நாள்தோறும் நற்செய்தி

கடவுளின் வாக்கைக் கேட்போமா?
கவலை நீங்குதல் காண்போமா?

நல்வாழ்த்து:
தேறுதல் இன்றி அலைந்தவனின்
மீறுதல் யாவையும் மன்னித்து,
ஆறுதல் தந்த அருள்வாக்கைக்
கூறுதலே இந்நல்வாழ்த்து!

நல்வாக்கு;
மத்தேயு/Matthew 24:23-25.
“அப்பொழுது யாராவது உங்களிடம், ‘ இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார் ‘ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள். இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.”

நல்வாழ்வு:
கள்ள வாக்கினரும்,
கறையான ஊழியரும்,
அள்ளிச் செல்கின்றார்,
அறியா மந்தையினை.
தெள்ளத் தெளிவு பெற,
திருக்கூட்டம் மீண்டு வர
கொள்ளையானவரைக்
கொணர்வது நம்கடமை!
ஆமென்.

நாள்தோறும் நற்செய்தி

படைத்தவர் வாக்கைக் கேட்போமே,
கிடைத்திடும் பண்பில் மகிழ்வோமே!
நல்வாழ்த்து:
பற்றுறுதி நீதி தரும்.
படைத்தவரைப் பணிவீர்.
பெற்று வரும் தூய்மையினால்,
பெரு நன்மை புரிவீர்.
மற்றவரும் பின் வருவர்;
மறை வழியில் நடப்பீர்.
கற்றறிந்த உண்மையிது;
கடவுளையே புகழ்வீர்!

நல்வாக்கு:
மத்தேயு/Matthew 24:19-22.

“அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.”

நல்வாழ்வு:

எரிந்தழிக்கும் இன்னலின்று உரிந்தெடுக்கும் இறையே.
விரிந்திடுதே என் துன்பம், வெறுக்கின்றேன் குறையே.
சரிந்துவிழும் வாழ்க்கையினைச் சரிசெய்தல் முறையே!
புரிந்து கொண்டு கேட்கின்றேன்; அருள் தாரும் நிறைவே!

ஆமென்.