உடல், பொருள், ஆவி !

உடல், பொருள், ஆவி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:15.

15பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உடல், பொருள், ஆவி மூன்றுமிருக்க,
உடலின் தேவையைத் தேடுகிறோம்.
கடல் அலை போன்று அவாவும் தொடர, 
காசினைப் பெருக்க ஓடுகிறோம்.
அடல் வெறி கொண்டு அடுக்கும் பொருளோ,
அழிவது கண்டு வாடுகிறோம்.
மடயரின் வரிசையில் நின்றது போதும்;
மறைநூல் வாக்கை நாடிடுவோம்!
ஆமென்.

குத்தகை என்று எண்ணி….

குத்தகை என்றே எண்ணுவோம்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:13-14.

13அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
14அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சொத்திற்காகச் சொந்தம் பகைக்கும்,
சொல்லை விரும்ப உலகோர்க்கு,
வித்தை செய்து, பங்கு பிரிக்கும்,
வேலை செய்யுமோ விண்ணரசு?
மொத்தச் சொத்தும் இறையீவாகும்,
மீட்பு நிலை கண்டோர்க்குக்
குத்தகையென்றே எண்ணத் தோன்றும்,
கொடுக்கப்பட்ட மண்ணரசு!
ஆமென்.

நடுவர் முன்பு என்செய்வேன்?

நடுவர் முன்பு என்செய்வேன்?
கிறித்துவின் வாக்கு:லூக்கா 12:11-12.

11அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்.12நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அடிப்பார், உதைப்பார், அவமதிப்பார்;
அவரது அறிவினில்தான் நடப்பார்.
பிடிப்பார், இழுப்பார், வழக்குரைப்பார்;
பொய்ச் சான்றினில்தான் கிடப்பார்.
இடிப்பார் இவருக்கில்லையென்பார்.
இல்லை, இறைவன்தான் காப்பார்.
துடிப்பார் மீள என்செய்வார்?
தூய வாக்கால்தான் மீட்பார்!
ஆமென்.

பொறுக்கப் படுவீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:10.
10எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.


கிறித்துவில் வாழ்வு:


சொல்லும் கிறித்துவை நம்பார் பின்னர்,

சொற்படி நடந்தால் மீட்படைவார்.

வெல்லும் ஆவியர் செயலின் முன்னர்,

வெறுப்புமிழ்ந்தால் கேடடைவார்.

கொல்லும் கொடிய வாக்குரைப்பார்,

குறைகளுணர்ந்தால் அருளடைவார்.

நில்லும் என்று உரைத்தும் கேளார்,

நேர்வழி காணா இருளடைவார்!


ஆமென்.

துணிவுடன் உரைப்போம்!

துணிவற்றவரே கேளுங்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:8-9.

8 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.9 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.

கிறித்துவில் வாழ்வு:
தூய ஆவியர் துணையாயிருக்கத்
துணிவிற்குப் பஞ்சம் வராது.
ஆய கலைகள் அனைத்தும் கொடாத
அறிவிற்கும், குறைவு இராது.
மாயவலையில் சிக்குண்டோரே,
மறந்து இறையருள் பெறாது,
நேயனேசுவுவை மறுதலிக்கின்றார்,
நேர்மை வாழ்வும் தராது!
ஆமென்.

நாடும் கேடும்

நாடும் கேடும்!


கொலைவெறி நெஞ்சில் கொண்டவரும்,

கொள்ளையில் பங்கு கொள்பவரும்,

தலைவர்கள் என்று உயர்வதினால்,

தவறி விழுதே தாய்நாடு.

சிலைகளுக்களிக்கும் சிறப்புகளில்,

சிறிதொரு பங்கு எளியவர்க்கும்,

இலையில் உணவாய் இராததினால்,

இன்று எழுதே இக்கேடு!


-கெர்சோம் செல்லையா.

மறவாதவர்!

குருவியையே மறக்கவில்லை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:6-7.

6இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.
7உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எந்தலை மயிரை எண்ணியறியேன்.
எத்தனையென்று இறையறிவார்.
இந்நிலைதானே எவரிலுமென்பேன்;
இறைவறிவாழம் யாரறிவார்?
மந்தமாய்ப் பறக்கும் குருவியைக்கூட, 
மறவாதவர்தான் நல்லிறைவன்.
வெந்தணல் வெறியர் வென்றிடுவாரோ?
விடுதலையாளரே நம்மிறைவன்!
ஆமென்.

அஞ்சாதீர்!

அஞ்ச வேண்டாம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:4-5.

4என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அஞ்சி அஞ்சி அழுவதற்கென்றே
ஆண்டவர் நம்மைப் படைத்தாரா?
மிஞ்சி மிஞ்சித் துன்பம் தரவே,
மீட்பரும் துணையாய்க் கிடைத்தாரா?
கொஞ்சங்கூட அறிவில்லார்தான்,
குறையுள்ள மனிதனுக்கஞ்சுகிறார்.
தஞ்சமென்று கிறித்துவைப் பார்ப்பார்,
தாங்கும் அவருடன் கொஞ்சுகிறார்!
ஆமென்.

யாருக்கும் தெரியாததா?

யாருக்கும் தெரியாததும்…கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:2-3.

2வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
3ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.

கிறித்துவில் வாழ்வு:
யாருக்கும் தெரியா எண்ணமும்கூட,
இறையால் இன்று வெளிப்படுமே.
பேருக்குத் தூயோனாக இருந்தால்,
பிழைகள் பெருகிப் பழித்திடுமே.
தாருக்கும் வேண்டும் நறுமணமென்று 
தரைச் செடி யாவும் அறிந்திடுமே.
ஊருக்கு நல்லவன் பட்டம் அல்ல;
உள்ளில் உண்மை தெரிந்திடுமே!
ஆமென்.

புளித்த மாவு!

புளித்த மாவு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:1.

1அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சிறு புளித்துண்டு மாவில் விழவே, 
சேர்த்து பானையில் கொட்டிவைத்தேன்.
இரு பெருங்காலம் கடந்த பிறகே,
யானும் நினைந்து, கட்டவிழ்த்தேன்.
அருவருப்பான வாடை எழவே,
அப்புளிப் பானையைப் போட்டுடைத்தேன்.
பெருமையும் இதுபோல் பரவுதல் கண்டே,
பேரிடர் ஒழிக்கப் பாட்டெடுத்தேன்! 
ஆமென்.