நிமிர்வோம்!

விண்ணில் இயேசு வெளிப்படும்போது!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:27-28.  

27  அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

28  இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:

விண்ணில் இயேசு வெளிப்படும்போது,  

விரும்பும் அடியார் நிமிர்வாரே.  

மண்ணில் பட்ட பாடுகள் விட்டு,   

மன்னன் மடிமேல் அமர்வாரே.  

கண்ணில் அந்நாள் காண்போமென்று,  

கடவுளை இன்றே பணிவீரே.  

உண்ணும், உறங்கும், உழைக்கும்போது,  

உயர்த்தும் மீட்பை அணிவீரே!  

ஆமென்.

விண் அதிரும் காட்சி!

விண் அதிரும் காட்சி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:25-26.  

25  சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.

26  வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.  

கிறித்துவில் வாழ்வு: 

மண்ணின் அதிர்வைத் தாங்க இயலா   

மன வலுவற்ற மக்கள் நாம்,  

விண்ணின் அதிர்வில் எப்படி நிற்போம்? 

விளக்கும் அறிவில் எவருமுண்டோ? 

எண்ணிப் பார்த்து எழுத இயலா,  

ஈவுகள் கேட்டுப் பெற்றவர் நாம்,  

கண்ணில் அந்தக் காட்சி வருமுன்,  

கடக்கக் கேட்பதில் தவறுமுண்டோ?  

ஆமென்.

சென்றவர் அழிவு!

அன்றைய யூதர் கேட்கவில்லை!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:23-24.  

23  அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.

24  பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.  

கிறித்துவில் வாழ்வு:  

அன்றைய யூதர் கேட்கவில்லை;  

ஆண்டவர் வாக்கை ஏற்கவில்லை;  

வென்றிடும் உரோமர் அழிக்கையிலே,  

விழுந்தார், வேறு வழியுமில்லை.  

இன்றைய நாளின் கிறித்தவரே,  

இயேசுவின் அருட்பூ பறித்தவரே,   

சென்றவர் அழிவைக் கேட்டிட்டும்,  

சிறை மீளாவிடில் விழியுமில்லை!  

ஆமென்.

கொபூசு

கொபூசு!  

ஏழையும் உண்பர், செல்வரும் உண்பர்,  
எல்லா அரபு  நாட்டினர் உண்பர்.  
வேலை தேடிச் செல்வோர் உண்பர்;  
விரும்பி இந்த உணவை உண்பர்.  
மேலை நாட்டோர் ‘பிரட்டு’  என்பர்.  
மெதுவாய்க் கடிக்க வேண்டுமென்பர்.  
கீழை நாட்டோர் ‘ரொட்டி’ என்பர்;

கொபூசுண்டு நன்கு என்பர்.  


-கெர்சோம் செல்லையா.  

நிறைவேறிய இயேசுவின் வாக்கு!

நிறைவேறிய இயேசுவின் வாக்கு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:20-22.   

20  எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

21  அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.

22  எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.  

கிறித்துவில் வாழ்வு:  

என்ன நிகழும் என்றறியாமல்,  

எதையோ செய்தல் அறிவீனமே.   

முன்னரேசு மொழிந்தபடியே, 

முடிவு கண்டது எருசலேமே.  

அன்று கேட்ட ஆண்டவரடியார், 

அதன்படித் தப்பி ஓடினாரே.  

கொன்று போடும் படைக்குத் தம்மைக் 

கொடாது மீட்பு தேடினாரே! 

ஆமென்.

நீடிய பொறுமை!

நீடிய பொறுமை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:16-19.  

16  பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.

17  என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.

18  ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.

19  உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

விலை மதிப்பில்லா மீட்பை வழங்கும்,  

விண்ணவர் என்னுடன் இருப்பதனால்,  

தலை மயிர்கூடத் தானாய் விழாது; 

தவறும் உறவினைப பொறுப்பேனே.   

கொலை வெறியோடு  எவர் வந்தாலும்,  

கொடுமை வீழும் என்பதனால்,  

நிலை தவறாது நிற்கும் வலுவை, 

நீடிய பொறுமையில் பெறுவேனே!  

ஆமென்.

பேரிடர் நாள்!

பேரிடர் நாளில்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21: 12-15.  

12  இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.

13  ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.

14  ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.

15  உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.  

கிறித்துவில் வாழ்வு:  

வாசித்துணர்ந்து ஆய்பவராயினும்,  

வருந்தும் நாளில் கலங்கிடுவார்.  

நேசித்திணைக்கும் இயேசுவையேற்பின்,  

நித்தமும் மறையால் துலங்கிடுவார்.  

பேசித்தீர்க்கும் அறிவும் வாக்கும், 

பேரிடர் நாளில் இறை தருவார்.   

தூசிக்கிணையாய்த் துயரும் பறக்கும்;  

தூதர் சூழ அவர் வருவார்!  

ஆமென்.

நஞ்சின் நாள்!

நஞ்சுடையும் நாள் வருமுன்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:9-11.  

9   யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

10  அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.

11  பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.  

கிறித்துவில் வாழ்வு:  

நெஞ்சதிர, நிலம் அதிர,  

நெடும்போரின் முரசதிர,  

வஞ்சகரின் வெறிச் செயல்கள் 

வானதிர முழங்கிடுதே.  

பஞ்சத்தினால் பசிச்சாவும்,  

பாழ் நோயும் பரவிவர,

நஞ்சுடையும் நாள் வருமுன்,  

நல்மீட்பு வழங்கிடுமே!  

ஆமென்.

கள்ள கிறித்துகள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா  21:7-8.  

7   அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

8   அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

முள்ளும் மலரும் ஒன்றல்ல;  

முளைக்கும் இடமோ வேறல்ல.    

துள்ளும் கயமை ஊழியரை,  

தூதர் ஆக்குதுதல் பேறல்ல.  

கள்ள கிறித்துகள் பெருகிடவே,  

கடவுளின் அரசு வருந்திடுதே.  

உள்ளம் உடைந்து எழுதுகிறேன்;  

உண்மை காணத் திரும்பிடுமே!  

ஆமென்.

வாக்கே வாழும்!

கோயில் போகும், வாக்கோ நிலைக்கும்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21:5-6.

5   பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப் பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,

6   அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

கல்லால் கட்டிய கோயிலும் அழியும்;  

காணும் அழகும் அதனுடன் ஒழியும்.  

சொல்லாம் தெய்வ வாக்கில் விழியும்;  

சொற்படி நடக்க, நெஞ்சும் தெளியும்.

எல்லாம் தெரிந்த சாலொமன் அன்று,  

எழுதிய நூலால் பயனே இன்று.  

நல்லார் தொழுத கோயில் எங்கு?  

நமக்குத் தேவை நல்வாக்கிங்கு!  

ஆமென்.