தீமை!

தீங்கின் முடிவு!  


நற்செய்தி: யோவான் 8:20-21.


20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.  


நல்வழி: 


தீங்கை விற்கும் தீமையாளர்,

தெய்வ மீட்பை வாங்காரே.

ஏங்கி நின்றும், ஏற்கா மனிதர்,

இறுதித் தீர்ப்பைத் தாங்காரே.

வாங்கி விற்கா மீட்பையருள்வார்;

வல்லமை இறையும் தூங்காரே. 

தாங்கி ஏற்று நம் பழி சுமந்தார்;

தனையன் அன்பில் நீங்காரே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

நாலடி நற்செய்தி…6.

நாலடி நற்செய்தி …6. 

அன்பு!


தன்னலம் இல்லா நிலைதான் அன்பு;

தருகிற  இறையிடம் கற்பாயா?

உன்னினம் கடந்து உதவும் பண்பு,

உண்மை அறமென நிற்பாயா?

-செல்லையா.

மகனைக் கண்டு!

மகனைப் பார்த்து தந்தையை அறிதல்!

நற்செய்தி: யோவான் 8:19.  

19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.   


நல்வழி:

பிள்ளையின் வடிவில் பெற்றோர் காணும்,

பேதமை இல்லாக் கருத்தவராய்,

கள்ளமும் தவறும் செய்வார் கண்டு,

காணாத் தந்தையை, பழிக்கிறோம்.

உள்ளமும் நாவும் உரைத்திட நாணும்,

ஓவாச் செயலே செய்பவராய், 

வெள்ளை இயேசு மகனைக் கொண்டு,

விண் பாராது, முழிக்கிறோம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.

இறைவழி!

நாலடி நற்செய்தி…5


இறைவழி!


திருவடி அடையும் பெருவழி கேட்டேன். 

தெரியா வழிகள் சொன்னார்கள். 

ஒரு வழி கண்டு,  உட்புகுந்திட்டேன். 

இறைவழி அன்பு என்பார்கள்!


-செல்லையா. 

இறை விருப்பு!

நாலடி நற்செய்தி…4.

இறைவிருப்பு!

எதைச் செய்தாலும் இறை விருப்பா,

என்று பார்த்தல் நம் கடமை.

இதைச் செய்யாமல் ஒரு பொறுப்பா?

இழப்போம் நெஞ்சின் தனியுடமை!

-செல்லையா.

சான்று!

சான்று!


நற்செய்தி:யோவான் 8:17-18. 

நல்வழி:   


இருவர் சான்று ஒன்றாய் இருப்பின் 

ஏற்றுக் கொண்டது திருச்சட்டம்.

ஒருவர் தந்தை, ஒருவர் மைந்தன்;

ஒன்றாய்த் தருவது இறைத்திட்டம். 

திருடர், பொய்யர், வாக்கை நம்பி, 

தேய்ந்து போகுது ஒரு கூட்டம். 

பெருமை விட்டு, தாழ்மை பூண்ட,

பேரொளி அறிவே பரவட்டும்!    


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நற்செய்தி…3.

இறையறிவு!

நாலடி நற்செய்தி…3. 


இறையறிவு! 

உம்மாலே  நான், உமக்கென்றே  நான்;

உணர்ந்து வாழ்வதே இறையறிவு. 

இம் மா அறிவை இறையே தருவான்.

இறைவழி வாழ்வே நிறையறிவு!

-செல்லையா.

அறிவு!

நாலடி நற்செய்தி…2.

அறிவு!

அன்பின் செயலே அறிவின் சிறப்பு.

அதை அடைய உழைப்போமே.

நன்மை செய்யா வாழ்வும் இறப்பு.

நம்பி, வாழ்ந்து, தழைப்போமே!

-செல்லையா.

இறையின் தீர்ப்பு!

இறையின் தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 8:15-16.  

நல்வழி:  

ஆண்டிக்கும் தீர்ப்பு, அரசிற்கும் தீர்ப்பு,

ஆண்டவர் தீர்ப்பு ஒன்றேயாம்.

வேண்டிடும் நேர்மை, விரைவில் வருது.

விண்ணின் முடிவு நன்றேயாம்.

கூண்டில் அடைக்கும் முன்பே பார்த்து,

குற்றம் தவிர்ப்பது என்றேயாம்? 

மாண்டபின் பேசிப் பயனேயில்லை.

மனிதா திருந்து, இன்றேயாம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

அறிய விரும்புவோம்!

அறிய விரும்புவோம்!


நற்செய்தி: யோவான் 8:13-14.

13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.

நல்வழி:

அன்று அவர்கள் அறியவில்லை;

அறிந்து கொள்ள விரும்பவில்லை.

இன்று பலபேர் விரும்பவில்லை.

இதனால் அறிவும் புரியவில்லை.

ஒன்று மட்டும் தெரிந்திடுவோம்.

உண்மை அறிய விரும்பிடுவோம்.

சென்று இயேசுவை நோக்கிடுவோம்;

சிதைக்கும் மடமும் நீக்கிடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.