மூடுவோம் நாம்!

திறந்ததை மூட எவருமில்லை;
தெரிந்தது இவருக்கு வரையும் கலை!
இறந்த பின் தலைக்கு என்ன விலை?
எழுந்து மாற்றுவோம் அவல நிலை!
– கெர்சோம் செல்லையா.
Photo: இந்த தெரு ஓவியத்தை பார்த்தவுடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது. கமெண்டில் எழுதுங்கள்.

என்னுடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்?

நல்வாழ்த்து:
முண்டி அடித்துச் செல்வோர் உலகில்
நொண்டிக் கொண்டு நானும் வந்தேன்.
அண்டிக் கொள்ள வேண்டி நின்றேன்;
கண்டு அணைத்தீர்; களிப்பில் புகழ்ந்தேன்!
நல்வாக்கு: மத்தேயு 26:19-22.
“இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ‘ உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘ ஆண்டவரே, அது நானோ? ‘ என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.”

நல்வாழ்வு:

என்னுடன் இருப்பவர்கள்
எப்படிப் பட்டவர்கள்?
எனக்குத் தெரியவில்லை;
இது என் அவல நிலை!
பொன் பொருள் காசிற்கு,
போட்டுக் கொடுப்பவர்கள்
புகழும் உரைச் சொல்லை
புரிந்திட இயலவில்லை!
இன்முகம் இது என்று
எண்ணம் கொண்டின்று
ஏமா றுகிறேன் நான்;
இதை நீர் அறிந்தவர்தான்!
வன்மை வஞ்சங்கள்
வளைக்கும் உலகினிலே,
வாழ்ந்திட விரும்புகிறேன்;
வாக்கைத்தான் நம்புகிறேன்!
ஆமென்.

யாருக்குக் கொடுக்கிறோம்?

இவர்களுக்கிரங்கும் இறைவன் உண்டு;
இயேசுவின் அடியார் சொல்வாரா?

சுவர்களின் நடுவில் முழங்கும் வாக்கு,
செயல்பட அவரும் செல்வாரா?

தவறுகள் உணர்ந்து, தம் நிலை அறிந்து,
தாழ்ந்தோர் எழும்பக் கொடுப்பாரா?

எவர் எவருக்கோ எடுத்துக் கொடுத்து,
ஏமாறுவதை விடுப்பாரா?

-கெர்சோம் செல்லையா.

Photo

வேளை வந்தது

வெறுமனே திரும்பா வாக்கைக் கேட்போம்;
விண்ணின் வழியை  விரும்பி ஏற்போம்!

நல்வாழ்த்து:

மறை பொருள் வெளிப்படும் காலத்திலே,
மைந்தனின் வாக்கு பலிக்கையிலே,
குறையுள்ள என்னைப் பார்ப்பவரே,
கொடுத்தேன் நெஞ்சை ஏற்பீரே!

நல்வாக்கு:மத்தேயு 26:17-18
பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்:
“புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ‘ நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ‘ என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘ நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘ எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ‘ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ‘ என்றார்.இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.”
நல்வாழ்வு:
ஒவ்வொன்றிற்கும் நேரம் குறித்து,
உமது விருப்பை நிறைவேற்றும்.
எவ்வகை இன்னல் எதிர்வந்தாலும்
இயேசு வழியில் முறியடியும்.
செவ்வை வழியை விடாதிருக்கச்
சிறிய என் கை பிடித்தருளும்.
அவ்வித வாழ்வே எனக்குப் போதும்,
அதுதான் எனக்குப் பேரின்பம்!
ஆமென்.

கடன்பட்டார்!

அன்புக் கடனா?
காசைக் கடனாய்க் கொடுத்துவிடு;
காசையும் உறவையும் இழந்துவிடு.
ஆசைச் சொல்லுடன் வந்தவர்கள்
அப்படி மறைவதைப் பார்த்துவிடு!

தூசைத் தட்டி எழும்பி விடு;
துயர் தருவாரை மறந்துவிடு.
ஏசையாமேல் பற்று வைத்து
ஏழையருக்கு இரங்கிவிடு!

-கெர்சோம் செல்லையா.

Photo: Try to follow - Bency

இவர்கள் விடுதலை பெறுவாரா?

இவர்கள் விடுதலை பெறுவாரா?
இனிய வாழ்வில் மகிழ்வாரா?
அவலம் மறைக்கவும் உடையில்லை;
அதையே அழகு என்பாரா?

எவர்கள் உதவிட வருவாரோ,
அவர்கள் இறையின் ஊழியராம்;
சுவர்கள் எழுப்பிப் பிரிக்காமல்,
சேர்க்கும் பணியைச் செய்வாராம்!

-கெர்சோம் செல்லையா.

Photo: Say "Yes" if Beautiful!!!
Like ·  · Pr

பட்டணம் பார்த்து படைத்தவரைப் பார்!

பட்டண வாழ்வை விரும்பும் நண்பா, தேங்காய்ப்
பட்டண அழகில் மகிழ வருவாய்.
கட்டணம் எதுவும் கொடுக்க வேண்டாம், இங்கே
காணும் படைப்பில் கடவுளைக் காண்பாய்!
-கெர்சோம் செல்லையா.
தேங்காய்பட்டணம் கடற்கரை
Photo: தேங்காய்பட்டணம் கடற்கரை
 

அருட்செய்தி

கேட்டு மகிழ்வீர் நற்செய்தி;
கிறித்து வழங்கும் அருட் செய்தி!

நல்வாழ்த்து:
காது உள்ளவர் கேட்பார் என்றீர்;
காதைப் பெற்றுக் கேட்கின்றோம்.

வாது எல்லாம் நீங்கச் செய்வீர்;
வாழ்த்தி உம்மைத் தொழுகின்றோம்.

தீது நாளில் உந்தன் வீட்டில்
பாதுகாப்பீர், புகழ்கின்றோம்.

ஏது மில்லா இந்த வாழ்வை
இனிமையாக்கும், வாழ்கின்றோம்!

நல்வாக்கு:மத்தேயு 26:14-16.
காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்:

“பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘ இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ‘ என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.”

நல்வாழ்வு:

முப்பது வெள்ளிக் காசிற்காகக்
முடிச்சில் விழுந்தான் யூதாசு.

அப்போதிருந்தது போன்று இன்றும்
அழிக்கப் பார்க்கிறான் பிசாசு.

தப்பாய்ச் செல்வம் சேர்க்க விரும்பின்
தாவி ஓடுமே நம் காசு.

எப்போதும் நாம் மறக்க வேண்டாம்;
இயேசு போதுமே, இவை தூசு!

ஆமென்.

திருவள்ளுவர்

அன்று எழுதிச் சென்றதால் நீர் திருவள்ளுவர்.
இன்று எழுதித் தந்திருந்தால் உமைத் தள்ளுவர்!
என்று சொல்லும் அளவில் இங்கு இன வெறி.
நன்று, நமது நாடும் தேடிடாதா நன்னெறி?
– கெர்சோம் செல்லையா.
Photo: திருவள்ளுவர்
 

நல்ல செய்தி

அறிவைத் தருவது நற்செய்தி;

அதன்படி நடப்பின் உயிர்மீட்சி!

நல்வாழ்த்து:

இல்லாமை நீக்கிட இறைவா வாரும்.
எளியனின் நெஞ்சில் நேர்மை தாரும்.
பொல்லாத உலகின் பொய்மை போக்கும்;
போற்றிப் புகழ்வேன், தூய்மை ஆக்கும்!

நல்வாக்கு: மத்தேயு 26:6-9.
பெண் ஒருவர் நறுமணத் தைலம் ஊற்றுதல்:

“இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, ‘ இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே ‘ என்றார்கள்.

நல்வாழ்வு:
இறைவனுக்குரியதை இறைவனுக்கும்,
வறியருக்குரியதை வறியருக்கும்,
குறையின்றிக் கொடுத்தல் அறமாகும்;
நெறிமுறை தெரிதல் அறிவாகும்!
ஆமென்.