இந்நாட்டார், அந்நாட்டார்!
என்னை ஆளும் இறைவழி சொன்னால்,
ஏற்க மறுப்பார், இந்நாட்டார்.
சொன்னால் கேட்பார்; சொற்படி நடப்பார்;
சொந்த நாட்டார், அந்நாட்டார்.
அன்பின் உறவு, அனைவரும் ஓன்று,
அடிக்கடிச் சொல்வார் இந்நாட்டார்;
பின்னால் சாதி, சமயமே பாரார்;
பிரித்து வையார் அந்நாட்டார்.
ஊரும் உறவும் பார்த்துச் செய்வார்,
உதவ மறுக்கும் இந்நாட்டார்.
யாரும் வந்தால், இறையாய்ப் பார்ப்பார்;
இனவெறி அற்ற அந்நாட்டார்.
சீரும் சிறப்பும் தேடிச் செல்வார்;
தேவை மிகுந்த இந்நாட்டார்.
பேரும் புகழும் தொண்டிலடைவார்;
பெருமை பேசார் அந்நாட்டார்.
ஏற்றம் நாடும் ஏழைக்கிரங்கார்,
ஏழ்மை வெறுக்கும் இந்நாட்டார்.
ஆற்றும் தொண்டு ஆண்டவர்க்கென்பார்;
அரசியல் செய்யார் அந்நாட்டார்.
மாற்றம் தருகிற வழியும் கேட்பார்,
மதிப்பிற்குரிய இந்நாட்டார்.
போற்றும் தூய்மை புரிந்து வாழ்வார்;
புனிதர் மட்டுமே அந்நாட்டார்!
-கெர்சோம் செல்லையா.