பதற்றத்தில் பேசாதீர்!
Category: Uncategorized
தனிமை வேண்டல்!
தனித்தும் கேட்போம்!
நற்செய்தி மாலை : மாற்கு: 6:45-47.
“இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.”
நற்செய்தி மலர்:
இருவர் மூவர் இணைந்து வேண்ட,
இறைவன் அங்கே வந்திடுவார்.
ஒருவர் தனித்து வேண்டினாலும்,
உள்ளில் அமர்ந்து தந்திடுவார்.
திருடர் வருதல் போல இயேசு
தெரியா நேரம் இறங்கிடுவார்.
அருளர் அணியில் நாமும் சேர,
அவரைக் கேட்போம், இரங்கிடுவார்!
ஆமென்.

அனைவருக்குணவு நீர் தாரும்!
அனைவருக்குணவு நீர் தாரும்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:41-44
“அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பாhத்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.”
நற்செய்தி மலர்:
மண்ணாகிப் போன திட்டங்களாலே,
மனிதர் பட்டினி கிடக்கின்றார்.
உண்ணாது அலையும் ஏழையருக்கு,
உதவார் கதவை அடைக்கின்றார்.
எண்ணாது இவரை இப்படிவிட்டால்,
இந்தியா எப்படி முன்னேறும்?
அண்ணாந்து பார்த்து போற்றிய மகனே,
அனைவருக்குணவு நீர் தாரும்!
ஆமென்.

வேண்டாம் வெளிநாட்டு காசு!
வேண்டாம் வெளிநாட்டு உதவி!
நற்செய்தி மாலை: 6:38-40.
“அப்பொழுது அவர், ‘ உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள் ‘ என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, ‘ ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன ‘ என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.”
நற்செய்தி மலர்:
பாருங்கள் நண்பர்களே.
பரனேசு சொல்வதையே!
சேருங்கள் நம் பொருளே;
சிறப்புடன் செய்வதற்கே.
வாருங்கள் மறுப்பதற்கே;
வெளிநாட்டு காசுகளே.
கூறுங்கள் உறுதியிலே;
கிறித்துவின் தன்னிறைவே!
ஆமென்.
காசு காசு….

ஆயரில்லா ஆடுகள்!
ஆயரில்லா ஆடுகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:33-34.
“அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.”
நற்செய்தி மலர்:
தம் தம் விருப்பை நிறைவேற்றத்
தவற்றையும் செய்து சரியென்பார்.
தும் தும் என்று துள்ளித்தான்,
துன்பத் தீயில் எரிகின்றார்.
இம்மானுவலாம் இறைமகனோ
இவரையும் இரங்கிப் பார்க்கின்றார்.
அம்மாதிரியாம் ஆடுகளை
ஆயனாய்க் கூட்டிச் சேர்க்கின்றார்!.
ஆமென்.

எப்போதும் பணியா?
நற்செய்தி மாலை: மாற்கு 6:30-32.
“திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ‘ நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ‘ என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
எப்போதும் பணியே என்றிருந்தால்,
எவராய் இருப்பினும் சோர்புறுவார்.
அப்போதறிந்த ஆண்டவனார்,
அடியரை ஓய்வில் அனுப்புகிறார்.
இப்போதிதனை நாம் உணர்ந்தால்,
ஏற்படும் தோல்விகள் குறைவாகும்;
தப்புத் தவறுகள் ஓய்வெடுக்கும்;
தந்தையின் திட்டமும் நிறைவாகும்!
ஆமென்.

யாவரும் நடிக்கின்றார்!
யாவரும் நடிக்கின்றார்!
கனி கொடுக்கும் மரத்தினையே
கல்லெடுத்து அடிக்கின்றார்.
காய்க்காத மரங்களையோ
கதை புகழ்ந்து படிக்கின்றார்!
இனிமை தரா அரசியலில்
யாவருமே நடிக்கின்றார்.
இதனால்தான் கண்ணீரை
எழையரும் வடிக்கின்றார்!
-கெர்சோம் செல்லையா.
ஏழையரோ துடிக்கின்றார்!
குடிப்பார், வெறிப்பார்…
நற்செய்திமாலை: மாற்கு 6:25-29.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ‘ திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும் ‘ என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.”
நற்செய்தி மலர்:
குடிப்பார், வெறிப்பார், கூப்பிடுவார்;
கொடுக்கும் வாக்கால் குழம்பிடுவார்.
நொடிப்பார்,வெடிப்பார், நொந்திடுவார்;
நிம்மதி தேடி அழுதிடுவார்.
துடிப்பார் தெளிவார், தேடிடுவார்;
தெய்வத்தின் வாக்கில் களிப்புறுவார்.
பிடிப்பார் இறைவன் பேரருளால்,
பேதமை நீக்கி வாழ்வளிப்பார்!
ஆமென்.