ஒரு மூலையிலிருந்து!

இழிவிலிருந்து இந்நாட்டை….எகிப்தில் அடிமையாயிருந்த யூதர்கள், உழைப்பால் உயர்ந்தது, உலக வரலாறு. ஒடுக்கப்பட்டு, துரத்தப்பட்டு, மரம் ஏறிய நாடார்கள், உழைத்து முன்னேறியது தென்னிந்திய வரலாறு. பள்ளம் தள்ளப்பட்ட பள்ளர்கள், உழைத்து முன்னேறி வருவது இன்றைய வரலாறு. இப்படி முன்னேறியவர்கள், இப்போது மற்றவர்களை எப்படிப் பார்க்கிறார்கள்? யூதர்களின் பார்வையில் ஆணவம் தெரிகிறது. நாடார்களின் பார்வையில், ‘நமக்கும் கீழே’ என்ற எண்ணம் தெரிகிறது. ‘பள்ளர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்’ என்ற கருத்தும் பரவுகிறது. இப்படி, ஒவ்வொரு சாதியினரும், மற்றவரை மதிக்க மறந்து, மற்றவரும் மனிதர் என்று நினைக்க மறந்து, தவறிக்கொண்டே இருக்கின்றனர். இத்தவற்றை, அறிவு என்று கூறினாலும், ஆளுமை என்று நினைத்தாலும், முன்னோர்கள் செய்ததாயினும், இன்னாளில் செய்வதாயினும், தவறு தவறேதான். தவற்றிலிருந்து பிறப்பதும் தவறேதான்! இத்தவற்றை நீக்கும் ஒரேவழி, மாற்றாரை மதிக்கக் கற்றலே; மதிக்கும் அறிவு பெற்றலே. இறைமுன்னும், இந்நாட்டுச் சட்டம் முன்பும், யாவரும் ஒன்றே. எந்த இனத்தையும் உயர்த்தாதீர்கள். எந்த மனிதனையும் தாழ்த்தாதீர்கள்! உயர்வுமில்லை, தாழ்வுமில்லை. யாவரும் ஒன்றே! இவ்வறிவை வழங்கும் கல்வியே இன்றையத் தேவை. இவ்வறிவு பெற்றவர்களே, ஆசான்களாவீர், ஆசிரியர்களாவீர், அரசியல் தலைவர்களாவீர்; அறம் சார்ந்த அறிவைப் பரப்புவீர். இழிவிலிருந்து இந்நாட்டை நல்வழிப்படுத்துவீர்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply