ஓடும் பேதுரு!

கிறித்துவில் வாழ்வு:  

மும்முறை மறுத்த பேதுரு இன்று,  
முதல்வனாய் அறிய ஓடுகின்றார்.  
இம்முறை கேட்பது சரியோயென்று,  
இயேசுவின் உடலைத் தேடுகின்றார். 
செம்மறை காட்டும் சீலைகள் கண்டு.  
சிந்தை நடுங்கவே ஆடுகின்றார்.  
தம்மிடம் இருக்கும் ஐயம் கொண்டு, 
தயக்கமுற்றவர் வாடுகின்றார்!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

வீண் பேச்சா?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:8-11.  

கிறித்துவில் வாழ்வு: 
பித்தென எண்ணிப் பிதற்றல் என்றது, 
பிரறல்ல, இயேசுவின் பிள்ளைகளே.
ஒத்துக் கொள்ள அவரை வைத்தது 
உயிர்த்த இயேசுவின் கல்லறையே.  
செத்தவர் உயிர்த்து எழும்பி வருவது, 
செரிக்க இயலா வல்லமையே.  
எத்தனையோ பேர் இதனைக் கண்டு,  
இயேசுவை நம்புதல் நல்லருளே!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

நினைவுகூருங்கள்!

நினைவுகூருங்கள்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:7  

கிறித்துவில் வாழ்வு: 
முன்பே உரைத்த இறைவாக்கு,  
முழுதும் நிகழ்வது நீ கண்டு,    

இன்றே இயேசுவை ஏற்றுக்கொள்;  
இனிய வாழ்வு உனக்குண்டு. 
அன்பே நமக்கு வழியென்று,  
ஆண்டவர் சொல்வது நீ கேட்டு,  
நன்றே உன்னைத் திருத்திக்கொள்.  
நன்மை தரவே இப்பாட்டு!  
-ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

இயேசுவின் உயிர்ப்பு!

இயேசுவின் உயிர்ப்பு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:5-6.  

கிறித்துவில் வாழ்வு:  


இறந்தவர் கிடக்கிற கூட்டத்திலே,  

எழுந்தவர் என்பவர் ஒருவரில்லை.   

பிறந்தவர் முடிக்கிற தோட்டத்திலே, 


பின்னர் நிகழ்வதும் தெரிவதில்லை. 


சிறந்தவர் இயேசு எழுகையிலே, 


சிதறின பழமை எண்ணங்களே. 


திறந்தவர் அவரைத் தொழுகையிலே, 

 
தெரியுது உயிர்ப்பின் வண்ணங்களே! 


ஆமென்.

உடலைத் தேடுகிறோம்!

உடலையே தேடுகிறோம்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 24:1-4.  

கிறித்துவில் வாழ்வு: 
அன்பர் இயேசுவின் உடல் தேடி,    
அங்கு சென்றனர் அப்பெண்கள். 
இன்பர் உயிர்த்த அறிவின்றி,   
ஏங்கிப் பார்த்தன அவர் கண்கள்.  
துன்ப நாட்களில் நாம்கூட,  
துயரில் பிணமே தேடுகிறோம்.  
நண்பர் இயேசு நம்முள்ளின்  
நல்லுயிர் மறந்து வாடுகிறோம்! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.   

ஓய்வு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:54-56.

கிறித்துவில் வாழ்வு: 
அச்சம் கொண்ட அடியார் அன்று, 
ஆண்டவர் ஏசுவைக் கைவிடவே,  
துச்சம் என்று துணிந்தோர் வந்து,  
தூயனை அடக்கம் செய்திட்டார். 
மிச்சம் இருந்த பெண்கள் நின்று, 
மீதிப் பணிகள் செய்திடவே, 
பச்சைச் செடிகள் படர்ந்த காவில், 
பரனும் ஓய்வு எய்திட்டார்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

நம்மில் நீதியில்லையே!

சாதியும் நீதியும்!

நீதியுள்ள நாட்டினிலே,

சாதியில்லையே.

சாதியுள்ள வீட்டினிலே,

நீதியில்லையே.

ஆதிநாளில் மக்களிலே,

சாதியில்லையே.

பாதியிலே மாக்களாக,

நீதியில்லையே- நம்மில்

நீதியில்லையே.

வீதிகளில் இணைகையிலே,

சாதியில்லையே.

மோதி நாம் பிணங்கையிலே,

நீதியில்லையே.

சேதி கூறும் தெய்வத்திலே,

சாதியில்லையே.

மீதி வைத்துச் செய்கையிலே,

நீதி இல்லையே- நம்மில்

நீதியில்லையே!

நீதியுள்ள நாட்டினிலே,

சாதியில்லையே.

சாதியுள்ள வீட்டினிலே,

நீதியில்லையே.

-கெர்சோம் செல்லையா.

நல்லடக்கம்!

நல்லடக்கம்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா  23:52-53.

கிறித்துவில் வாழ்வு:  
நல்லறை வீடு இல்லாரும்,  
நாட்டின் எதிரி என்பாரும்,  
கொல்லப்படுகிற வேளைகளில்,  
கொளுத்தப்படுவதைக் காண்போரே,
செல்லப் பிள்ளை இயேசுவிற்குச்  
சேர ஓரிடம் இலாதிருந்தும்,  
கல்லறை ஓன்று கன்மலையில், 
கட்டியிருந்ததைக் காண்பீரே. 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.   

தாழ்மை தரும் மேன்மை!

தாழ்மை தந்த மேன்மை!  
அரிமத்தியா யோசேப்பு!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:50-51.  

பிறக்கும்போதும் இருந்தது தாழ்மை;  
பிறருக்குதவும் பொழுதும் தாழ்மை. 
இறக்கும்போதும் இருந்தது தாழ்மை. 
இயேசு வாழ்வே தாழ்மை தாழ்மை.  
சிறக்கும்படியாய் வந்தது மேன்மை.  
சீர்மிகு அறிஞர் தந்தார் மேன்மை.  
உரக்கச் சொல்வோம் தாழ்வில் மேன்மை.  
உண்மைக்கென்றும் மேன்மை, மேன்மை! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

அண்டிக் கொள்வோம்!

அண்டிக் கொள்வோம் சிலுவையிலே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 48-49.  

கிறித்துவில் வாழ்வு:  
தொண்டர் துடித்தார் தொலைவினிலே. 
 துயரைத் தாங்கும் வலுவிலையே. 
பெண்டிர் வடித்தார் ஏங்கலிலே. 
பெருகும் கண்ணீர் தேங்கலையே.   
கண்டோர் அடித்தார் மார்பினிலே.  
காணா மக்கள் சார்பினிலே.         
அண்டிக் கொள்வீர் சிலுவையிலே. 

அருள் மாமழை பொழிகையிலே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.