அறிவா? அறிவீனமா?

இந்தியனாக எழுதுகிறேன்!

இதை வாசிக்கவே பலர் மறுக்கலாம்; சிலர் வெறுக்கவும் செய்யலாம். எனினும் உங்கள் எண்ணத்தை, எழுத்தை நான் மதித்து வாசிப்பதுபோல இதையும் வாசிக்க வேண்டுகிறேன்.

இந்தியன் ஒருவன், இயேசு கிறித்துவே தனக்கு எல்லாம் என்று நம்பிக்கொண்டு, அவரது அன்பையே வாழும் வழி முறையாகக் கொண்டு, இந்தியாவில் வாழ முடிவெடுத்தால், இந்தியாவிற்கு அதனால் கேடுகள் வருமா? பிற இந்தியருக்கு அவனால் பாடுகள் வருமா?

வரும் என்று எண்ணி, பலர் எழுதுவதும், எச்சரிப்பதும், இடர்கள் கொடுப்பதும், சிலருக்கு ‘அறிவு’ என்றும், ‘ஆன்மிகம்’ என்றும், இன்னும் ஒருபடி மேலேறி, ‘இந்திய நாட்டுப் பற்று’ என்றும் தெரிகிறதே!, இது அறிவா? இல்லை, அறியாமையா?

கடவுளிடம் அன்புகொள்; காணும் மனிதரிடமும் (அயலாரிடமும்) அன்புகொள்! இதுதானே இயேசுவின் திருவாக்கு.

துன்புறுத்தும் நிலையிலும் வன்முறையை நாடாது, அன்புகொள்வதுதானே அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறை.

இதைச் சொல்ல உரிமையும், இதன்படி வாழ உரிமையும் கொடுத்த நாடு, என் இந்திய நாடு. இந் நாட்டைப் போற்றுவதும், இந்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதும் இந்நாட்டில் பிறந்த எனது கடமையல்லவா?

நாடு என்பது, பலருக்கு மண்ணாகத் தெரியலாம். அதை விரும்பி, நாட்டுப் பற்று என்று சொல்லலாம். மண்ணும், நிலமும், மாபெரும் மலையும், தண்ணீர் ஆறும், தருகிற வளமும், மட்டுமா நாடு? அவற்றை மட்டும் போற்றுவதுவா நாட்டுப் பற்று?

நாட்டின் மண்ணை விரும்புவோரே, நாட்டில் வாழும் அல்லது வாடும் மனிதரைப் பாருங்கள். அவர்கள் உங்கள் இனம், மொழி, இடம், சாராதவர்களாய் இருக்கலாம்; அல்லது சமயம், பண்பாடு, கொள்கைகளைச் சேராதவர்களாய் இருக்கலாம். அல்லது செல்வங்கள், சொத்துக்கள் பாராதவர்களாய் இருக்கலாம். ஆயினும் அவர்களும் இந்தியர்களே. அவர்களை வெறுத்து, அவர்கள் வாழும் மண்ணை மட்டும் விரும்பினால் அது நாட்டுப் பற்றாகுமா?

இவர்கள் மீது அன்புகொள் என்கிற கிறித்துவின் வாக்கு, எப்படி இந்திய நாட்டுப் பற்றிற்கு எதிராகும்? இதைப் பின்பற்றும் கிறித்தவர் எப்படி இந்திய எதிரியாக இருக்க முடியும்? அன்பும், நன்மையையுமே அறவழியாகும். அவற்றை எதிர்ப்பது அறியாமையேயன்றி வேறு எதுவாகும்?

இந்த அறியாமையை அறிவு என்றும், இதுவே நாட்டுப் பற்று என்றும் தொடர்ந்து பேசுகிற, எழுதுகிற, ‘அறிஞர்’ பெருமக்களே, உங்கள் எண்ணங்களில் அன்பு பிறவாதவரை, உங்கள் பேச்சு வீண், உங்கள் எழுத்து வீண், உங்கள் செயல்கள் வீண்; உங்கள் வாழ்க்கையுமே வீண்.

வீணாய் வாழ்ந்து வீணாய்ப் போவதைவிட, அறிவை நாடுங்கள்; அன்பில் பிறக்கும் இறையறிவைத் தேடுங்கள்.

அன்பிலா வாழ்வில் அறிவுமில்லை!

அயலார் வெறுத்தல் நெறியுமில்லை.

வன்முறை வாழ்க்கை வழியுமில்லை;

வாழ உதவுவோம், பழியுமில்லை!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply