வழி ஒன்றே!

இயேசுவே வழி!

இறை வாக்கு: யோவான் 14:6.

  1. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

இறை வாழ்வு:

வழி எது? வாய்மை எது?
வாழ்பவரின் உயிர் எது?
தெளிவிலாது நானிருந்தேன்.
தெரியார் வாழ்வில் தீது.
மொழி எது, மேன்மை எது?
மெய்யின்பம் இங்கு எது?
அழியா அன்பென்றார் ஏசு;
அது ஒன்றே இறை தூது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

மெய் நாடு!

ஐயம் அகற்றுதல்!

இறைவாக்கு: யோவான் 14: 4-5.

  1. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
  2. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.

இறை வாழ்வு:

ஐயம் அகற்றுதல் அடியருக்கழகு.
அதையே தோமா செய்கிறார்.
பொய்யறியாத இயேசுவினிடத்து,
புரிந்து கொள்ளவே கேட்கிறார்.
செய்வது அறிந்தவரிடத்துப் பழகு.
செய்யும் நன்மையில் உய்கிறார்.
மெய்யெது பொய்யெது பிரித்தறிந்து,
மெய் நாடின், இறை மீட்கிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

விண் வீடு!

எனக்கும் ஓரிடம் தாரும்!

இறைவாக்கு: யோவான் 14:3.

3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

இறைவாழ்வு:

எனக்கும் ஓரிடம் உம்மிடம் தாரும்.

இப்படிக் கேட்கத் தகுதி இல்லை.

நினைக்கும் உள்ளில் இன்றே வாரும்;

நெஞ்சே கோயில் வேறில்லை.

மணக்கும் உம் திரு வாக்கும் கூறும்;

மனதின் அழுக்கும் குறைவில்லை.

பிணத்தைச் சுமந்து நடக்கிறேன் பாரும்;

பிழை போகாவிடில் பேறில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

விண் வீடு!

விண் வீடு!

இறை வாக்கு: யோவான் 14: 2.

  1. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

இறை வாழ்வு:

என் வீடு இங்கு நிலைத்தது இல்லை;
எனினும் இறையுடனே இருப்பேன்.
விண் வீடு மனிதர் செய்ததும் இல்லை;
விரும்பி ஈகிறார், பார்த்திருப்பேன்.
நன் வீடு புகு நாள் முன்னறிவில்லை;
நம்பிக்கையிலே நான் இருப்பேன்.
கண் மூடு காட்சி, கவலையும் இல்லை;
கடவுளின் பேறு, காத்திருப்பேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

நெஞ்சே கலங்காதே!

கலங்காதிரு நெஞ்சே!
இறை வாக்கு: யோவான் 14:1.

  1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

இறை வாழ்வு:

அச்சமும் ஐயமும் அகத்தின் நோய்கள்,
ஆண்டவர் இருக்க ஏன் கொண்டாய்?
எச்சமாய் இவைகள் இருப்பதினாலே,
எண்ணிலடங்காத் தீங்குண்டாய்.
பச்சிலை மரத்தில் கனிகள் பிறக்க,
பாயும் கீழடி வேர் பெறுவாய்.
உச்சியின் மேலே வாழ்வு சிறக்க,
உண்மைப்பற்று உள்ளுறுவாய்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உதவுவோம்!

உதவாதிருந்தேனே!

இன்னும் அன்பாய் நன்மைகளீந்து
எளியருக்குதவாதுதறினேனே;
என்னும் எண்ணம் பன்முறை வந்து,
என்னை அழுத்தப் பதறினேனே.
பின்னால் தொடரும் தீதால் அழியும்,
பிறவியைத் திருத்தக் கதறினேனே.
முன்னால் நின்று, அருளைப் பொழியும்,
மும்மையாரால் இனி உதவுவேனே!

-கெர்சோம் செல்லையா.

நோக்கறிவோம்!

உணர்ச்சிப் பேச்சு!

இறை வாக்கு: யோவான் 13:36-38.

  1. சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
  2. பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
  3. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இறை வாழ்வு;

உணர்ச்சி பொங்கப் பேசும் வாக்கு
உயிர் தரும் ஆவியர் வாக்காமோ?
கணத்தில் தன்னை மறந்த நாக்கு,
கடவுள் மகிழ்கிற நாக்காமோ?
மனத்தை அடக்கி வாழாப் போக்கு,
மன்னர் விரும்பும் போக்காமோ?
நினைத்து வாழ்வோர் நிலையும் நோக்கு,
நிலைவாழ்வு நல் நோக்காமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

எது ஆன்மீகம்?

எது ஆன்மிகம்?

ஏழைக்கிரங்குதல் ஆன்மீகம்.
எவரையும் ஏற்கும் ஆன்மீகம்.
வாளைத் துறப்பதும் ஆன்மீகம்.
வாழ வைப்பதும் ஆன்மீகம்.
தாழ்மையின் உருவம் ஆன்மீகம்;
தன்னலம் இழப்பதும் ஆன்மீகம்.
கோழைத்தனமா ஆன்மீகம்?
கொடாது தீமை, ஆன்மீகம்!

-கெர்சோம் செல்லையா.

அன்பு ஒன்றே வழியாகும்!

அன்பு ஒன்றே வழி!

முன்னொரு காலத்து மூடம் இல்லை;
முடிவு கட்ட நீ கேளு.
இனொரு பிறவி என்பதும் இல்லை;
இதையுமறிந்து, வாழு.
பன்வகை வழிகள் சேர்ப்பதும் இல்லை;
பரன் வழி அன்பை நாடு.
சொன்னவர் இயேசு, பிழையே இல்லை;
சொந்தமாக்கு, இறை வீடு!

-கெர்சோம் செல்லையா.

இறை வாக்கும், இறையன்பும்!

இறை வாக்கும் இறையன்பும்!

இறை வாக்கு: யோவான் 13:34-35.

  1. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
  2. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

இறையன்பு:

இறையடியானெனச் சொல்கிற என்னில்

இறை அன்புண்டோ, அளக்கிறேன்.

குறை நிறைவாக அளக்கும் முன்னில்,

கொடுமை செய்து பிளக்கிறேன்.

உறையிலொளிக்கும் கத்தியை உருக்கும்;

உள்ளன்பில்லை, வெறுக்கிறேன்.

அறைய வேண்டாம், அன்பைப் பெருக்கும்;

அழிக்கும் வெறுப்பை நொறுக்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.