ஒரு மூலையிலிருந்து…….2

பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்!

பிற்படுத்தப்பட்டவர் பட்டியலைத் திருத்தவேண்டிய காலம் வந்துள்ளது என்பது என் கருத்தாகும். அன்று பிற்படுத்திப் புறம் தள்ளியோரும், இன்று சலுகைகளுக்காகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வந்து இடம்பிடித்து இருகிறார்கள்.பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று வெள்ளையர் நாளில் சேர்க்கப்பட்டவர்கள், தங்களைப் பொதுப்பட்டியலில் சேர்க்க வேண்டிப் போராடியதும், முன்னேறியவர்கள் என்று தங்களைக் கருதியிருந்தவர்கள் அதைத் தடுத்து வழக்காடியதும் நாம் அறிவோம். இன்று அம்மக்களும் சலுகைகளுக்காகப் பிற்படுத்தப்பட்ட வரிசையே போதுமென்று, இருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்கள் எப்போது முன்னேறுவார்கள்? எப்போது முன்னேறிய வர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்?அன்றிலிருந்தே கல்வியிலும், சமுதாய நிலையிலும் உயர்வாய் இருந்தவர்களை, இனியும் பிற்படுத்தப்பட்டவர்கள் வரிசையில் நிற்கவைத்துச் சலுகை பெறவைப்பது, இதர எளியவர்களை ஏமாற்றுவது ஆகாதா? இதைத் திருத்தவேண்டியது இன்றையத் தேவை அல்லவா? எல்லோருக்கும் கல்வியை, எல்லாக் கல்வி நிலையங்களிலும் அரசு உதவியோடு விலையின்றிக் கொடுங்கள். கற்க வருகிற இடங்களில் சாதி சமயம் பாராதீர்கள், பதிவு செய்யாதீர்கள். தனியார் தங்களைக் கல்வி வள்ளல்களாகக், காண விரும்பினால் அல்லது காட்ட விரும்பினால், விலையின்றிக் கொடுக்கட்டும்! அரசு உதவி பெறாமல் கொடுக்கட்டும்! இனம் பார்த்துக் கொடாமல் யாவருக்கும் கொடுக்கட்டும்! எல்லோரையும் கற்கச் செய்யுங்கள். சாதியென்றும் சமயம் என்றும் கேளாதீர்கள், பிரிக்காதீர்கள்! கற்பவர் திறன் கண்டு ஊக்குவியுங்கள். இதுதான் நற்கல்வியாகும்! பணியிடங்கள், பதவி உயர்வுகள் எனும்போது சாதி, சமயத்தைப் பார்க்காமலும், காசு வாங்காமலும், அரசியல் ஆட்கொணர்வு செய்யாமலும் இருக்க, இத்தகைய ஊழல் செய்வோரைத் தண்டிக்க கடும் சட்டங்கள் இயற்றுங்கள். தவறுவோரைத் தண்டியுங்கள். இது அரசின் உயர் பதவிகளுக்கும் பொருந்தட்டும், நீதித்துறைக்கும் பொருந்தட்டும்; தனியார் நிறுவனங்களுக்கும் பொருத்தட்டும்!அப்போதுதான் கல்வியிலும் பணிகளிலும் அனைவருக்கும் உரிய வாய்ப்பு கிடைக்கும். நல்லெண்ணப் போட்டிகள் நடைபெறும். திறமை பாராட்டப்படும். இப்படிச் செய்தால்தான் இந்தியா முன்னேறும். இந்நாட்டு மக்கள் வாழ்வும் முன்னேறும். இதை விட்டுவிட்டு, எத்தனைக் காலம் சாதி என்றும், சமயம் என்றும், உயர்ந்தவன் என்றும், தாழ்ந்தவன் என்றும் இந்தியரைப் பிரித்து, பிற்படுத்தப்பட்டுக் கிடப்பீர்கள்? இது, எல்லாச் சாதி-சமயத்தவரால் கற்பிக்கப்பட்டு, கற்க ஊக்குவிக்கப்பட்டு, பற்பலப் பணிகள் பெற்று, பலவித நன்மைகள் பெற்று வாழும் ஓர் இந்தியத் தமிழனின் கருத்தாகும்! -கெர்சோம் செல்லையா.

Leave a Reply