நடக்கிற மரமாய்

நடக்கிற மரமாய்க் கிடக்கிற மனிதா!

நற்செய்தி மாலை: மாற்கு 8:22-26.

“அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, ‘ ஏதாவது தெரிகிறதா? ‘ என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, ‘ மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள் ‘ என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், ‘ ஊரில் நுழைய வேண்டாம் ‘ என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.”

 

நற்செய்தி மலர்:

நடக்கிற மரமாய்க் கிடக்கிற மனிதா!

நன்மை உன்னில் கிடைக்குமோ எளிதா?

கடக்கிற ஆறும் கரையினுக்குதவும்;

கடலினில் விழுமுன் கனிமரம் வளர்க்கும்.

உடைக்கிற நீயோ, யாருக்கு வேண்டும்?

உண்மை இதுதான், உனக்கே புரியும்.

படைக்கிற இறையின் வாக்கினைக் கேட்பாய்;

பணிவுடன் ஏற்று, பயன்தனில் மகிழ்வாய்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply