எது தொடர்ந்து வரும்?

எது தொடர்ந்து வரும்? 


எந்தனெண்ணம் நின்றுவிடின்,


இறப்பு என்று பொருளாகும். 

வந்தனமும், நிந்தனையும், 

வரயியலாமல் இருளாகும்.

இந்தநிலையை  எண்ணாமல், 

இங்கு நாமிருப்பின் மருளாகும். 

சொந்தமெனத் தொடர்ந்துவர, 

தேவை, இறை அருளாகும்!


-கெர்சோம் செல்லையா. 

வைர விடுதலை நாள் விழா!

வைர விடுதலை நாள் விழா!


விடுதலையடைந்து வைரம் வந்தும்,

விடியலைத்தானே, தேடுகிறோம்.

குடியரசென்று தலைவர்களிருந்தும்,

குடும்பச்செலவிலே,  வாடுகிறோம்.

படுதலை என்று பல குறை கண்டும்,

பாரதம் செழிக்க, கூடுகிறோம்.

கெடுதலை  ஒழிக்க யாரால் கூடும்? 

கெஞ்சிக் கேட்டு, பாடுகிறோம்!


-செல்லையா.

வேண்டாம் பெருமை!

நல்வழி: 


கூட்டம் மிகுதி சேரும்போது 

கொள்ள வேண்டாம் பெருமை.


வாட்டம் உற்ற ஊர் மறந்து

வராருக்கிருப்பது சிறுமை.


ஆட்டம் போடும் ஊழியருக்கு,


ஆண்டவருரைப்பது எளிமை.


போட்ட திட்டம் வீழும்போது, 


புரியும் அவரது வலிமை!


ஆமென்.


-செல்லையா..

சினம் விடு இறைவன்!

சினம் விடு இறைவன்!


நற்செய்தி: யோவான்  3:34-36.

நல்வாழ்வு:


இன்னில வாழ்வின் இறுதிக் கணக்கை, 

இறைவன் கேட்கும் நாள் எதுவோ?

நன்மை, தீமை, உண்மை, பொய்மை,


நடுவர் அளக்கும் நூல் எதுவோ?


என்னில நெஞ்சில் இருக்கும் களையை,


இன்றே அரியும் வாள் எதுவோ?


சென்னையிலிருந்து சிறியன் கேட்டேன்;


சினம் விடு இறையின் தாள் எதுவோ?


ஆமென்.


-செல்லையா.

விண்ணைக் கண்டோர்!

விண்ணைக் கண்டோர்!

நற்செய்தி: யோவான் 3:31-33.

நல்வழி:
மண்ணைக் கண்டோர் மண்ணைக் கூட்டின்,
மகிழும் மனிதர் ஏற்றிடலாம்.
விண்ணைக் கண்டோர் விண்ணைக் காட்டின்,
விரும்பா பலபேர் தூற்றிடலாம்.
உண்மைத் தெரியார் உள்ளம் பூட்டின்,

உதவா கதையென மாற்றிடலாம்.
கண்ணைத் திறப்பீர்; கடவுட் ஏட்டின், 
கருவாம் அன்பில் போற்றிடலாம்!
ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

தாழ்மை!

தாழ்மை!
நற்செய்தி : யோவான் 3:30.

நல்வழி:
வண்டு சுவைத்து, பறக்கின்ற

வாழ்வும், வழியும் கேளேன்.
உண்டு மகிழ்ந்து, மறக்கின்ற
உயர்வும், உலகும் கேளேன்.
தண்டு வடத்தை அறுக்கின்ற,
தலையும், கையும் கேளேன்.
தொண்டு திறந்து பிறக்கின்ற,

தூயன் அடியே கேட்பேன். 
ஆமென்.

-செல்லையா.

நிறைவு தரும் தொண்டு!

நிறைவுதரும் தொண்டு!
நற்செய்தி: யோவான் 3:28-29.

நல்வழி: 
எந்தச் செயலைச் செய்தாலும்,
ஈசன் புகழுக்கில்லையெனில்,’
அந்தப் பணியில் மகிழ்வில்லை.
அறியாருக்கும் நிறைவில்லை.
சொந்தப் புகழ்ச்சி விரும்பாமல்,
சொல்லும் செயலும் ஏசு எனில்,
இந்தத் தொண்டில் துயரில்லை. 
அடியாருக்கும் குறையில்லை!
ஆமென்.
-செல்லையா.

இறையருளும் இனிமை!

இறையருளும் இனிமை!

நற்செய்தி 3:27.


27. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.


நல்வழி: 


இறை அருளும் இனிமை போதும்;

இந்த அறிவை ஏற்க வாரும்.

குறை பொருளை நாடிப் போகும், 

குற்ற நெஞ்சை மீட்கத் தாரும்.

நிறை வாழ்வின் முழுமை காணும்;

நீவிர் தேடா இயேசு பாரும்.

பிறை வளரும் காட்சியாகும்,

பேரரசுள் வந்து சேரும்!


ஆமென்.


-செல்லையா.

தூய்மை?

தூய்மை?

நற்செய்தி: 3:24-26.


24. அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக் குறித்துவாக்குவாதமுண்டாயிற்று.
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.


நல்வழி:


நீரால், நெருப்பால், நிலையாப் பொருளால்,

நினைப்போர் பெறலாம் புறத் தூய்மை.

ஊரால், உறவால், ஓங்கும் அரசால்,

உலகும் பெறலாம் புறத் தூய்மை.

யாரால் கிடைக்கும், எங்கே கிடைக்கும்,

எப்படி கிடைக்கும் அகத் தூய்மை?

சீராய் மாற்றும் சிறுமை அகற்றும்,

சிலுவை ஈவதே அகத் தூய்மை!


ஆமென்.


-செல்லையா.

அன்பில் அமிழ்வோம்!

அன்பில் அமிழ்வோம்!
நற்செய்தி: யோவான் 3:22-23.

நல்வழி: 
இப்படி இப்படி இருக்கவேண்டும்,
என்று சடங்கை விளக்கும் நாம்,
அப்படி அப்படி குறைவற்றிருக்க,
அன்புள் மூழ்கி எழுந்தோமா?
தப்படி தப்படி இது என்றுரைத்து, 

தண்ணீர் ஆழம் அளக்கும் நாம், 

எப்படி எப்படி வாழ வேண்டும்,
என்கிற ஆவியில் எழுவோமா?
ஆமென்.
-செல்லையா.