச்சு!

Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its  origin from emotion recollected in tranquility. De… | Thought provoking  quotes, Quotes, Poetry

உணர்ச்சிப் பேச்சு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:33.    

33  அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:  

உணர்ச்சிப் பெருக்கால் பொழிதல் வேறு;  

உணர்த்தும் இறையால் மொழிதல் வேறு.    

கணக்குப் பார்த்து உழைத்தல் வேறு;  

கடவுளுக்காக இழத்தல் வேறு.  

மணக்கும் கிறித்தவத் தாழ்மை வேறு;  

மனிதர் விரும்பும் ஆளுமை வேறு.  

இணைக்கும் இறையால் வேறு வேறு, 

என்றறிந்தால் பேறு பேறு!   

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

நலமடைந்து நலப்படுத்து!

நலமடைந்து நலப்படுத்து!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:31-32.  

31  பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

32  நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

இரு விழி இழந்தோர் தெரு வழி காட்டின்,  

ஒரு விழியுடையோர் ஏற்பாரா?  

திரு மொழி அறிவைக் கற்க விரும்பின்,  

தெளிவில்லார்முன் நிற்பாரா?  

பெரு வழி காட்டும் இறையின் முன்னில்,

பேசித் திரிவார் சேர்ப்பாரா? 

கிருத்தவ வாழ்வைத் தம்மில் தொடங்கின்,  

கிறித்துவினடியார் தோற்பாரா?   

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

பெரும்பேறு!

பெரும்பேறு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:28-30.  

28  மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.

29  ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.

30  நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

உழைக்கும் பேறு, பெரும் பேறு.

உழியம் செய்வோரிடம் கூறு.  

தழைக்கும் வாழ்வு தருவதுடன், 

தலைவராக்குவார், அரசேறு.  

பிழைக்கும் பணியாய் எண்ணாது,

பேச்சுக் கலைபோல் பண்ணாது,  

கழைக்கூத்தாடும் மனிதருக்கு,  

காட்டு, செயலில் விண்தூது!  

ஆமென்.

மேன்மை அடைய !

மேன்மை காண, தாழ்மை பார்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22: 24-27.

24  அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.

25  அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.

26  உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.

27  பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.  

கிறித்துவில் வாழ்வு:  

எப்படி பெரியோர் ஆவது என்று,    

யாவரும் இங்கு ஏங்குகிறார்; 

தப்பித வழிமுறை எடுத்துக்கொண்டு,   

தலைவர் கனவில் தூங்குகிறார். 

இப்படி நாட்டோர் இருக்கும்போது,  

இயேசு போன்று வாழ்வோர் யார்?   

முப்படி அவரே அளக்கிறார், நம்பு;  

மேன்மை காண, தாழ்மை பார்!  

ஆமென்.  

-செல்லையா.