அலைபேசி செய்யும் கொலை!
-கெர்சோம் செல்லையா.
தொலைபேசி வரலாற்றில் அலைபேசி ஒரு புரட்சியே. விலை பேசி வாங்காதவரும், அலைபேசியெனில், தலை சாய்த்து வாங்குவார்கள். கலைப் பொலிவுள்ள, கையளவு பெட்டியால், கதைக்கலாம், காட்டும் படம் பார்த்துச் சிரிக்கலாம்; செய்தியும் வாசிக்கலாம். காணும் காட்சியைப் படமெடுக்க வேறு பெட்டி தேவையில்லை; அலைபேசியாலே பிடிக்கலாம்; அதை உடனடியாகவே பார்க்கலாம்; அதையும் நம் விருப்பபடி அழகு படுத்தலாம்.
எண்ணற்றப் பயன்பாட்டை அலைபேசி தருவதனால், கண்ணற்றுப் போனார்கள் நம்மவர்கள். எங்கு நிற்கிறோம், என்ன செய்கிறோம் என்றுகூடத் தெரியாமல், பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே செல்கிறார்கள். இன்னும் சிலரோ, எதிரே இருப்பவரைத் திட்டுவதுபோல் ஏசுகிறார்கள், ஏசுகிறார்கள், ஏசிக்கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் அமைதியில் அமர உரிமையுண்டு என்பதை மறந்து, இவர்கள் வீட்டுச் சாக்கடையை யாவருக்கும் பகிருகிறார்கள். இவைகள் இப்படியிருக்க, சாலையில் நடக்கும்போதும், வண்டிகள் ஓட்டும்போதும், கையோ, கழுத்தோ அலைபேசிக்குக் கொடுப்பதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணுபவர்கள் இன்று நம்மில் உண்டா?
சில நாட்களுக்கு முன்பு, விபத்து நடந்த இடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இறந்தவர் இளைஞர். இன்னும் திருமணம் ஆகாதவர். இரண்டு தங்கைகளின் அண்ணன். பெரிய நிறுவனத்தில் பெருஞ்சம்பளத்தில் வேலை. பேசியபடியே ஒரு வண்டியில் மோதி, ஒரு சேதமுமின்றி தப்பினார். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்ல, மீண்டும் பேச்சு. காவலர்கள் அமைதியாய் இருக்கச் சொல்லியும் அடங்காப் பேச்சு. முன் நிற்பவர் யார் தெரியாது. தான் நிற்கும் இடமும் தெரியாது. வந்து போகும் வண்டிகளின் ஒலி ஓசையின் செய்தியும் தெரியாது. எதுவும் தெரியாமல் பேசிக்கொண்டிருந்த இவரை, எதுவும் கூறாமலே இடித்துப் போட்டுச் சென்றான் எதுவும் செய்ய இயலாத ஒரு வண்டிக்காரன். கண்விழித்துக் காவற்பணிபுரிந்தும், காப்பாற்ற இயலாத காவல்துறை நண்பர்கள், கவலையுடன் சொன்னார்கள்:
இது, அலைபேசி செய்த கொலை!
எனது இனிய நண்பர்களே, பேசுங்கள்; நன்றாகப் பேசுங்கள். உங்கள் பேச்சைவிடவும் உங்கள் உயிர்மூச்சு பெரிதென்று உங்கள் வீட்டார் சொல்வதைக் கேட்டு, புரிந்து, தெரிந்து, பின் பேசுங்கள்!
இறையருளில் வாழ்வீராக!