பத்து கோத்திர இசரயெல்லாரை பற்பல திசைக்கு விரட்டிய நாடு; அத்து மீறிடும் அசிரிய இனத்தை, அழைத்தும், குடியமர்த்தும் கேடு; மொத்தமாக அறுவடை செய்யும், முடிவு எழுதும் நாகூம் ஏடு. வித்து முளைத்து மரமாதல் போல், வினை விளையும் என்றும் பாடு! (நாகூம்)
மலையிலிருந்து இறங்கும் ஆறு, மண்ணைக் கழுவுதல் பேறு சிலை முன் நின்றவர் திருந்துமாறு செய்தி சொன்னவர் யாரு? விலை போனவரின் விடுதலைக்கென்று, விண்ணவர் பிறப்பது எங்கு? தலையை உருட்டிய கேள்விக்கன்று, தந்தார் மீக்கா நன்கு! (மீக்கா)
அழியட்டும் அந்த அசிரிய எதிரி; அதனால் மறுத்தார் யோனா. பழி விட்டும், பதிந்த உள் வெறி, பழிவாங்குதற்குத்தானா? விழி தட்டும் வியப்பின் நிகழ்ச்சி, விடுதலை ஈந்திடத்தானே. பொழியட்டும் ஈசனின் புகழ்ச்சி, புரிகிற இரக்கந்தானே! (யோனா)
தம்பியின் தாழ்வில் உதவிட மறுக்கும் தமையன் வாழ்ந்து செழிப்பனோ? வெம்பகை மூச்சுக் குழலை இறுக்கும், வேளையில் எப்படிப் பிழைப்பனோ? நம் பகை விட்டு நன்மையே செய்யும், நலத்துள் ஒபதியா அழைக்கிறார். இம்மையும் தொடரும் மறுமையை உய்யும்; இரக்கம் கொண்டவர் பிழைக்கிறார்! (ஒபதியா)
தெற்கிலிருந்து வடக்கே சென்று, தெய்வ உரை மொழிந்தவர் அற்பர்களாலே ஆயன் என்று அருவருக்கப்படுகிறார். நற்குலம் பிறந்த ஆமொசு அன்று நல்கிய நூலால் தெளிந்தவர், நேர்மை ஆற்றில் நீந்துவர் இன்று; நினைப்பூட்டப்படுகிறார்! (ஆமொசு)
எதிர் வரும் இயற்கை அழிவது கண்டு, யோயெல் இறைவாக்குரைக்கிறார். புதிர் என்றவைகள் இருந்து கொண்டு, புரிந்ததை யார்தான் நினைக்கிறார்? அதி விரைவாக ஆவியர் வழங்கும், அருட் கொடைகளும் உரைக்கிறார். மதி நிறை மக்கள் மனமும் துலங்கும்; மாயிறை நம்மை நினைக்கிறார்! (யோவேல் 2:28-29).
துணையாய் வந்தவள் தூய்மையிழந்தும், துரத்த மறுக்கும் கணவனாய், மனையாள் ஒத்த இசரயெல்லரை, மன்னிக்கிறார் ஓசியா. இணையாள் இணைப்பு நிலைப்பு என்று, இன்று கூட நினைப்பூட்டி, அணையா விளக்கு ஏற்றுகின்றார், ஆண்டவராகிய மேசியா! (ஓசேயா 3:19-20).
பன்னிரு அடியர் ஆவியில் பொங்கி, பற்பல நாளில் வாக்குரைத்தார். அன்னிறை வாக்கை யூதரும் வாங்கி, அக்கரையற்றே அவ மதித்தார். பின்னொரு நாளில் மீட்பர் பிறப்பார்; பேசியபடியே எழுதி வைத்தார். சொன்னவர் மறவார் சொல்லும் துறவார்; சொற்படி நிகழக் காத்திருந்தார்!
ஏசேயா எரேமியா எசேக்கியெல், இவர்கள் பின்னால் தானியெல், மேசியா இயேசுவைக் காட்டுதல் மெய்யென அறிந்தார் ஆய்தலில். ஓசையாய் உரைக்கும் வாக்கினில், ஒளிரும் இறையின் தீர்ப்புகள், நேசியார் உண்டோ நாட்டினில், நேர்மை மீது சாய்கையில்?
இறைத் தேன்….. இறைத்தேன்! இறைத்தேன் இன் சொல் கேட்பவருக்கு, எளியனும் கொஞ்சம் இறைத்தேன். நிறைத்தேன் நெடு நாள் இனிமை வாக்கு; நெஞ்சம் மகிழ நிறைத்தேன். கரைத்தேன் எந்தன் தீவினை அழுக்கு; கடவுள் அருளில் கரைத்தேன். உரைத்தேன் கேட்கும் ஒரு சிலருக்கு; உண்மை, அன்பை உரைத்தேன்! -கெர்சோம் செல்லையா.