அருட்செய்தி

கேட்டு மகிழ்வீர் நற்செய்தி;
கிறித்து வழங்கும் அருட் செய்தி!

நல்வாழ்த்து:
காது உள்ளவர் கேட்பார் என்றீர்;
காதைப் பெற்றுக் கேட்கின்றோம்.

வாது எல்லாம் நீங்கச் செய்வீர்;
வாழ்த்தி உம்மைத் தொழுகின்றோம்.

தீது நாளில் உந்தன் வீட்டில்
பாதுகாப்பீர், புகழ்கின்றோம்.

ஏது மில்லா இந்த வாழ்வை
இனிமையாக்கும், வாழ்கின்றோம்!

நல்வாக்கு:மத்தேயு 26:14-16.
காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்:

“பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘ இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ‘ என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.”

நல்வாழ்வு:

முப்பது வெள்ளிக் காசிற்காகக்
முடிச்சில் விழுந்தான் யூதாசு.

அப்போதிருந்தது போன்று இன்றும்
அழிக்கப் பார்க்கிறான் பிசாசு.

தப்பாய்ச் செல்வம் சேர்க்க விரும்பின்
தாவி ஓடுமே நம் காசு.

எப்போதும் நாம் மறக்க வேண்டாம்;
இயேசு போதுமே, இவை தூசு!

ஆமென்.

Leave a Reply