இரண்டு கட்டளைகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:28-31.
“அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக” என்பது முதன்மையான கட்டளை. “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.”
நற்செய்தி மலர்:
திரண்டு கொழுத்தத் தீமை வாழ்வில்,
தெய்வக் கட்டளை கேட்க வேண்டும்.
இரண்டு பண்புகள் என்றும் வேண்டும்.
இவற்றின்படிதான் வாழ வேண்டும்.
முரண்டு பிடித்தல் நிறுத்திவிட்டு,
முழு அன்போடு இறையிடம் வேண்டும்.
சுரண்டுபவர்தான் மனிதரென்றாலும்,
சோராதன்பைச் செலுத்த வேண்டும்!
ஆமென்.