இராக்காலம்!

இராக்காலம்!

இறைவாக்கு: யோவான் 3:30.

  1. அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.

இறையறிவு:

இரவின் கருமை இழுக்கும் வேளை,
இயேசுவை விட்டுப் போனானே.
உறவை முறித்துச் சென்றதனாலே,
உயிர் மீட்பிழந்தவன் ஆனானே.
தரகுக்கென்று தலை தாழ்ந்தாலே,
தவறு இறுக்க, மாள்வாரே.
பரனை நோக்கி, பணவெறி நீக்கி,
பரிந்து உதவின், ஆள்வாரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏழைக்கிரங்கு !

மூட நெஞ்சே கேள்!
இறைவாக்கு: யோவான் 13:29.

  1. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

இறையறிவு:

இறைப்பணி என்பது பேசுதல் தானா?

இல்லா ஏழை எளியருக்கிரங்கு.

முறைப்படி நானும் செய்கின்றேனா?

மூடநெஞ்சே, பணிந்து கறங்கு.

அறையக் கொடுத்தவன் கையில் அன்று

ஆண்டவர் காசு இருந்ததை எண்ணு.

குறையறத் திருப்பணி செய்வேன் என்று,

கொடுத்து ஏழைக்குதவி பண்ணு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

எண்ணம் அறிந்தவரே!

எண்ணம் அறிந்தவரே !

இறைவாக்கு: யோவான் 13:26-28.

26. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

28. அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.

இறை வாழ்வு:

மங்கலமாயினும், அமங்கலமாயினும்,

மனதின் எண்ணம் நீர் அறிவீர்.

எங்கள் செயலின் விளைச்சல் பயனும்,

எந்நாளென்றும் நீர் தெரிவீர்.

இங்ஙனம் யாவும் அறிகிற இறையே,

ஏன் நீர் இதனைத் தடுக்கவில்லை?

அங்ஙனமாயினும், நன்மையாய் மாற்றும்,

அருளாயிருப்பதால், கெடுக்கவில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

கிறித்து மார்பில்!

கிறித்து மார்பில்!

இறைவாக்கு: யோவான் 13: 23-25.

23. அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.

24. யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.

25. அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.

இறைவாழ்வு:

பாய்ந்து ஓடும் காட்டாறைப் போல்
பக்குவம் இன்றி ஓடுகிறேன்.
சாய்ந்து மகிழ இடமில்லாமல்,
சகதி சேறும் தேடுகிறேன்.
மேய்ந்து இளைப்பாறும் வீடாய்,
மெய்யடியாரை அணைப்பவரே,
காய்ந்து நானும் கடக்கும் முன்பே,
கழுவி நெஞ்சில் இணைப்பீரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

மைத்துனர்!

மைத்துனர் விக்டர் மோகன் சுந்தர் அவர்கள்!

எந்தையும் தாயும் காத்தது போன்று,

என்னைப் பார்த்த விக்டர் இவர்.

மைந்தனுக்களிக்கும் மனப் பாங்கோடு,

மகிழ்ந்துதவிய மோகன் இவர்.

சிந்தையில் கூட கெடுதலெண்ணாது,

சிறியரைக் காத்த சுந்தர் இவர்.

விந்தை கிறித்து இறையுள் இணைந்த,

விக்டர் மோகன் சுந்தர் இவர்!

-கெர்சோம் செல்லையா.

ஏன் கலக்கம்?

ஏன் கலக்கம்?

இறைவாக்கு: யோவான் 13:21-22.

  1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.
  2. அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.

இறை வாழ்வு:

உடன் இருந்தும் உணர்வடையாமல்,
ஒழிந்து போவோன் நிலை கண்டு,
திடன் இருந்தும், தெரியுமிழப்பால்,
தெய்வ மகனே கலங்குகிறார்.
இடர் கொடுத்தும், ஏய்த்து பெருத்தும்,
இழந்து போவோர் தலை கண்டு,
அடர் நமக்கு ஒன்றும் வேண்டாம்;
அன்பு இறையே கலங்குகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அனுப்பும் ஆண்டவரே!

அனுப்பப்பட்டவர்!

இறைவாக்கு: யோவான் 13:20.

  1. நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இறை வாழ்வு:

அழைக்கும் இறைவன் அனுப்பாதிருந்தும்,
அலைகிறார் பலபேர்; நன்றன்று.
பிழைப்பிற்கான வழியென நினைத்தும்,
பிரித்துச் செல்கிறார்; நன்றன்று.
உழைக்க அனுப்பும் இடத்தில் தூங்கும்,
இன்றைய அமைப்பும் நன்றன்று.
கழைக்கூத்தாடும் காட்சிகள் போதும்;
கனி கொடுப்பதே நன்றின்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உடன் இருப்பவர்!

உடன் இருப்பவர்!

இறைவாக்கு: யோவான் 13:18-19.

  1. உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
  2. அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இறைவாழ்வு:

படை எடுத்து வருபவரை,
பகைவர் என்னலாம்.
உடனிருந்து கெடுப்பவரை,
என்ன சொல்லலாம்?
நடை காக்கும் நம்மிறையை,
நம்பிச் செல்லலாம்.
கடை விரிக்கும் கயவரினை,
கட்டச் சொல்லலாம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பெரியோரை மதிப்போம்!

பெரியோரை மதிப்போம்!

இறைவாக்கு: யோவான் 13: 16-17.

  1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
  2. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

இறை வாழ்வு:

வேலை கொடுத்த முதலாளியை நாம்
வேண்டா வெறுப்பில் பார்க்கிறோம்.
நூலை அறியா முட்டாள் என்றும்,
நெஞ்சுள் திட்டித் தீர்க்கிறோம்.
வாலை வைத்து, தலையையளக்கும்,
வழி முறையால்லே தோற்கிறோம்.
பாலை தாழ்ச்சி, சோலை மகிழ்ச்சி;
பார்த்தறிந்தோம், ஏற்கிறோம்!  

-ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

மாதிரி யார்?

எனக்கு மாதிரி யார்?

இறைவாக்கு: யோவான் 13: 12-15.12. அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.14. ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.15. நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.

இறைவாழ்வு:

பாதிரியார் பலர் உண்டு;

பார்க்கிறோமே இன்று.

மாதிரி யார் யாருண்டு?

மறுபடி சொல் நின்று.

தீதளிப்பார் நிலை கண்டு,

திருப்பிடுவாரன்று.

தூதாகச் செயல் கொண்டு,

துணையிருப்பார் நன்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா!

All reactions:9Victor Raj, Bhavani Jeeja and 7 others