தெய்வம் நம்முள் பாடாதோ?
நற்செய்தி மாலை: மாற்கு 4:13-19.
“மேலும் அவர் அவர்களை நோக்கி, ‘ இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப் பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள். இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.”
நற்செய்தி மலர்:
மண்ணில் விழுந்த விதைகள் எல்லாம்
மரம், செடி, கொடியாய் மாறாதோ?
விண்ணும் மண்ணும் படைத்த இறையின்
விருப்பம் அறிந்து தேறாதோ?
எண்ணம் போன்றே வாழ்க்கை என்று,
எடுத்துரைத்தல் கூடாதோ?
திண்ணம் அறிந்து நன்மை செய்தால்,
தெய்வம் நம்முள் பாடாதோ?
ஆமென்.