எல்லோருக்கும் எல்லாமுமாக மாறுவது!
‘இறையன்பு இல்லம்’ என்னும் எங்கள் முதியோர் இல்லத்தில் எல்லா இனத்தவர்-சமயத்தினர், எல்லா மாநிலத்தவர் -மொழியாளர் என்று எல்லாப் பண்பாட்டு இந்தியத் தாய்மார்களும், ஒரே குடும்பமாக எங்கள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இது எங்கள் யாவருக்கும் மகிழ்வையும், மன நிறைவையும் தருவதால், இப்பணியை இறைவனின் திருப்பணி எனக்கண்டு, இறைவனைப் போற்றுகிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவில் உறங்கச் செல்லும் வேளை, எண்பத்திரண்டு வயதுத் தாயார் ஒருவருக்கு, நெஞ்சுவலி வரவே, எங்கள் வீட்டருகிலுள்ள மருத்துவமனைக் கதவுகளைத் தட்டினோம். முதலுதவி மருந்துகள் கிடைத்தாலும், முழுமையான மருத்துவத்தை அரசு மருத்துவக் கல்லூரிதான் தந்தது. உயிர்காக்கும் துடிப்பை மருத்துவப் பணியாளர், தாதியர், மருத்துவர், சிறப்பு மருத்துவர் என்று யாவரிலும் அந்நள்ளிரவில் கண்டு, உண்மையிலே நானும் என் மகனும் மகிழ்ந்து வாழ்த்தினோம். இருப்பினும், இறைவனின் திருத்திட்டம் வேறாக இருந்ததால், அமைதியாக அந்த அக்காள் தன்னுயிரை அவரிடமே ஒப்படைக்க, அதிகாலையில் உடலோடும், உள்ளில் வலியோடும் இல்லம் வந்தோம்.
அந்த அக்காளின் உறவினர் இருவரைத் தவிர வேறு எவரும் சென்னையில் இல்லை. வெளியூர்-வெளிநாட்டு உறவினர்களுக்கும் ஊரடங்கால் சென்னைக்கு வரயியலவில்லை. இந்து சமய உயர்பிரிவைச் சேர்ந்த இந்த அக்காளின் இறுதிச் சடங்கை எப்படிச் செய்வது? யார் எரிவூட்டுவது? வெளியூரின் உறவுகள் எங்கள் இறையன்பு இல்லத்தை நம்பி அப்பொறுப்பினை எங்களிடமே ஒப்படைத்தார்கள். இந்து சமயச் சடங்கைச் செய்ய உறவினர் ஒருவர் வந்தார். என் மகனும், ஓட்டுநர் ஒருவரும் உடலைச் சுமக்க, எரியூட்டும் பணி எனக்குக் கிடைத்தது.
கிறித்தவ ஊழியனாய்ப் பலமுறை இடுகாட்டில் இறைவேண்டல் ஏறெடுத்து மண் போட்டதுண்டு. குடியிருப்பு நண்பனாய்ப் பலமுறைச் சுடுகாட்டின் நிகழ்வுகளில் முன் நின்றதுமுண்டு. இப்போது, இந்து சமய அம்மையாருக்கு எரியூட்டும் பேறும், எனக்குக் கிடைத்தது. இது இறைவனின் திருவருளே. இதற்கு ஒப்புதல் கொடுத்தது அக்குடும்பத்தாரின் பெருந்தன்மையே.
கொரோனா கொடுமையான தீமைகள் தருவதாயினும், இத் தீமைகளை நன்மையாக்கும் இறைவன், இந்நாட்களில் நமக்குத் தருகிற சமய நல்லிணக்கத்திற்காக, இறைவனைப் போற்றுவோம். இறைவனின் மக்களாய் யாவருக்கும் நன்மையே செய்வோம். எந்த விளம்பரமும் இன்றி, இரவு பகல் பாராது உதவுகின்ற மருத்துவத் துறையினர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர் ஆகியோரின் கைம்மாறு கருதாக் கடமையைப் போற்றுவோம்.
”எல்லோருக்கும் எல்லாமுமாகுவோம்!”