பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பெற்றோரே.


​இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே பெப்ருவரி பதினான்காம் நாளில்தான், எனது தாயார் கிளாறி பெல் செல்லையா அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை முடித்து, அவர்களை ஆண்டு வழி நடத்திய ஆண்டவருடன் இணைந்தார்கள்.
ஈத்தவிளை பாக்கியநாதன்-லீதியாவிற்கு மகளாய்ப் பிறந்த பெருமையும், திருவட்டாறு (புத்தன்கடை) செல்லையாவுக்கு மனைவியாய் வாழ்ந்த பேறும், ஆறு பிள்ளைகளை அறவழியில் நடக்கவைத்து, ஆங்காங்கே உயர்ந்த இடங்களில் அமரவைத்துப் பார்த்த மகிழ்வும் பெற்றவர்.
தனது வயிற்றில் உருவாகும்போதே, தன் மகனை இறைப்பணிக்கு ஒப்படைத்தவர்; தந்தை இறையை மறுத்துத் தவறாய் பேசித்திரிந்த தனது மகன், கிறித்துவில் புதுவாழ்வுபெற நீண்ட காலம் இறைவேண்டல் ஏறெடுத்தவர். கிறித்துவில் பிறந்த மகன் வெளிநாட்டு வேலை செய்த நாளில், கிறித்துவில் வளர்வதற்கு, கிறித்துவின் அறவழியைக் கடிதங்கள் வழியாய்க் கற்றுக் கொடுத்தவர்.
இறக்கும் வேளையில், இனிய கணவருடன் எல்லாப் பிள்ளைகளும் அருகிலிருக்க, இயேசுவிற்குக் கொடுத்த மகன் இல்லாதிருந்தும், அவனை ஆண்டவர் ஊழியப் பாதையில் வழி நடத்துவார் என்று உறுதியாய் நம்பியவர்.
வாழ்ந்த பகுதியில் இருந்த எளிய திருக்கூட்டம் வளர, அருட்பணியில் ஈடுபட்டவர்; வீழ்ந்து கிடந்த தனது ஊர்ப்பகுதி மக்கள் உயர, தான் கற்ற கல்வியாலும், தன்னுள் வாழ்ந்த கிறித்துவின் அருளாலும், நற்பணியாற்றியவர்.
இவரது மகன் என்று சொல்லும் பெருமையை எனக்குத்தந்து, எப்படி இறைப்பணி செய்யவேண்டும் என்று எனக்குக் கற்றுத்தந்து, இன்றும் எனக்கு வழி காட்டும் என் தாயாரை நினைக்கிறேன்.
“பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பெற்றோர்களே.”
நீதிமொழி 17: 6.
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply