பற்றால் மீட்பு பெற்றவர் இனிமேல்,
பழைய தீவினை வெறுக்கட்டும்.
பெற்றோம் உரிமம் என நினையாமல்,
பிழைகள் தவிர்க்க, நொறுக்கட்டும்.
வற்றாவூற்றாய் வடியும் வகையில்,
வளரும் நேர்மை பிறக்கட்டும்.
கற்றோம் என்கிற இறுமாப்பின்றி,
கயமை யாவும் துறக்கட்டும்!
(உரோமர் 6)
The Truth Will Make You Free
பற்றால் மீட்பு பெற்றவர் இனிமேல்,
பழைய தீவினை வெறுக்கட்டும்.
பெற்றோம் உரிமம் என நினையாமல்,
பிழைகள் தவிர்க்க, நொறுக்கட்டும்.
வற்றாவூற்றாய் வடியும் வகையில்,
வளரும் நேர்மை பிறக்கட்டும்.
கற்றோம் என்கிற இறுமாப்பின்றி,
கயமை யாவும் துறக்கட்டும்!
(உரோமர் 6)
எழுபத்தி ஆறு பிறக்கிறது!
எழுபத்தி ஐந்து ஆண்டுகள் முடித்து,
இன்னொரு நாளும் காணுகிறேன்.
இழுப்பார் விருப்பை நானும் எடுத்து,
இயங்கியதால் வழி கோணுகிறேன்.
பழுத்தவன் எனினும், பழியும் பிடித்து,
படைத்தவர் முன்பு நாணுகிறேன்.
அழைக்கும் இயேசு, நீட்டிக் கொடுத்து,
ஆளுவதால், அன்பு பூணுகிறேன்!
-கெர்சோம் செல்லையா.
நீதி நேர்மை அளந்து பார்க்கின்,
நிறை குறைந்து இருக்கிறோம்.
பாதி அளவும் தாண்டாதவராய்,
பரிதவிப்பைப் பெருக்கிறோம்.
ஆதி இறைதான் நேர்மை நிறைவு;
அவர்முன் எப்படி நிற்கிறோம்?
பீதி வேண்டாம், பிடிக்கும் பற்றால்,
பேரருள் மீட்பு பெறுகிறோம்!
(உரோமர் 3)
நீண்ட நெடியக் கடிதங்கள் எழுதி,
நிறைவேற்றும் பவுல் ஊழியம்,
தாண்ட முடியாத் தடைகள் உடைக்க,
தலைவன் அருளும் வாழ்வியம்.
ஆண்ட அரசர்கள் அனைவரும் போனார்;
அப்போத்தலனோ வாழ்கிறார்.
ஈண்டு இதனை ஏற்றின்று பணிவார்,
என்றும் இறையுள் ஆள்கிறார்!
(தீமோத்தேயு & தீத்து கடிதங்கள்)
எத்தனை திரள் என் தீவினை அறிவேன்;
எப்படி நான் இறை மீட்பு பெறுவேன்?
அத்தனை வழிகளும் முட்டிடும் சந்து;
அழுது, திரும்புது, என் மகிழ்வுந்து!
ஒத்தையொரு வழி பவுல் அறிவித்தார்;
இயேசு மீதுறும் பற்றென்றுரைத்தார்.
பித்தம் தெளிய நான் பற்றிக் கொண்டேன்.
பேரருளாலே, மீட்பும் கண்டேன்!
(உரோமர் 3)
முதற்பயனாகத் தன்னுயிர் ஈந்த,
மூப்பன் தேவான் முடிவிற்கு,
எதற்கும் துணிந்த இளைஞன் பவுலே
ஏது என்று வருகிறான்.
அதற்குப் பிறகு நடந்த நிகழ்வை,
ஆயும் மனிதர் விடிவிற்கு,
புதர்க்குள் இருந்த புலியாய் அல்ல,
புறாவாகித் தருகிறான்!
(திருத்தூதர் பணிகள் 8 & 9)
துன்பங்கள் ஏற்று அருட்பணி செய்தோர்,
தொலைவுப் பயணம் செல்கிறார்.
நன்னிலம் மட்டுமே கனி தரும் என்று,
நாடுகள் திருந்தச் சொல்கிறார்.
அன்னியர் என்று இதுவரை வைதோர்,
அன்பில் புத்துரு கொள்கிறார்.
என்னிலமாயினும் இறைக்கு ஒன்று;
இயேசு அன்பாய் வெல்கிறார்!
(திருத்தூதர் பணிகள் 8)
உயிர்த்தார் இயேசு என்றே உரைத்து,
உயிரும் ஈந்தார் அந்நாளில்.
வயிற்றால் வாழ்ந்து, வஞ்சிப்போரே
வளருகின்றார் இந்நாளில்.
கயிற்றால் கட்டப் பட்டிருப்பாரை
கரை சேர்ப்பது எந்நாளில்?
பயின்றார், மறந்தார் என்றில்லாமல்,
படைத்து, பணிகிற நன்னாளில்!
(திருத்தூதர் பணிகள் 5, 6 & 7)
புழு!
மண்ணில் உழலும் புழுவைக் கண்டு,
மனித பெருமை அகலக் கண்டேன்.
கண்ணில் காணும் அப்புழு உண்டு,
கால் நீட்டும் தவளையும் கண்டேன்.
அந்த தவளையை விழுங்கிக் கொண்டு,
அடி வாங்கும் பாம்பும் கண்டேன்.
இந்த பெருமை புகழ் தூள் துண்டு!
இவனை உண்ணும் புழு கண்டேன்!
-கெர்சோம் செல்லையா.
ஒரு வீட்டவர் நாம் என்பது தெரிந்து,
ஒன்றாய் அடியர் உழைக்கிறார்.
மறு கடையாளரும் மைந்தனை அறிந்து,
மாட்சி அடைய அழைக்கிறார்.
வறுமையில் எவரும் விழுவது தடுத்து,
வளங்கள் ஒன்றாய் இணைக்கிறார்.
எருசலேம் நகரில் இப்படிக் கொடுத்து,
இயேசுவைக் கட்டி அணைக்கிறார்!
(திருத்தூதர் பணிகள் 2: 42-47).