எந்த சாதி என்பவரே,
எனது சாதி சொல்லவா?
அந்த சாதி யாவருக்கும்
சொந்த சாதி அல்லவா?
நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிலைகளில் சாதி மாறுகிறவன். எப்படித் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் இறைவேண்டல் ஏறெடுத்து, திருமறை வாசிக்கிறேன். அப்போது மட்டும் அந்தணன்.
அதன் பின்னர், என் வீட்டாரோடும், மற்றவர்களோடும் சண்டைபோடுகிறேன்; அப்போது நான் சத்திரியன்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடையவர்களை விற்கப் பார்க்கிறேன்; அவர்களை வைத்துப் பொருள் சேர்க்கப் பார்க்கிறேன். அப்போதெல்லாம் நான் வைசியன்.
உடல் உழைக்கும் போதெல்லாம், நான் சூத்திரன்.
உடல் அழுக்கைக் களையும்போதோ, நான் பஞ்சமன்.
இப்படி நான் மட்டுமல்ல, சாதி வேறுபாடு பார்க்கிற எல்லா மனிதர்களும் எல்லா இடங்களிலும் சாதி மாறுகிறார்கள்!
எனவேதான் சொல்கிறோம்:
ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்!
நன்றே கேட்போம்; யாவரையும் இணைப்போம்!