வாழ இயலா ஏழைக்கும்
வழியாய் இருக்கும் இறைமகனை,
தாழப் பணிந்து வேண்டுதற்கு,
தமிழில் இதனை எழுதுகிறேன்!
ஆழம் நிறைந்த அவரன்பை,
அன்றாடம் நாம் ருசிப்பதற்கு,
கோழை எனக்கும் இரங்கிட்டார்;
கிறித்து புகழைப் பாடுகிறேன்!
நல்வாழ்த்து:
இறைவன் படைத்தது எல்லாம்
இன்பமும் நன்மையுமே.
குறை கூறுதலை நிறுத்தி,
கிறித்துவை நோக்கிடுமே!
நல்வாக்கு;
மத்தேயு 25:19-21.
“நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ‘ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘ நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ‘ என்றார்.
நல்வாழ்வு:
சிறியதில் உண்மை,
சிகரத்தில் உயர்த்தும்.
வறியவர் உணர்ந்தால்
வாழ்வும் சிறக்கும்.
பெரியதாய் வளர
பேரருள் கேட்பீர்.
சொரியும் இறைவன்
சொற்படி நடப்பீர்!
ஆமென்.