பன்னிரு அடியர் ஆவியில் பொங்கி, பற்பல நாளில் வாக்குரைத்தார். அன்னிறை வாக்கை யூதரும் வாங்கி, அக்கரையற்றே அவ மதித்தார். பின்னொரு நாளில் மீட்பர் பிறப்பார்; பேசியபடியே எழுதி வைத்தார். சொன்னவர் மறவார் சொல்லும் துறவார்; சொற்படி நிகழக் காத்திருந்தார்!
ஏசேயா எரேமியா எசேக்கியெல், இவர்கள் பின்னால் தானியெல், மேசியா இயேசுவைக் காட்டுதல் மெய்யென அறிந்தார் ஆய்தலில். ஓசையாய் உரைக்கும் வாக்கினில், ஒளிரும் இறையின் தீர்ப்புகள், நேசியார் உண்டோ நாட்டினில், நேர்மை மீது சாய்கையில்?
இறைத் தேன்….. இறைத்தேன்! இறைத்தேன் இன் சொல் கேட்பவருக்கு, எளியனும் கொஞ்சம் இறைத்தேன். நிறைத்தேன் நெடு நாள் இனிமை வாக்கு; நெஞ்சம் மகிழ நிறைத்தேன். கரைத்தேன் எந்தன் தீவினை அழுக்கு; கடவுள் அருளில் கரைத்தேன். உரைத்தேன் கேட்கும் ஒரு சிலருக்கு; உண்மை, அன்பை உரைத்தேன்! -கெர்சோம் செல்லையா.
ஒவ்வொரு வரியும் உண்மை என்று, உரைக்கும் நூலே தானியெல். அவ்வரு நூலை எழுதிய அவர்க்கு, அளித்தார் பரிசு அரிக் குகை. எவ்விதம் இவரால் இப்படி எழுத இயன்றது என்று பார்க்கையில், கவ்விடும் தெய்வ ஆவி அறிவு; களைவோம் நம் வெறிப் பகை! (தானியேல்)
விழுகிற காட்சியை, முன்னர் கண்டு, விழாதிருக்க எச்சரித்தார். எழுகிற காட்சியைப் பின்னர் கண்டு எசேக்கி யெல் உச்சரித்தார். தொழுகிற அடியர் துவளாதிருந்து, தூய அறிவை வேண்டிடுவார். அழுகிற எலும்புகள் ஆவியிலெலுழுந்து அந்நாள் அரசாண்டிடுவார்! (எசேக்கியேல்)
கேடு வருவது கண்டுரைத்தும், கெடுவார் அதை ஏற்கவில்லை. ஏடு எழுதி எரேமியா தந்தும், யூதேயாவும் பார்க்கவில்லை. நாடு அழியும் நிலைக்கு வந்தும், நம்பாதாரை வெறுத்ததில்லை. தேடுகின்ற இறை வாக்கினரும், திருக்கண்ணீர் நிறுத்தவில்லை! (எரேமியா & புலம்பல்)
ஒருவரை ஒருவர் வெறுக்கும் குடியை, ஓருள அன்பினில் சேர்ப்பதற்கு, பெரு நூலெழுதி இறை வாக்குரைத்த, பெரியரில் ஐசையா முதல்வர். வருமெதிர் கால நற்செய்தி வடிவை, வழங்கும் ஐசையாவின் எழுத்து, திருடரை மீட்கும் இறைவாக்காகும்; திருந்தின் இறை புதல்வர்! (ஏசாயா)
தொல்லியல் காலந் தொட்டு தொடங்கி, தூயர் நோக்கிய மீட்பு அது. நல்லருஞ் சட்டம் உள்ளில் அடங்கி, நன்மைக்கழைத்த மீட்பு அது. பல்வகை நூற்களில், பாய்ந்து பதுங்கி, பரன் பணி செய்த மீட்பு அது. இல்லை என்பரும் பின்னர் ஒதுங்கி, ஏற்கிற இறை மீட்பு அது!
பற்பல தூதினை வாக்கினர்கள், பன்னாட்களாய்ச் சொன்னாலும், நற்பொருள் நடுவில் ஒன்றுண்டு. நாம் தேடுகிற மீட்புண்டு. கற்பதற்கரிய வாக்குரைகள் கற்பனை போன்று வந்தாலும், அற்புதம் அதிலே ஒன்றுண்டு. அன்பரேசு மீட்பருண்டு!
இதுபோல் இழந்தார் யூதெய நாட்டார்; எதிர்த்த பாபிலோன் முன் விழுந்தார். எதுவுமில்லாமல் அவரும் அழித்தார்; எழுபது ஆண்டுகள் சிறை பிடித்தார். பொது மறைத்தூதர் எரேமியா என்பார், புரிந்து முன்னே இதைச் சொன்னார். அது கேளாதார் அவமாய் அழிந்தார்; அறமுரைத்தாரோ, துடி துடித்தார்! (புலம்பல்)