அடிமையா? பிள்ளையா?

அடிமையா?  பிள்ளையா?


நற்செய்தி: யோவான் 8: 35-36.   

நல்வழி:


திருந்தார் வாழ்வைத் துருவிப் பார்த்தேன். 

தீங்கிற்கடிமைப் பட்டிருந்தார்.

பருந்தாய் உயரப் பறப்பதும் பார்த்தேன். 


பழியில்  விழவே கெட்டிருந்தார்.

பொருந்தார் இறைமுன் வருவது பார்த்தேன். 

பொய்மை வெறுத்து விட்டிருந்தார்.

விருந்தாய்ப் பேறு உண்பதும் பார்த்தேன். 


விண் மகவாகத் தொட்டிருந்தார்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

அன்பே இறைவன்!

அன்பே இறைவன்!


கொல்லவும், அழிக்கவும் ஒருவன் வந்தால்,

கோனாய், இறையாய்ப்  பாராதீர்.

வெல்லவும், வீழ்த்தவும், சூது புனைந்தால், 

விரும்பும் அறமாய்க் கூறாதீர்.

சொல்லவும் செய்யவும் பழியும் தந்தால்,

சொல்கிற அவன்பின் சேராதீர். 

எல்லையும், முடிவும் இல்லான் ஒருவன்;

இவனன்பு விட்டு மாறாதீர்!


-செல்லையா.

அடிமை!

நல்வழி: யோவான் 8: 33-34.


யாருக்கும் அடிமை இல்லை என்று,

யாவரும் கூறும் பழக்கமுண்டு. 

பேருக்குப் பின்னால் சாதியும் போட்டு,

பெருமை காட்டும் வழக்கமுண்டு. 

நேருக்குந்நேராய் இறை முன் வந்தால்,

நெஞ்சின் அழுக்கு புரியவரும்.

ஊருக்குத் தெரியா அடிமைத்தனங்கள்

ஓடிட, விடுதலை தெரியவரும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

விடுதலை நாள் வாழ்த்து!

பதவி நாளில் எதையும் அள்ளும்

பண்பு கொண்ட பாரதம்,

உதவி நாடும் ஏழை எள்ளும்;

உண்மை தேடு, பார் அதம்.

இதனை இன்று எடாது தள்ளும்,

இந்தியர்கள் வாழ் விதம்,

மடமை என்று தான் கொள்ளும்.

மாபேரன்பு, வாழ் இதம்!

-செல்லையா.

அதம்= தாழ்வு

இதம் = இனிமை

மெய்மை தரும் விடுதலை!

மெய்மை தரும் விடுதலை!


நற்செய்தி: யோவான் 8:30-32.  
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

நல்வழி:


மெய்மை தருகிற விடுதலையொன்றே,

மேன்மையான விடுதலையாம். 

செய்கை, வாக்கில் தூய்மை என்றே,

செயல்படாதோர் அடிமைகளாம்.

எய்தல் வைத்து இலக்கை இன்றே,

எடுத்துக் காட்டி முடிக்கும் நாம்,

பொய்மை விட்டு விடுதல் நன்றே;

புரியார் வாழ்வும் வெடிக்குமாம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!


உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;

உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.

கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,

கரையும் என்றே, தப்பினை மாயும்! 


-செல்லையா.